For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாசி மோசடி: இயக்குனரை கடத்திய வழக்கு - முன்னாள் போலீஸ் ஐ.ஜி. உள்பட 5 பேர் விடுவிப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

கோவை: பாசி நிதி நிறுவன இயக்குனரை கடத்தி ரூ.3 கோடி பறித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் போலீஸ் ஐ.ஜி. உள்பட 5 பேர் மீது சிபிஐ போலீசார் எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக உச்சநீதிமன்றத்தால் உத்தரவிட்டுள்ளதால் அவர்கள் மீதான வழக்குகளை முடித்து வைத்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டது.

பிரமோத்குமார்

திருப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட பாசி நிதி நிறுவனத்தில் ரூ.1000 கோடி மோசடி நடந்ததாக கூறப்பட்டது. இதற்கிடையில், பாசி நிதி நிறுவன இயக்குனர்களில் ஒருவரான கமலவள்ளி மாயமானார். அவரை அப்போது மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.யாக இருந்த பிரமோத்குமார் மற்றும் திருப்பூர் டிஎஸ்பி ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர்கள் மோகன்ராஜ், சண்முகையா, மற்றும் செந்தில் குமார் ஆகியோர் கடத்தி சென்று ரூ.3 கோடி பணம் பறித்ததாக கமலவள்ளி போலீசில் வாக்குமூலம் அளித்தார்.

அதன்பேரில் ராஜேந்திரன், மோகன்ராஜ் ஆகியோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இன்ஸ்பெக்டர் சண்முகையாவும், செந்தில் குமாரும் முன்ஜாமீன் பெற்றனர். போலீஸ் ஐ.ஜி.யை சிபிசிஐடி போலீசார் கைது செய்யவில்லை.இந்த நிலையில் பாசி நிதி நிறுவன இயக்குனர்கள் கதிரவன், கமலவள்ளி, மோகன்ராஜ் ஆகிய 3 பேர் தலைமறைவானார்கள்.

சிபிஐக்கு மாற்ற உத்தரவு

இதற்கிடையில் பாசி நிதி நிறுவன முதலீட்டாளர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஒரு மனுவில், இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது என்பதால் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். அப்போது உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு மனுவில், பாசி நிதி நிறுவன மோசடி வழக்குக்கு தொடர்புள்ள கடத்தல் வழக்கு உள்ளது. அந்த வழக்கையும் சிபிஐ க்கு மாற்ற வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

பிரமோத்குமார் கைது

அந்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்றம் 2 வழக்குகளையும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதை தொடர்ந்து மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பிரமோத்குமாரை சிபிஐ போலீசார் கடந்த 2.5.2012 அன்று டெல்லியில் வைத்து கைது செய்தனர். அதன்பின்னர் அவரை போலீசார் கோவை கொண்டு வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர். அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்

பிரமோத் வழக்கு

இந்நிலையில், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றியது தொடர்பாக தன்னுடன் உயர்நீதிமன்றம் கருத்து ஏதும் கேட்கவில்லை என்றும், எனவே இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றியது செல்லாது என அறிவிக்க கோரியும் பிரமோத்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்ததால், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

உச்சநீதிமன்றம் ரத்த

இதை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க விதிக்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கை சிபிஐ விசாரிப்பதா என்பது தொடர்பாக இரு தரப்பு கருத்துகளையும் கேட்டு முடிவெடுக்குமாறும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் சார்பில் மூத்த கிரிமினல் வக்கீல் ஏ.பி.ஜெயச்சந்திரன் கோவை சிபிஐ நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ‘முன்னாள் போலீஸ் ஐ.ஜி. பிரமோத்குமார் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மீதான வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி முரளிதரன் அளித்த உத்தரவில், ‘கமலவள்ளியை கடத்திய வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்று கூறியிருந்தார்.

அதன் அடிப்படையில் பிரமோத்குமார் உள்ளிட்ட அனைத்து போலீஸ் அதிகாரிகள் மீதான நடவடிக்கையும் ரத்து செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதன் அடிப்படையில் விரைவில் பிரமோத்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் மீண்டும் பணியில் சேர்க்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க அனுமதிப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது. அந்த மனு ஏற்கப்படும் பட்சத்தில் மீண்டும் முதலில் இருந்து இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுமா அல்லது விட்ட இடத்தில் இருந்து சிபிஐ துவங்குமா என்பதிலும் சிக்கல் நீடிக்கிறது. ஆள் கடத்தல், பணம் பறிப்பு குற்றங்களில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரிகள் மீதான வழக்கும், நடவடிக்கைகளும் ஒரு சேர ரத்து செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Suspended IPS officer, P Pramod Kumar, effectively became free of all charges against him on Tuesday, when the CBI Court in Coimbatore closed the charge sheet against him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X