நம்பி நம்பி ஒன்றுமில்லை என்றபின்பு..! வந்ததே கோபம்! சூசகமாக பாஜகவை பொளந்து கட்டிய ஓபிஎஸ்!
தஞ்சை: தஞ்சையில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் இல்ல மண விழாவில் பங்கேற்று பேசிய ஓ.பன்னீர்செல்வம், முதல்முறையாக பாஜக மீதான தனது அட்டாக்கை சூசகமாக தொடங்கியுள்ளார்.
பொறுத்தது போதும் பொங்கி எழு என்பதற்கேற்ப ஓ.பன்னீர்செல்வத்தின் இன்றைய பேச்சு அமைந்திருந்தது. தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைப்பதற்கான பிள்ளையார்சுழி தஞ்சையில் போடப்பட்டிருப்பதாக கூறிய ஓ.பன்னீர்செல்வம் டிடிவி டினகரனை வைத்துக்கொண்டே அவரை தளபதி எனக் கூறி புகழாரம் சூட்டினார்.

ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட அனைவரும் ஒன்றிணைந்து அரசியல் களத்தில் களமாடினால் நம்மை எதிர்த்து நிற்கும் தகுதி தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு மட்டுமல்ல இந்தியாவில் உள்ள எந்த அரசியல் கட்சிகளுக்கும் அந்த தகுதி இல்லை என ஆவேசம் காட்டினார்.
இதன் மூலம் தங்களை எதிர்க்கும் தகுதி பாஜகவுக்கும் கிடையாது என்பதை தான் அவர் இப்படி சூசகமாக தெரிவித்துள்ளார். ''நம்பி நம்பி வெம்பி வெம்பி ஒன்றுமில்லை என்றபின்பு உறவு கிடக்கு போடி'' என்ற தர்மதுரை திரைப்படத்தில் வரும் பாடல் வரிகளுக்கேற்ப பாஜக மீதான தனது அதிருப்தியை இப்படி வெளிக்காட்டினார் ஓ.பி.எஸ்.

அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக மேலிடம் தன்னை கைவிட்டுவிட்டதால் ஓ.பன்னீர்செல்வம் கடும் அதிருப்தியில் இருப்பது இதன் மூலம் தெரிய வருகிறது. வைத்திலிங்கம் வீட்டு திருமண விழாவில் ஓ.பன்னீர்செல்வத்தின் மூத்த மகன் ரவீந்தரநாத்தும் கலந்துகொண்டார்.
இதனிடையே ஓ.பன்னீர்செல்வமா இப்படி பேசுவது என மேடையில் இருந்தவர்களும், கீழே அமர்ந்திருந்தவர்களும் அசந்து போய்விட்டனர். அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதே தொண்டர்கள் உட்பட பொதுமக்களின் விருப்பமும் கூட என ஓ.பன்னீர்செல்வம் பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications