For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வட எல்லையில் உருவாகும் இன்னுமோர் எதிரி!

By R Mani
Google Oneindia Tamil News

-ஆர்.மணி

இந்தியாவின் மற்றோர் அண்டை நாடான நேபாளமும் இந்தியாவுக்கு எதிரி நாடாக மாறிக் கொண்டிருக்கிறது.

கடந்த பதினைந்து நாட்களாக இந்தியாவிலிருந்து பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்றிக் கொண்டு நேபாளத்திற்குள் செல்ல முடியாமல் எல்லையோரத்தில் நின்று கொண்டிருக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிரக்குகள் இதற்கு சாட்சி!

One more enemy at Norther Frontier!

கடந்த செப்டம்பர் 20 ம் தேதி நேபாளம் தனது புதிய அரசியல் சாசனத்தை ஏற்றுக் கொண்டது. சுமார் ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக, கடுமையான பிரயத்தனத்திற்குப் பிறகு நேபாளம் தனது புதிய அரசியல் சாசனத்தை உருவாக்கி அதனை முறைப்படி ஏற்றுக் கொண்டு நடைமுறைக்கும் கொண்டு வந்துவிட்டது. இந்த அரசியல் சாசனத்துக்கு நேபாளத்தில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாதேசி இனத்தவர்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். தங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இந்த புதிய அரசியல் சாசனத்தில் இல்லையென்பது அவர்களது வாதம். மாதேசி இனத்தவர்கள் புதிய அரசியல் சாசனத்துக்கு எதிராக தொடர்ந்து ஆர்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

'புதிய அரசியல் சாசனத்தில் மாதேசி இனத்தவர்களுக்குச் சாதகமாக ஏதுமில்லாதது மட்டுமல்ல, தாம் சொல்லிய பல அம்சங்கள் அதில் இடம்பெறாததும் நரேந்திர மோடி அரசை கடுமையாக கோபப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக திட்டமிட்டு நேபாளத்தில் இந்தியா பொருளாதார தடையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது' என்று நேபாளத்தின் அனைத்து பிரதான கட்சிகளும் குற்றஞ்சாட்டுகின்றன.

‘நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. அத்தியாவசிய பணிகளுக்கான பெட்ரோல் மற்றும் டீசல் தான் கை வசம் உள்ளது. இதுவும் அடுத்த பத்து நாட்களில் தீர்ந்து போய் விடும்' என்று கூறுகிறார் நேபாள அரசின் எண்ணெய் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தீபக் பரால். தங்களது எல்லையோர அதிகாரிகளிடம் எந்தக் காரணத்தைக் கொண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் டாங்கர் லாரிகளை நேபாளத்திற்குள் அனுமதிக்க வேண்டாமென்று இந்தியா அறிவுறுத்தியுள்ளது என்று நேபாளத்தின் அமைச்சர்கள் குமுறுகின்றனர். ‘இது நன்கு திட்டமிட்ட பொருளாதார முற்றுகை. தங்களது யோசனைகள் புதிய அரசியல் சாசனத்தில் ஏற்றுக் கொள்ளப் படாததும், அவர்கள் விரும்பியது போன்று அரசியல் சாசனம் அமையாததும் தான் இந்தியாவின் இந்தச் செய்கைக்கு காரணம். நன்கு திட்டமிட்டே நேபாளத்தை இந்தியா தண்டித்துக் கொண்டிருக்கிறது. இதனால் நேபாளத்தில் இந்தியாவுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்துக் கொண்டிருக்கின்றன,' என்கிறார் நேபாளத்தின் தொழிற்துறை அமைச்சர் மஹேஷ் பஸ்நட்.

ஆனால் இந்தியாவோ இதனை மறுக்கிறது. ‘மாதேசிகளின் போராட்டம்தான் இந்திய டாங்கர் லாரிகள் நேபாளத்துக்குள் போக முடியாமல் நின்று கொண்டிருப்பதற்குக் காரணம். வேண்டுமென்று இந்திய டாங்கர் லாரிகள் நேபாள எல்லைக்குள் போகாமல் நின்று கொண்டிருக்கவில்லை' என்கிறார் இந்திய வெளியுறவுத்துறையின் உயரிதிகாரி ஒருவர்.

'ஆனால் எல்லோருக்கும் தெரியும் இது பச்சைப் பொய்' என்கிறது நேபாளம். ‘மாதேசி இனத்தவர்கள் நடத்தும் முற்றுகை ஆர்பாட்டங்கள் மற்றும் தர்ணாக்கள் ஆளில்லாத பகுதிகளில் தான் நடக்கின்றன. இவர்களையும் அந்தப் பகுதிளிலிருந்து அகற்ற இந்திய எல்லையோர காவற் படையின் உதவி தேவைப்படுகிறது. மற்றபடி டாங்கர் லாரிகள் நேபாளத்துக்குள் வருவதற்கு எந்தத் தடைகளும் இல்லை' என்கிறார் மஹேஷ் பஸ்நட். அத்தியாவசிய பொருட்களுக்கும் மக்கள் அல்லாடும் நிலை வந்த விட்டதாக மற்றோர் அமைச்சர் கூறுகிறார். ‘சமையல் எரிவாயு, மருந்துப் பொருட்கள் என்று அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவில்லை. இந்த நிலைமை தொடர்ந்தால் பெரியதோர் வாழ்க்கைச் சிக்கலை நாங்கள் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதில் ஐயமில்லை' என்கிறார் நேபாளத்தின் நிதியமைச்சர் ராம் ஷரண் மஹத்.

இது எல்லாவற்றையும் விட முக்கியமான குற்றச்சாட்டாக இந்தியா மீது நேபாளத்தில் உள்ள கொள்கை வகுப்பாளர்களும், விவரமறிந்த வர்களும் வைப்பது, 'புதிய அரசியல் சாசனம் நேபாளத்தை ஒரு இந்து நாடாக அறிவிக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கை மறுக்கப்பட்டுவிட்டது என்பதுதான்,' என்கின்றனர்.

One more enemy at Norther Frontier!

புதிய அரசியல் சாசனம் உருவாகி வந்த ஏழு ஆண்டுகாலத்தில் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகாலம் இந்தியாவில் மன்மோஹன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதான் பதவியில் இருந்தது. அப்போது இந்தியாவிடமிருந்து எந்த அழுத்தமும் நேபாளத்துக்குக் கொடுக்கப் படவில்லை. ஆனால் மே 2014 ல் நரேந்திர மோடியின் பாஜக அரசு அமைந்தவுடனேயே நிலைமை மாறத் துவங்கியது.

பிரதமரானவுடனேயே மோடி முதலில் பயணம் மேற்கொண்ட நாடுகளில் நேபாளமும் ஒன்று. தனது நேபாளப் பயணத்தின் போது, இதுவரையில் எந்த இந்திய பிரதமரும் கற்பனையும் செய்து பார்த்திராத ஒரு காரியத்தை மோடி செய்ய முயற்சித்தார். அது மாதேசி இனத்தவர்கள் அதிகமாக வாழும் மேற்கு நேபாளத்தில் ஒரு பொதுக் கூட்டத்தில் பேச ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி. ஒரு இந்திய பிரதமர் மற்றோர் நாட்டில் ஒரு பொதுக் கூட்டத்தில் அதுவும் சர்ச்சைக்குரிய கோரிக்கைகளை எழுப்பிக் கொண்டிருக்கும் ஒரு பிரிவினரிடையே பேசுவதென்பது அசாதாரணமானதாகவே பார்க்கப் பட்டது. மாதேசி இனத்தவர்கள் இந்தியாவின் பிஹார் மாநிலத்துடன் பூர்வீக தொடர்புகளை கொண்டவர்களென்பதும், இந்தப் பொதுக் கூட்டம் நடக்க விருந்த இடம் பீஹாரை ஒட்டிய இடமென்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் கடைசி நேரத்தில் இந்தப் பொதுக் கூட்டத்திற்கு நேபாள அரசு அனுமதி மறுத்து கூட்டத்தை ரத்து செய்து விட்டது. இது நரேந்திர மோடியை ஆத்திரமூட்டி விட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் நேபாள பூகம்பத்தின் போது இந்தியா செய்தவை அளப்பறிய உதவிகள்தான் என்று நேபாள மக்கள் கூறுகின்றனர். நேபாளத்தின் மறுசீரமைப்புக்காக 6,000 கோடி ரூபாயை இந்தியா கொடுப்பதற்கு ஒப்புக் கொண்டிருக்கிறது.

நேபாளத்துடன் பூகோளரீதியில், தரை வழிப் போக்குவரத்தில் நெருக்கமாக இருக்கும் நாடு இந்தியாதான். தனது அன்றாடத் தேவைகளுக்கான பல அத்தியாவசிய பொருட்களுக்கு இந்திய டாங்கர்களையும், லாரிகளையும் தான் நேபாளம் நம்பியுள்ளது. இது தற்போதய நெருக்கடியில் சீனா வின் பக்கம் நேபாளத்தை உந்தித் தள்ளிக் கொண்டிருக்கிறது. சீனாவுடன் நேபாளத்தை இணைக்கும் ஏழு பெரிய மற்றும் சிறிய பாதைகள் உள்ளன. இவற்றில் நேபாளத் தலைநகர் காட்மண்டுவை திபேத்தின் காசா என்கின்ற பகுதியுடன் இணைக்கும் தாதோபாணி துறைமுகம் ஒரு வறண்ட துறைமுகமாக இருக்கிறது. தாதோபாணி துறைமுகத்தை மீண்டும் திறப்பதற்கான வேலைகளில் மிக மும்முரமாக சீனாவும், நேபாளமும் இறங்கியுள்ளன. இதில் பெட்ரோலியப் பொருட்களை கொண்டு வர முடியுமா என்கின்ற மிகப் பெரிய ஆய்வில் இரண்டு நாடுகளும் இறங்கியுள்ளன.

இதுதான் இதில் முக்கியமாக கவனிக்கு வேண்டிய விஷயம். அதாவது தனது அன்றாட வாழ்வின் அத்தியாவசியத் தேவைகளுக்கே இந்தியாவை நம்பியிருந்த நேபாளம் இன்று நிர்ப்பந்ததின் காரணமாக சீனா பக்கம் சாயத் துவங்கியிருக்கிறது. இன்று நேபாளத்தில் இந்தியாவுக்கு எதிரான உணர்வு கொழுந்து விட்டெரிந்து கொண்டிருக்கிறது. நேபாளத்தின் ஊடகங்களை ஊன்றி கவனித்தால் இது தெளிவாக தெரிகிறது. நேபாள செய்தித் தாள்களை நாம் பார்த்தால் - இது இணையத்தின் புண்ணியத்தால் யாருக்கும் கிடைக்கும் வாய்ப்பு - எந்தளவுக்கு சராசரி நேபாளி இந்தியா மீது வெறுப்பு கொண்டிருக்கிறான் என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

நேபாளத்தின் இரண்டு முக்கியமான பண்டிகைகள் நெருங்கி வந்து கொண்டிருக்கின்றன. பாதா தஷேன் மற்றும் திஹார் என்ற அந்த இரண்டு பண்டிகைகள், நாம் கொண்டாடும் தசரா மற்றும் தீபாவளி பண்டிகைகளுக்கு இணையானவை. இந்தப் பண்டிகை காலத்துக்குள்ளாவது நிலைமை சீரடைய வேண்டுமென்றுதான் நேபாளம் விரும்புகிறது.

ஆனால் நிலைமையைச் சீரமைக்க இந்தியா எந்த அவசரமும் காட்டாதது சராசரி நேபாளியின் கோபத்தை மேலும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் இருக்கும் லட்சக்கணக்கான நேப்பாளிகள் இந்த இரண்டு பண்டிகைகளையும் கொண்டாடுவதற்காக தங்களது தாய் நாட்டுக்குத் திரும்பும் காலம் இது. இவ்வாறு தாய் நாடு வரும் இவர்கள் ஒரு மாத காலம் வரையில் நேபாளத்தில் தங்கியிருப்பார்கள். இந்த முறை இவர்கள் எவ்வாறு தங்களுடைய விடுமுறையை கழிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. இந்தியாவுக்கான நேபாளத் தூதர் தீப் குமார் உபாத்தியாய் பல முறை இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து முறையான கோரிக்கைகளை வைத்தும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

காங்கிரஸ் கட்சி அக்டோபர் 5 ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் நேபாள விவகாரத்தில் பிரதமர் மோடி உடனடியாக தலையிட வேண்டும் என்றும், இல்லையென்றால் நிலைமை கையை மீறி போய் விடுமென்றும் எச்சரித்துள்ளது.
‘அபாயகரமான எல்லைக்கு நேபாளத்தை தள்ளி, அந்நாட்டை சீனா வின் பக்கம் முற்றிலுமாக தள்ளி விட வேண்டாம்' என்று மோடிக்கு காங்கிரஸ் கோரிக்கை விடுத்திருக்கிறது.

இந்தியா கூறும் ஏழு திருத்தங்களை - அவை என்னென்ன திருத்தங்கள் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப் படவில்லை - நேபாளம் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றே இந்தியா நிர்ப்பந்திப்பதாக நேபாள ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மற்றோர் விஷயம் மாதேசி இனத்தவர்கள் பீஹாரில் அதிகம் வசிக்கின்றனர். தற்போது பீஹாரில் தேர்தல்கள் நடக்கவிருப்பதால், தனது குறுகிய அரசியல் லாபத்துக்காகவும் பாஜக நேபாள நாட்டின் விஷயத்தில் அளவுக்கதிகமாகவே தனது மூக்கை நுழைத்துக் கொண்டிருப்பதாக பார்க்கப்படுகிறது. இந்தியாவின் முக்கியமான பதின்மூன்று தொலைக் காட்சிகளுக்கு நேபாளத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய திரைப் படங்களுக்கும் தடை விதிக்கப் பட்டுள்ளது. நேபாளத்தின் முன்னணி பத்திரிகைகள் அனைத்தும் இந்திய எதிர்ப்புக் கட்டுரைகளையும், தலையங்கங்களையும் அதிகளவில் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன.

தன்னுடையை மற்றோர் அண்டை நாட்டை இந்தியா பகைத்துக் கொண்டு நிற்பது கண்கூடாகவே தெரிகிறது. ஒரு பக்கம் பாகிஸ்தானுடனான உறவு மோசமடைந்து வருகிறது. சீனாவுடனான உறவிலும் பெரிய ஏறுமுகம் இல்லை. இலங்கை விவகாரம் நீரு பூத்த நெருப்புதான் எப்போதும். குட்டி நாடான நேபாளத்துடனும் இந்தியா முரண்டு பிடித்து நிற்பது மேலும் சிக்கலை உண்டாக்குமென்றே பார்க்கப்படுகிறது.

மற்றோர் முக்கியமான விஷயம், சமீப காலமாகவே சீனாவின் முதலீடுகள் நேபாளத்தில் தொடர்ந்து அதிகரித்து வருவது. இலங்கையில் நடப்பது போலத்தான் இதுவும். இந்த நிலைமை தொடருவது இந்தியாவின் பாதுகாப்பை மேலும் மேலும் கேள்விக் குறியாக்கும்.

‘தனது பெரிய அண்ணன் மனப்பான்மையை இந்தியா கைவிட வேண்டும்' என்று இந்தியாவின் முன்னணி ஆங்கில நாளிதழ் ‘பிசினஸ் ஸ்டாண்டர்ட்' வெளிப்படையாகவே அக்டோபர் 7 ம் தேதி தலையங்கம் தீட்டியிருக்கிறது. நேபாளம் சிறிய நாடாக இருக்கலாம் .... ஆனால் அந்த சிறிய நாடுதான் இன்று நரேந்திர மோடி க்கு மிகப் பெரியதோர் ராஜதந்திர சவாலை விடுத்துக் கொண்டிருக்கிறது. உலகின் பலப் பல நாடுகளுக்கும் தொடர்ந்து பயணம் மேற்கொண்டு வருகிறார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. ஆனால் இந்தியாவின் அருகாமையில் இருக்கும் ஒரு குட்டி நாடு நேபாளம், தான் ஒரு பெரிய நாட்டால் அவமதிக்கப் படுகிறோம் என்று உணருவதும், இந்திய எதிர்ப்பு உணர்வு அந்தக் குட்டி நாட்டில் பொங்கியெழுவதும் இந்தியாவுக்கும், மோடிக்கும் நல்லதல்ல. ஒரு நட்பு நாட்டின் உள்விவகாரங்களில் இந்தியா தலையிடுவதென்பது நல்ல ராஜதந்திரமாகாது என்று அந்தத் தலையங்கம் கூறுகிறது. இந்தியாவின் முன்னணி ஆங்கில நாளேடொன்று இந்திய வெளியுறவுக் கொள்கை பற்றிய இந்தக் கருத்தை வெளியிட்டிருப்பது சர்வதேச பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

விரைவில் நிலைமை சீரடைய மோடி ஏதாவது செய்யாவிட்டால், நாம் நிரந்தரமாக நேபாளத்தை சீனா வின் பக்கம் தள்ளி விட்டு விடுவோம், இன்றைய சர்வதேச புவி சார் அரசியலில் இது இந்தியாவுக்கு பார, தூரமான விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்பது மட்டும் உறுதி.

பிரதமர் மோடி கவனிப்பாரா?

English summary
Columnist Mani says that there is one more enemy is forming at the northern frontier of India due to our foreign policy. It is none other than our friendly state Nepal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X