For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிலைகுலைந்த ஆட்சி - நிரந்தர வீழ்ச்சி... ஜெயா தலைமையில் 100 நாள் வேதனைகள்.. பட்டியலிடும் கருணாநிதி

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து 2வது முறையாக முதலமைச்சர் ஜெயலலிதா பதவி ஏற்று நேற்றோடு 100 நாட்கள் நிறைவடைந்தன. அதனை தமிழக அரசு அனைத்து பத்திரிகைகளிலும் விளம்பரம் செய்து கொண்டாடியது. இதனை கிண்டல் செய்யும் வகையில், ஜெயா தலைமையில் 100 நாள் வேதனைகள் என்ற தலைப்பில் திமுக தலைவர் மு.கருணாநிதி தனது பேஸ்புக்கில் பட்டியலிட்டுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதியின் அதிகார பூர்வ பேஸ்புக் தளத்தில் ஜெயாவின் 100 நாள் வேதனைகள் என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள பட்டியல்:

Painful 100 days of Jaya says Karunanidhi

• பிடிக்காத மற்றும் ஒத்துழைக்காத அதிகாரிகள் தொடர்ந்து பழி வாங்கப்படுகின்றனர்.

• தலைமைச் செயலகத்திலே பல துறைகளின் செயலாளர் பணி இடங்கள் பல மாதங்களாக
நிரப்பப்படாத நிலை.

• அ.தி.மு.க. ஆட்சியில் தொடர்ந்து விவசாயிகள் தற்கொலை.

• காவிரியில் குறுக்கே அணை கட்டியே தீருவோம் என்ற கர்நாடக அரசின் பிடிவாதத்திற்கு பிரதமருக்கு கடிதம் எழுதிவிட்டு கண்களை மூடிக் கொள்ளுதல்

• விவசாயிகளுக்கு கண்துடைப்பான இரண்டு அறிவிப்புகள்.

• பேரவையில் காவல் துறை, வேளாண்மைத் துறை போன்றவைகளுக்கு இரண்டு நாட்கள் நடைபெறும் விவாதத்தை ஒரே நாளாகக் குறைத்து பேரவை விவாதங்களுக்கு வாய்ப்பூட்டு!

• ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு எதிர்க் கட்சித் தலைவரும் பேசுகின்ற நாளிலேயே முதல்வர் பதிலளிக்க வேண்டுமென்ற வழக்கத்தை மாற்றியது.

• எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பேச வாய்ப்பு தராத கொடுமை - கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெரித்தல்!

• தி.மு.கழக உறுப்பினர்களை ஒட்டுமொத்தமாக முறைப்படி எச்சரிக்காமலே ஒரு வார காலத்திற்கு சஸ்பென்ட் செய்தது. அவையில் இல்லாத கழக உறுப்பினர்களைக்கூட இடை நீக்கம் செய்தது. ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்ற நிலையில், எதிர்க்கட்சியை "சஸ்பென்ட்" செய்து, ஜனநாயகத்தைச் செல்லாத நாணயமாக்கியது!

• ஆளுங்கட்சி உறுப்பினர்கள், அமைச்சர்கள் பேசினால் அவைக் குறிப்பில் இடம்
பெறச் செய்வதும், அதற்கு எதிர்க்கட்சிகள் பதில் கூறினால், அதை அவைக்
குறிப்பிலிருந்து நீக்குவதும். சகிப்புத் தன்மைக்கு இடமளிக்க மறுத்தல்

• மாநிலங்களவையில் அ.தி.மு.க. உறுப்பினர் ஒருவர், தன்னை தமிழக முதல் அமைச்சர் தாக்கினார் என்றும், தன்னை எம்.பி. பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்யும்படி கட்டாயப் படுத்துவதாகப் பேசிய சாதனை. முதல் அமைச்சரின் பொறுமையின்மைக்குத் தேசிய விளம்பரம்!

• மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, அமைச்சர்
பதில் அளிப்பதற்கு முன்பாகவே, பேரவைத் தலைவரே அவையை ஒத்தி வைத்து விட்டுப் போகும் நிகழ்ச்சி.

• எந்த ஆட்சியிலும் இல்லாத அளவுக்கு இந்த ஆட்சியின் மீது தொடர்ந்து நீதிமன்றக் கண்டனங்கள்.

• இதுவரை நுழைவுத் தேர்வின்றி நடந்து வந்த மருத்துவப் படிப்புகளுக்கு இந்த ஆண்டு தேசிய நுழைவுத் தேர்வு - கிராமப்புற மாணவர்களுக்கும், பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கும் பெரும் பாதிப்பு.

• அருந்ததியர் இனத்தைச் சேர்ந்த காவல் துறை அதிகாரி விஷ்ணுப்ரியா தற்கொலை
செய்து கொண்டது பற்றிய விசாரணையில் கோணல்கள்.

• ஓடும் ரெயிலில் துளை போட்டுக் கொள்ளை - நெய்வேலியில் சுரங்கம் அமைத்துக் கொள்ளை - ஏ.டி.எம்.இல் பணம் போடச் சென்ற கார் கடத்திக் கொள்ளை - புதுப்புது வழிகளில் கொள்ளை நடத்திப் "புரட்சி".

• கல்லூரி வளாகத்திற்குள்ளேயே நுழைந்து மாணவி படுகொலை.

• கோவில்களுக்குள் நுழைந்து நகைகள், உண்டியல்கள் கொள்ளை.

• எதிர்க்கட்சியினர் இன்றி, பலத்த பாதுகாப்புடன் காவல் துறை மானியம் பேரவையில் நிறைவேற்றம்.

• 100 நாட்களில் ஒரு முறையேனும் செய்தியாளர்களைச் சந்தித்து உரையாடாத வேதனை.

• சிறுவாணியில் அணை கட்ட கேரளா அறிவிப்பு. அதற்கும் கடிதம் எழுதிச் சமாளிப்பு.

• எதிர்க்கட்சித் தலைவர் உட்பட சட்டமன்ற உறுப்பினர்களின் கார்களை சோதனையிடும் சாதனை.

• ஆட்சிக்கு வந்த நூறாவது நாளன்றுகூட, தூத்துக்குடியில் தேவாலயத்திற்குள் நுழைந்து பெண் ஆசிரியை ஒருவர் படுகொலை!

• வெள்ள நிவாரண நிதிக்காக மத்திய அரசு கொடுத்த 2000 கோடி ரூபாயில் 600 கோடி ரூபாயை மட்டுமே செலவழித்ததாக மத்திய அமைச்சர் பகிரங்கக் குற்றச்சாட்டு.

• நிதிப் பற்றாக்குறையின் அளவு 2.96 சதவிகிதம் - நிலுவையில் உள்ள கடன் 2,52,431 கோடி ரூபாய்.

• மெட்ரோ, மோனோ ரெயில் திட்டங்கள் பற்றிய குழப்பம்.

• சேலம் சமூக சேவகர் பியூஷ் மனுஷ் சிறையில் தாக்கப்பட்ட கொடுமை.

• அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தைச் சரியாகப் பராமரிக்காமல் நீதிமன்றத்தால் பல முறை எச்சரிக்கப்பட்ட சாதனை.

• காவிரிப் பிரச்சினை குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு வக்கீல் ஆஜராகாத அலட்சியம்.

• அமைச்சர்களுக்கு மிகவும் நெருக்கமான கரூர் அன்புநாதன் வீட்டில் நடைபெற்ற சோதனை.

• தமிழகக் காவல் துறையினர் பெறும் குறைந்த பட்ச ஊதியம்.

• சாலை விபத்தில் தமிழகம் முதலிடம்.

• இந்த ஆண்டும் உரிய காலத்தில் மேட்டூர் அணை திறக்கப்படாததால், குறுவை சாகுபடி ஐந்தாவது ஆண்டாகப் பாதிப்பு. காவிரியில் தண்ணீர் பெற்றுத் தர இயலாமையால், டெல்டா மாவட்டங்களில் முதல் முறையாகச் சம்பா சாகுபடி கேள்விக் குறி.

• மின் வாரியத்தில் தனியாரிடமிருந்து மின் கொள்முதல், நிலக்கரி இறக்குமதி
ஆகியவற்றில் தொடர்ந்து அடுக்கடுக்கான ஊழல்கள் - பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பு.

• தமிழகச் சட்டமன்றம், "அம்மா" மண்டபமாக மாறி வரும் அவலம் - அரசின் சாதாரண திட்டங்களைக்கூட 110வது விதியின் கீழ் முதலமைச்சரே படிக்கும் நிலை - அதை உடனே பேரவைத் தலைவர், அமைச்சர்கள், தோழமைக் கட்சியினர் பாராட்டிடும் செயல் - கேள்வி கேட்கும் ஆளுங்கட்சி, பதில் கூறும் அமைச்சர்கள் அனைவரும் முதல் அமைச்சருக்கு லாலி பாடுகின்ற பரிதாபம்! அமைச் சரவைக் கூட்டுப் பொறுப்பு கவலைக்கிடம்!

• ஆட்சி தொடங்கிய 100 நாட்களுக்குள்ளாகவே சட்டப்பேரவை நடந்து கொண்டிருக்கும் போதே அமைச்சர் நீக்கம் - துறைகள் மாற்றம்.

• அவை நடந்து கொண்டிருக்கும்போது, முக்கிய முடிவுகள் அவையின் கவனத்திற்குக் கொண்டுவரப்படாமல் செய்யப்படுவதில்லை. ஆனால் அமைச்சர் நீக்கம், புதிய அமைச்சர் நியமனம், துறைகள் மாற்றம் போன்ற முக்கிய முடிவுகளே அவைக்கு தெரியாமல் செய்யப்படும் கோமாளிக்கூத்து.

• புதிய அமைச்சரோ மூன்று கட்சிகளைத் தாண்டி வந்திருக்கிறார். அவருக்குத் தரப்பட்டுள்ள பள்ளிக் கல்வித் துறைக்கோ இதுவரை ஆறு அமைச்சர்கள் மாறி மாறி வந்திருக்கிறார்கள் என்றால், பள்ளிக் கல்வித் துறையின் நிர்வாகம் சீர் கெட்டு பாழ்பட்டு வருவதற்கு இதுவே தக்க சான்று.

• ஜூலை மாதத்தில் - ஒரே நாளில் பத்து படுகொலைகள்!

• கட்டுப்படுத்தப்படாத கூலிப் படையினர் கொட்டம்!

• மாநகராட்சி - நகராட்சித் தேர்தல்களில் குதிரை பேரத்திற்கு வழி வகுக்கும் மறைமுகத் தேர்தல்.

• அ.தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினரின் தந்தையார் வீட்டிலேயே கஞ்சா பறிமுதல்.

• பல மாதங்களாக துணை வேந்தரே இல்லாத பல்கலைக் கழகங்கள்.

• அ.தி.மு.க. பொறுப்பேற்ற நாளன்றே எதிர்க்கட்சித் தலைவருக்கு இடம்
அளித்ததில் குளறுபடி - சதி.

• காவிரி - பாலாறு - சிறுவாணிப் பிரச்சினைகளில் எல்லா எதிர்க்கட்சிகளும் கோரிக்கை விடுத்தும்,அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டத் தவறியது - நதி நீர் உரிமைகளை முறையாகப் பாதுகாத்திடத் தவறியது.

• மீனவர் பிரச்சினையில் பேச்சுவார்த்தைகளை, மத்திய அரசின் ஒத்துழைப்புடன், முன்னெடுத்துச் செல்லத் தவறியது.

• நெசவாளர்களின் நியாயமான கூலிப் பிரச்சினையைத் தீர்த்து வைக்கத் தவறியது.

• மாநில மக்களின் குடிநீர்ப் பிரச்சினையைக் கண்டும் காணாமல் காலத்தைப் போக்குவது.

• பழி தீர்த்துக் கொள்ளும் வகையில் பா.ம.க. வேட்பாளரைக் கைது செய்த பாரபட்சமான நடவடிக்கை.

• மத்திய பா.ஜ.க. அரசின் சமஸ்கிருத - இந்துத்துவா பிரச்சாரத்தை எதிர்க்காதது.

• புதிய கல்விக் கொள்கை குறித்து மௌனம் சாதிப்பது.

• அரசு ஊழியர்கள் சங்கப் பிரதிநிதிகளையோ, விவசாயிகள் சங்க - தொழிலாளர் சங்கப் பிரதிநிதிகளையோ ஒரு முறை கூட முதலமைச்சர் சந்தித்து அவர்களுடைய பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்கத் தவறியது.

