திடீர் ஆய்வின்போது டென்ஷனான முதல்வர் ஸ்டாலின்.. சீட்டில் இல்லாத அலுவலரின் சீட்டை கிழித்து அதிரடி!
ராணிப்பேட்டை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டபோது பணியில் இல்லாத குழந்தைகள் நல மைய கண்காணிப்பாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video
ராணிப்பேட்டை அருகே அரசு குழந்தைகள் நல மையத்தில் முதல்வர் ஸ்டாலின் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது, குழந்தைகள் நல மைய கண்காணிப்பாளர் பணியில் இல்லாததால் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், குழந்தைகள் நல மையத்தின் கண்காணிப்பாளரை சஸ்பெண்ட் செய்து சமூக நலத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

3 மாவட்ட சுற்றுப் பயணம்
திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். நேற்று திருப்பத்தூரில் நடைபெற்ற அரசு விழாவில், திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார். மேலும், 129 கோடி மதிப்பில் முடிவடைந்துள்ள 28 நலத்திட்ட பணிகளை திறந்து வைத்தார். மேலும் செல்லும் வழியில் பொதுமக்களை சந்தித்து அவர்களின் கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டார்.

ராணிப்பேட்டையில்
அதைத் தொடர்ந்து இன்று ராணிப்பேட்டையில் ரூ.118.40 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய மாவட்ட ஆட்சியர் அலுவகத்தை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர், ராணிப்பேட்டையில் உள்ள ஆண்கள் அரசு நடுநிலைப்பள்ளிக்குக்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு மாணவர்களோடு கலந்துரையாடினார்.

திடீர் ஆய்வு
பின்னர் ராணிப்பேட்டை அருகே காரை கூட்ரோட்டில் உள்ள அரசு குழந்தைகள் நல காப்பகத்தில் முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கிருந்த மாணவர்களிடம் பாடங்கள் நடத்தப்படும் முறை குறித்தும், வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் கேட்டறிந்தார். அப்போது அங்கு குழந்தைகள் நல விடுதி கண்காணிப்பாளர் பணியில் இல்லாமல் இருந்துள்ளார்.

டென்ஷன் ஆன முதல்வர் ஸ்டாலின்
பணி நேரத்தில் விடுதியில் இல்லாத அதிகாரி குறித்து விசாரித்த முதல்வர் ஸ்டாலின் அவர் பணி நேரத்தில் அங்கு இல்லாததை அறிந்து டென்ஷனாகியுள்ளார். தொடர்ந்து, அந்த குழந்தைகள் நல மையத்தில் பணியாற்றும் மற்ற பணியாளர்கள் அனைவரும் இருக்கின்றனரா எனக் கேட்டுள்ளார். மேலும், ஆய்வின் போது பணியில் இல்லாத ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார்.

பதறும் அதிகாரிகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் குழந்தைகள் நல மையத்தின் கண்காணிப்பாளரை துறைரீதியிலான விசாரணைக்குப் பிறகு சஸ்பெண்ட் செய்து சமூக நலத்துறை அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது. திடீர் ஆய்வின்போது பணியில் இல்லாத அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதால் இன்று ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதுமுள்ள அதிகாரிகள் பதற்றமடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications