நடுங்க வைத்த நாங்குநேரி சம்பவம்.. பள்ளி மாணவர் வெட்டப்பட்ட வழக்கில் மேலும் ஒரு சிறுவன் கைது
நெல்லை: நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவரையும் அவரது தங்கையையும் சக மாணவர்கள் அரிவாளால் வெட்டிய வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதன் மூலம் இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் உள்ள பெருந்தெரு பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மனைவி அம்பிகா. இந்த தம்பதிக்கு சின்னத்துரை (வயது 17) என்ற மகனும், சந்திரா செல்வி (14) என்ற மகளும் உள்ளனர் சின்னத்துரை வள்ளியூரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 12-ம் வகுப்பும், சந்திரா செல்வி 9-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பாக சின்னத்துரையும் சந்திரா செல்வியும் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுவிட்டு மாலையில் வீட்டுக்கு வந்தனர்.

அன்றைய தினம் இரவு 10 மணியளவில் திடீரென அவர்களது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், அவர்களை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி சென்றனர். இந்த சம்பவத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்களது தாத்தா கிருஷ்ணன் (59) மயங்கி விழுந்து மாரடைப்பால் உயிரிழந்தார். அரிவாளால் வெட்டியதால் காயம் அடைந்த
சின்னத்துரை, சந்திரா செல்வி ஆகியோர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சின்னத்துரையை அவருடன் பயிலும் சில மாணவர்கள் சாதி ரீதியாக தொல்லை பாகுபாடு காட்டி துன்புறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த சின்னத்துரை பள்ளி செல்ல மறுத்து வீட்டில் இருந்துள்ளார். இதுபற்றி சின்னத்துரை தனது தாயிடம் கூறியுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளனர்.
இதையடுத்து பள்ளி நிர்வாகம் சின்னத்துரையை துன்புறுத்திய மாணவர்களை எச்சரித்துள்ளது. இந்நிலையில் தான் சின்னத்துரையை பழிவாங்க மாணவர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி சின்னதுரையின் வீட்டுக்குள் நுழைந்த மாணவர்கள் அவரை அரிவாளால் உடலில் பல இடங்களில் வெட்டியுள்ளனர். தடுக்க சென்ற அவரது தங்கையையும் அந்த கும்பல் வெட்டி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியது.

இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக நாங்குநேரி போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். நெஞ்சை பதறவைக்கும் இந்த சம்பவம் தொடர்பாக 6 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களை சிறார் கூர்நோக்கு இல்லத்திற்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், பள்ளி மாணவரையும் அவரது தங்கையையும் வெட்டிய வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். நம்பி நகரை சேர்ந்த சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
நாங்குநேரியில் மாணவனை சாதி ரீதியாக பார்த்து மாணவர்களே வெட்டிய சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலர் கைது செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications