ஆரணி அருகே பல்லவர் கால சிற்பங்களும் அழிந்த கோயில்களின் தடயங்களும் கண்டுபிடிப்பு!
ஆரணி: ஆரணி அருகே மேல்சீஷமங்கலம் கிராமத்தில் பல்லவர் சிற்பங்களும், அழிந்த கோவிலின் தடயங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை மரபுசார் அமைப்பின் தலைவரும் வரலாற்று ஆய்வாளருமான ராஜ் பன்னீர்செல்வம் மற்றும் மோகன் இணைந்து, ஆரணி பகுதியில் கள ஆய்வு மேற்கொண்ட பொழுது மேல்சீசமங்கலம் ஊரைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கணேஷ் மற்றும் ப்ரியா வெங்கடேசன் ஆகியோரின் அழைப்பின் பெயரில் அவ்வூரில் கள ஆய்வு மேற்கொண்டனர்.
இவ்வூரில் மணிகண்டேஸ்வரர் கோவிலில் உள்ள கல்வெட்டுகள் இந்தியத் தொல்லியல் துறையால் பார்வையிடப்பட்டு, 1942 ம் வருட ஆண்டறிக்கையில் 8 கல்வெட்டுக்கள் பற்றிய குறிப்பு பதிவாகியுள்ளது குறிப்பிடத்தகுந்தது. அவற்றுள் காலத்தால் முற்பட்டதாக உள்ள குலோத்துங்கன் கல்வெட்டு ஒன்றும், அதனைத் தொடர்ந்து சுந்தர பாண்டியன் கல்வெட்டு ஒன்றும் தொன்மையானவை. ஏனைய கல்வெட்டுகள் விஜயநகர கல்வெட்டுகள் ஆகும்.
220-வது முறையாக வேட்பு மனு தாக்கல்.. தோல்விகள் பரிசாக கிடைத்தும்.. அசராத தேர்தல் மன்னன் பத்மராஜன்..!

தனிக்கோயில்
மேலும் அவ்வூரில் வேறு ஏதேனும் தொன்மம் சார்ந்த தடயங்கள் இருக்கிறதா என்று விசாரித்த பொழுது, ரயில்வே ஊழியரான வெங்கடேசன் அவ்வூரில் உள்ள நடராஜர் கோவில் குறித்து அளித்த தகவல் ஆச்சரியமூட்டியது. ஏனெனில், சிதம்பரம் உட்பட, எங்குமே நடராஜரை மூலவராக கொண்ட தனிக்கோயில் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், தொன்மைக் காலத்தில் ஸ்ரீபுருஷமங்கலம் என்றழைக்கப்பட்ட இந்த மேல்சீசமங்கலம் கிராமத்தில், தம்பதிகள் பிள்ளை வரம் வேண்டி, 1909 ஆம் ஆண்டில் நடராஜருக்கு தனிக்கோயில் அமைத்துள்ளது தனிச்சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

நடராஜன் செப்பு திருமேனி
சிறிய வீடு போன்ற அமைப்புடைய அக்கோவிலில் நடராஜர் செப்பு திருமேனியுடன் காட்சி தருகிறார். அக்கோவிலினுள் நுழைந்தவுடன் இடப்பக்கம் தாழ்வாரம் போன்ற அமைப்பில் சுமார் 6 அடி உயரம் கொண்ட பெருமாள் சிலை, ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தருகிறது. அச்சிலையை சுத்தம் செய்து ஆய்வு மேற்கொண்டதில் அவை 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் காலத்திய சிலை என்று கண்டறியப்பட்டது. மேலும் அதனைப்பற்றி விசாரிக்கையில், இச்சிலை நடராஜர் கோவில் பின்புறம் வெட்டவெளியில் இருந்ததாகவும் சுமார் 30 வருடங்கள் முன்னர் இங்கே கொண்டு வந்ததாகவும் தெரிவித்தனர்.

நடராஜர் கோயில்
புதர் மண்டிக்கிடந்த நடராஜர் கோவிலின் பின்புறம் சென்று ஆய்வு மேற்கொண்டதில் அங்கே பழைய கோயிலின் செங்கல் கட்டுமானம் சிதைந்து அதன் அடித்தளம் மட்டும் சில இடங்களில் எஞ்சி நிற்பது கண்டுபிடிக்கபட்டது. மேலும் அவ்விடத்தில் மண்ணில் புதையுண்ட நிலையில் இரண்டு அடி வீதம் இரண்டு பட்டை கல் துண்டுகள் இருப்பதைக் கண்டு, அதனைத் தோண்டி எடுத்த பொழுது அதில் கல்வெட்டுக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அக்கல், கோயில் கட்டுமானத்தின் அதிட்டானத்தில் வரும் முப்பட்டை குமுதபட்டை கல்லாகும். துண்டு கல்வெட்டு என்பதால், முழுச் செய்தி கிடைக்கப் பெறாவிட்டாலும், அதன் எழுத்தமைதியை கொண்டு அதன் காலம் 11 ஆம் நூற்றாண்டையொட்டியது எனத் தெரிகிறது. இதன்மூலம், அவ்விடத்தில் ஆயிரம் வருட பழமையான கோவில் ஒன்று இருந்து அழிந்துபட்டு அதன் சாட்சியாய் அந்த 6 அடி உயர ஸ்ரீதேவி பூதேவியுடன் கூடிய பெருமாளும், துண்டு கல்வெட்டும் மட்டும் நமக்கு சாட்சியாக உள்ளதை அறியலாம்.

அரசு உயர்நிலைப் பள்ளிக் கட்டடம்
மேலும் இவ்விடத்திற்கு வடமேற்கே சுமார் நூறு மீட்டர் தொலைவில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப்பள்ளிக் கட்டடம் குறித்து, திரு. வெங்கடேசன் அவர்கள் "தாங்கள் சிறு பிள்ளையாய் இருந்த பொழுது அங்கு கோயில் போன்ற கட்டுமானங்களும் சிலைகளும் இருந்ததாகவும், அவையாவும் மண்ணுக்குள் புதையுண்டு இன்று அவ்விடத்தில் பள்ளிக்கட்டடங்கள் அமைந்துள்ளதாகவும்" அளித்த தகவல் பெயரில் அங்கு விரைந்தோம்.

பட்டிகல்
அப்பள்ளி வளாகத்தைச் சுற்றி ஆய்வு மேற்கொண்டதில் மேலும் ஒரு பட்டிகல் எழுத்துப் பொறிப்புடன் மண்ணில் புதையுண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தோண்டி எடுத்து சுத்தம் செய்து பார்க்கையில், பத்தாம் நூற்றாண்டு எழுத்தமைதியுடன் 4 வரித் துண்டுக் கல்வெட்டு இருந்தது. கிடைத்த துண்டு கல்வெட்டு முழுமையானது இல்லை என்றாலும், அக்கல்வெட்டிலிருந்து, அவ்விடத்தில் இருந்த கோவிலுக்கு 300 குழி நிலம் தானமாக தரப்பட்ட செய்தியை நம்மால் அறிய முடிகிறது.

பெருமாள்
இக்கல்வெட்டின் காலம், மேற்கூறிய பெருமாள் இருந்த இடத்தில் கண்டுபிடிக்கபட்ட துண்டு கல்வெட்டுக்கும் முந்தையதாகும். எனவே இவ்விடத்தில் ஒரு சிவன் கோவில் இருந்து அழிந்திருக்கக் கூடும் என்ற அனுமானத்தில் விசாரித்த பொழுது, ஊரின் வடக்கே சிவலிங்கம் ஒன்று இருப்பதை, திரு.கணேஷ் அவர்கள் காண்பித்தார். அந்தச் சிவலிங்கம் திருமேனியின் காலமும் இந்தத் துண்டுக் கல்வெட்டின் காலமும் ஒத்துப் போவதால், உயர்நிலைப்பள்ளி இருக்கும் இடத்தில் சிவன் கோவில் இருந்து அழிந்திருக்க கூடும் என்ற அனுமானம் வலுவாகிறது.

சிவலிங்கத்தின் பின்புறம்
மேலும் அச்சிவலிங்கத்தின் பின்புறம் வெட்ட வெளியில் சப்த கன்னியர் சிலைகள் காணப்படுகிறது. அவையாவும் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்கால பல்லவர்கள் கலை பாணியில் அமைந்துள்ளது. இச்சிலைகளுக்கு எதிர்ப்புறம் சுமார் 50 மீட்டர் தென்கிழக்கே புதிதாக திருப்பணி செய்யப்பட்ட சிவன் கோவில் ஒன்றும் உள்ளது. இக்கோவிலும் தொன்மை வாய்ந்த கோவில் என்று ஊர்மக்கள் அளித்த தகவல் அடிப்படையில் பார்வையிட்டோம். கோவில் திருப்பணி செய்த பொழுது அதன் அடித்தளம் தென்பட்டதாகவும், அச்சமயம் போதிய விழிப்புணர்வு இன்மையால் அதன் மீது இப்புதிய கோவிலைக் கட்டிவிட்டதாகவும் தெரிவித்தனர்.

பெருமாள் கோயில்
மேலும் இவ்வூரின் வடமேற்கில், மற்றுமொரு 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இதனருகே வயல்வெளியில் பாதி புதையுண்ட நிலையில் ஒரு சிலை காணப்பட்டது. அதனை சுத்தம் செய்து ஆய்வு செய்ததில் அது 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்கால பல்லவர் காலத்திய விஷ்ணு துர்க்கை சிற்பம் என்று கண்டறியப்பட்டது. அதேபோல் ஊரின் தென்கிழக்கில் உள்ள மாரியம்மன் கோவிலில், 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த விஷ்ணு சிற்பம் உடைந்த நிலையில் காணப்படுகிறது.

நாயக்கர் காலம்
இது மட்டுமல்லாமல் இவ்வூரில் விஜயநகர / நாயக்கர் காலத்திய நடுகல் சிற்பங்கள் மூன்று கண்டறியப்பட்டது. இச்சிறிய ஊரில் ஆயிரம் வருடங்கள் முன்னர் சைவம் மற்றும் வைணவ சமயங்கள் தழைத்தோங்கி இருந்துள்ளதை நம்மால் அறிய முடிகிறது. குறிப்பாக சைவ வைணவ சமயங்கள் சார்ந்த, தலா இரண்டு கோயில்கள் கொண்டு சிறப்புற்று இருந்த இவ்வூரில் இன்று மணிகண்டேஷ்வரர் மற்றும் புதிதாக கட்டிய அகத்தீஸ்வரன் கோவிலைத் தவிர்த்த ஏனைய கோவில்கள் முற்றிலும் அழிந்த நிலையில் இறை திருமேனிகள் மட்டும் ஆங்காங்கே தஞ்சம் புகுந்து காலக்கண்ணாடியாய் நமக்கு ஊரின் தொன்மையைப் பறைசாற்றி வருகிறது. தங்கள் ஊரின் தொன்மையைக் கருத்தில் கொண்டு ஊர்மக்கள் இச்சிலைகளை முறையாகப் பராமரித்து, பாதுகாத்திட முன்வர வேண்டும். மேலும் மேல்சீஷமங்கலம் ஊரை பற்றி முறையான வரலாற்று தகவல்கள் அடங்கிய புத்தகம் ஒன்று வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.