For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"கெத்து" உண்மையிலேயே தமிழ்ச் சொல்லா.. ?

Google Oneindia Tamil News

சென்னை: கெத்து என்ற வார்த்தை தமிழ்ச் சொல்லா.. இதுதான் இன்று தமிழகத்தின் முக்கிய விவாதமாகியிருக்கிறது.

இந்தப் பெயரில் வெளி வந்த படத்திற்கு தமிழக அரசு கேளிக்கை வரி சலுகை வழங்க மறுத்ததைத் தொடர்ந்து அந்தப் படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்து வரும் உயர்நீதிமன்ற நீதிபதி, கெத்து என்பது தமிழ்ச் சொல்தான். திருப்புகழிலேயே அதுகுறித்து பாடல் உள்ளது என்று கூற விவாதங்கள் சுவாரஸ்யமாகியுள்ளன.

Poet Madudeswarans comment on

இந்த நிலையில் கவிஞர் மகுடேஸ்வரன் இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் கூறியுள்ள கருத்து:

"கெத்து" தமிழ்ச்சொல்லா என்று எண்ணற்றோர் என்னைக் கேட்டுவிட்டனர். ஒரு திரைப்படத் தலைப்பு சார்ந்து எழுந்த அக்கறை, ஒரு சொல்லை நோக்கிய ஆர்வமாகத் திரும்பியிருக்கிறது. நன்று.

கெத்து என்பது தமிழ்ச்சொல் இல்லை என்றால் அது எந்த மொழிச்சொல் என்று நமக்குத் தெரியவேண்டும். 'இயற்கையான உச்சரிப்புத் தன்மையுடைய ஒலியசைகளால் ஆனது' என்பதால் உலக மொழிகள் பலவற்றிலும் இச்சொல் ஏதேனும் ஒரு பொருளில் வழங்கி வரும் என்றே தோன்றுகிறது.

மீனைத் தூய்மையாக்க வாய்முதல் வால்வரை அதன் அடிப்புறத்தில் நேர்கோடாகக் கீறுவார்களே, அதற்குக் கெத்துதல் என்று பெயர். மீனைக் கெத்துவது. ஆணவமாகக் கொக்கரிப்பதும் கெத்துவது ஆகும். ஏமாற்றுவதையும் கெத்துவது என்று வழங்கியிருக்கின்றனர். தவிர, கெத்து என்பதைப் பெயர்ச்சொல்லாகவும் 'தந்திரம்' என்ற பொருளில் வழங்குகின்றனர்.

'கெத்துமனம் படைத்த முருகா' என்று அருணகிரிநாதர் ஆண்டிருப்பதாகக் கூறுகின்றனர். தந்திர மனம் படைத்த முருகா என்றுதான் அங்குப் பொருள்கொள்ள வேண்டும். அருணகிரியார் வல்லின நடுவொற்றுடைய சொற்களை ஆள்வதில் தனித்துவம் மிக்கவர். அதனால் அவர்தம் சொல்லாட்சி அருஞ்சான்றுதான்.

தமிழில் ககர எழுத்துகளில் (க, கா, கி, கீ, கு, கூ, கெ, கே, கை, கொ, கோ, கௌ....) தொடங்கும் சொற்களே மிகுதி. கெ என்னும் ககர வரிசை எழுத்தொன்றில் இச்சொல் தொடங்குவதால் இது தமிழில் உள்ளது என்றே கொள்ளலாம். இச்சொல் வன்தொடர்க் குற்றியலுகரச் சொல்லும் கூட.

ஆனால், தொடர்புடைய திரைப்படத் தலைப்பு மேற்காணும் ஏதேனும் ஒரு பொருளில் ஆளப்பட்டிருக்கிறதா ? தற்காலப் பேச்சுவழக்கில் மேற்காணும் பொருளை நாம் அறிந்திருக்கவேயில்லை. 'நாயக மிதப்பு, வெற்று ஆணவம்' என்ற பொருளில்தான் கெத்து என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம்.

'ஒரு கெத்தாவே திரியறான்பா...'
'புல்லட் பைக்குன்னாலே ஒரு கெத்துதான்...'

இத்தொடர்களில் கெத்துக்கு வழங்கும் பொருள் தமிழ்ப்பொருளே இல்லை. அதுவாக ஒரு குழூஉக்குறியாய்த் தோன்றிக் குறிப்பிட்ட பொருளை ஆள்கிறது. கெத்து திரைப்படத் தலைப்பு உணர்த்தும் பொருளும் இதுதான்.

இப்போது கெத்து திரைப்படத்திற்கு வரிவிலக்குத் தரப்படவேண்டுமா ? வேண்டாவா ?

'தமிழ்ச்சொல் என்பதே வரிவிலக்குக்குத் தகுதி' என்றால் கெத்துக்கு வரிவிலக்கு தரப்படவேண்டும். 'தமிழ்ச்சொல் தமிழ்ப்பொருளில் ஆளப்பட்டால்தான் வரிவிலக்கு' என்றால் வரிவிலக்கு தரப்பட வேண்டியதில்லை.

குழூஉக்குறிச் சொற்கள் (சரக்கு, பப்பு புவ்வா போன்றவை-குறிப்பிட்டவர்கள் தமக்குள் பொருள்புரியும்படி வழங்கிக்கொள்ளும் சொற்கள்) எவையெனினும் அவற்றுக்கும் வரிவிலக்கு தரலாம் என்று ஒரு படைப்பாளியாக நான் பரிந்துரைப்பேன்.

நன்றி: கவிஞர் மகுடேஸ்வரன்

English summary
Poet Magudeswaran has expressed his opinion on the title of the movie, Gethu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X