For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புத்தாண்டு சரித்திரம் படைக்கும் ஆண்டாக அமையட்டும் - வைகோ, வீரமணி, வேல்முருகன் வாழ்த்து

Google Oneindia Tamil News

சென்னை: புத்தாண்டு சரித்திரம் படைக்கும் ஆண்டாக அமையட்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோர் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர் .

சூழும் சோதனைகளை வெல்ல சூளுரைப்போம்...

இது தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

ஆதி அந்தம் இல்லாத கால வெள்ளத்தில் எழுந்து தணியும் அலையின் தோற்றமாக ஆங்கிலப் புத்தாண்டு வழக்கம்போல் மலர்கிறது. தாய்த் தமிழகத்தின் உயிர்வாழ்வதாரங்களையும், இலங்கைத் தீவில் பூர்வீக தமிழர் தாயகத்தையும் நாசப்படுத்தவும், அழிக்கவும் அசுர பலத்தோடு இந்தியாவின் மைய வல்லாண்மை அரசும், சிங்களப் பேரினவாத அரசும் மூர்க்கத்தனமாக முனைந்து நிற்கின்றன.

New year greetings from Vaiko, veeramani, Velmurugan

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக தஞ்சைத் தரணியும், தமிழ்நாட்டின் பல பகுதிகளும் சட்டபூர்வமான உரிமையுடன் அனுபவித்து வரும் காவிரி தண்ணீர் தமிழகத்திற்கு அடியோடு கிடைக்காமல் செய்ய கர்நாடக அரசும் அதற்கு பக்கத் துணையாக வஞ்சகம் செய்யும் மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசும் வரிந்துகட்டிக்கொண்டு திட்டம் தீட்டிச் செயல்படுகின்றன.

தஞ்சை மாவட்டத்தையும், சிவகங்கை மாவட்டத்தையும் நிர்மூலமாக்க முனைகின்ற மீத்தேன் எரிவாயுத் திட்டம் ஒருபுறத்தில், கொங்கு மண்டலத்திற்கு கேடு செய்ய பாம்பாற்றில் அணை கட்ட முனைந்துள்ள கேரள அரசின் அநீதி ஒருபக்கம். வளரும் தலைமுறையை கலாச்சார நரக படுகொலையில் தள்ளிடும் விதத்தில் தீங்கு செய்யும் கொடிய மது அரக்கன் இன்னொரு புறத்தில். அபாயகரமான இந்தத் தீமைகளை எதிர்த்துப் போராடி முறியடிக்க அரசியல் கட்சி, மதம், சாதி எல்லைகளைக் கடந்து தமிழக மக்கள் இளைய தலைமுறை, குறிப்பாக மாணவர் சமுதாயம் நெஞ்சில் உறுதிகொண்டு சூளுரைக்கும் நாளாக புத்தாண்டைக் கொண்டாடுவோம்' என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

சரித்திரம் படைக்கும் ஆண்டாக அமையட்டும்!

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வெளியிட்டுள்ள புத்தாண்டு செய்தியில், ‘நகர்ந்த ஆண்டு (2014) நாட்டில் மதவெறிக்கு கதவு திறந்து, மனிதநேயத் திற்கு அறைகூவல் விடுத்து, பல வேதனை நிகழ்வுகளை மனித குலத்துக்குத் தந்த ஆண்டு.

வரும் புத்தாண்டு (2015) அவைகளை நீக்கி, ‘அனைவருக்கும் அனைத்தும்' என்ற அமைதி கொழிக்கும் சமத்துவ ஆண்டாகப் பொலிந்து சரித்திரம் படைக்கும் ஆண்டாக அமையட்டும்.!

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழர் வாழ்வுரிமைகளை வென்றிட உறுதியேற்போம்!

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது :-

2014ஆம் ஆண்டு நிறைவடைந்து 2015ஆம் ஆண்டு உதயமாகிறது. இந்த புதிய ஆண்டில் அனைத்து தமிழ் மக்களுக்கும் என் நெஞ்சார்ந்த அன்பு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகத் தமிழர் இனம் ஆண்டாண்டு காலமாக தம்முடைய உரிமைக்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறது. தமிழினம் இன்னமும் தமக்கு உரித்தான வாழ்வுரிமையையும் சுதந்திரத்தையும் முற்று முழுதாக மீட்டெடுத்து நிம்மதிப் பெருமூச்சு விட்டுவிடவில்லை.

உதயமாகும் 2015ஆம் ஆண்டிலும் நமக்கான போராட்டங்களும் போர்க்களங்களும் காத்துக் கிடக்கின்றன.. இந்த புதிய ஆண்டில் தமிழினம் எதிர்கொண்டிருக்கும் அனைத்து வாழ்வுரிமைப் பிரச்சனைகளிலும் முழுமையாக வெற்றி காண அயராது போராடுவோம் என்பதையே இந்த புத்தாண்டு நாள் உறுதிமொழியாகக் கொள்வோம்.

தமிழகத்தின் உரிமை சார்ந்த அனைத்துப் போராட்டங்களிலும் ஜாதி, மத, கட்சி மாச்சரிய எல்லைகளைக் கடந்து ஓரணியில் தமிழராய் அணிதிரள்வோம் எனவும் உறுதி கொள்வோம்.

தமிழீழத்தில் சிங்களப் பேரினவாதத்தின் ஒடுக்குமுறையில் இருந்து ஈழத் தமிழர்கள் முழுமையாக விடுதலை பெறுவதற்கான அரசியல் நகர்வுகளை சர்வதேச அரங்கில் முனைப்புடன் தொடர்வோம் என்றும் இந்த புதிய ஆண்டில் உறுதி ஏற்போம்.

தமிழர் வாழ்வு உரிமைகள் மீட்கப்பட்டு ஏற்றமும் மகிழ்ச்சியும் நிறைந்ததாக திகழ வேண்டும் என இந்தப் புதிய ஆண்டில் என் அன்புநல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

English summary
The polical leaders like Vaiko, Veerami, Velmurugan have greeted new year wishes to the people of Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X