• தலைமைச் செயலாளராக பணிபுரிந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி உட்பட பலர் சஸ்பென்ஷன்.

• தமிழக அரசின் பல்வேறு துறைகளில் ஆயிரக்கணக்கான காலி பணி இடங்கள். வனத்துறையில் 45 சதவிகிதம்; ஊரக வளர்ச்சித் துறையில் 40 சதவிகிதம்.

• புதிய தொழில் தொடங்க அனுமதி அளிப் பதற்கு கையூட்டுப் பெறுவதில், இந்தியாவிலேயே முதல் இடத்தில் உள்ள மாநிலம் தமிழ்நாடுதான் என்று நந்தன் நிலக்கேனி தலைமையிலான தேசிய பயன்பாட்டுப் பொருளாதார ஆராய்ச்சிக் குழு சான்றளித்தது.

• "இந்தியா டுடே" இதழ் தயாரித்த மாநிலங்களின் நிலைமை குறித்த தர வரிசைப் பட்டியலில் ஒட்டு மொத்த வளர்ச்சியில் இந்தியாவில் உள்ள 21 பெரிய மாநிலங்களில் 20ஆவது இடத்தைப் பிடித்தது.

• தனி நபர் கடன் சுமையில் தமிழகத்தை முதலிடம் பிடிக்க வைத்தது.

• தமிழகத்தின் நிதிப் பற்றாக்குறை தேசிய அளவில் முதலாவதாக இருக்கிறது. ("டைம்ஸ் ஆப் இந்தியா")

• "மாநிலப் போலீசாரின் விசாரணையில் எங்களுக்குத் திருப்தி இல்லை" - என்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் "சான்றிதழ்".

• சிறு, குறு விவசாயிகளின் கடன்கள் ரத்து செய்யப்பட்டதே தவிர, பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, அனைத்து விவசாயிகளின் கடன்கள் ரத்து செய்யப்படவில்லை.

• சென்னை நுங்கம்பாக்கம் புகை வண்டி நிலையத்தில் பட்டப்பகலில் சுவாதி என்ற பெண் படுகொலை.

• ஆசிரியை நந்தினி தள்ளி விடப்பட்டு கொலை.

• வேந்தர் மூவிஸ் நிறுவனத்தின் நிர்வாகி மதன் மே மாதம் 28ஆம் தேதி கடிதம் எழுதி விட்டு தலைமறைவானார். இன்றுவரை கண்டுபிடிக்க வில்லை.

• பாலாற்றில் ஆந்திர அரசு தடுப்பணை, கோவில் ஆக்கிரமிப்பு.

• சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திலேயே வழக்கறிஞர் மணிமாறன் சரமாரியாக வெட்டப்பட்டார்.

• டி.ஜி.பி.யாக இருந்த ராமானுஜம் சேலம் சென்றிருந்த போது தாக்கப்பட்டார்.

• காவல் துறையில் 19 ஆயிரத்து 200 பணியிடங்கள் காலியாக உள்ளன.

• முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட முயற்சி.

• திருப்பூருக்கு அருகே கன்டெய்னர்களில் 570 கோடி ரூபாய் கடத்தல்! பலத்த சந்தேகங்கள்!

• எதிர்க்கட்சிகள் மீது திட்டமிட்டு எண்ணற்ற அவதூறு வழக்குகள்! உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம்.

• தமிழக அரசு அதிகாரிகள் கலந்து கொள்ளாத தால் மத்திய நிபுணர் குழு கூவம் திட்டத்தைக் கை விடுவதாக அறிவித்துள்ளது.

• தமிழக அரசின் மீது மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குற்றச்சாட்டு.

• காவல் துறையை நவீனப்படுத்த மத்திய அரசு கொடுத்த நிதியைச் செலவு செய்யவில்லை.

• தமிழக அரசின் ஒத்துழைப்பு இல்லாததால், தமிழகத்தில் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள தேசிய நெடுஞ்சாலைகள் திட்டப் பணிகள் முடங்கிக் கிடக்கின்றன.

• பிரதமர் கூட்டிய முதல் அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளாத தமிழக முதல் அமைச்சர்.

English summary
Karunanidhi critised Chief Minister Jayalalitha's his 100 days celebration on his Facebook.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X