For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கிரண் பேடி நியமனமும் கூட்டாட்சித் தத்துவத்துக்கு உலை வைக்கும் பாஜக அரசும்....

By R Mani
Google Oneindia Tamil News

-ஆர். மணி

புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்ட முதல் நாளிலிருந்தே தன்னுடைய அதிகார நர்த்தனத்தை தொடங்கி விட்டார் கிரண் பேடி. இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரிதான் கிரண் பேடி.

1982 ம் ஆண்டு டெல்லியில் பிரதமர் இந்திரா காந்தியின் அலுவலக காரை பார்க்கிங் செய்யக் கூடாத பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக கூறி அதனை அங்கிருந்து கிரேண் மூலம் அப்புறப்படுத்தியவர் தான் கிரண் பேடி. அப்போது டெல்லி போலீசில் டிராஃபிக் டெபுடி கமிஷனராக (டிஸி) இருந்தவர் கிரண் பேடி. இச் சம்பவத்தின் போது இந்திரா காந்தி அமெரிக்கா சென்றிருந்தார்.

Questions on Kiran Bedi as Lt Governor

அவரது கார் பழுது பார்க்கப் படுவதற்காக ஒரு மெகானிக் ஷெட்டுகள் கொண்டு செல்லப் பட்ட போதுதான் இந்த சம்பவம் நடந்தது. இதில் ஏக இந்தியாவிலும் பிரபலானார் கிரண் பேடி. போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களை அந்த வாகனங்கள் எந்த விஐபி க்குச் சொந்தமானதாக இருந்தாலும் அவற்றை கிரேண் மூலம் அப்புறப்படுத்துவதில் மிகவும் புகழ் பெற்றார். அதனால் அவர் ‘'கிரேண் பேடி'' என்றும் அழைக்கப் பட்டார்.

அதன் பிறகு டெல்லியில் சீக்கியர்கள் நடத்திய மிகப் பெரியதோர் போராட்டத்தில் அசாத்திய துணிச்சலுடன் போலீஸ் படையை வழி நடத்தி மிகப் பெரிய கலவரத்தை சில மணி நேரங்களில் கட்டுக்குள் கொண்டு வந்தார். சீக்கியர்கள் வாளுடன் தெருவில் இறங்கி போராடியபோது போலீஸ் படையை வெறும் லத்தியுடன் வழி நடத்தி நிலைமையை திறம்பட சமாளித்தார். எல்லாவற்றுக்கும் மேலாக திஹார் சிறையில் அவர் மேற்கொண்ட சீர்திருத்தங்களுக்காக கிரண் பேடி சர்வதேச அளவிலும் புகழ் பெற்றார்.

66 வயதாகும் கிரண் பேடி 2011-ல் அன்னா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான இயக்கத்தின் மூலமாக இந்திய பொது வாழ்வில் வலுவானதோர் காலடியை எடுத்து வைத்தார். பின்னர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் ஏற்பட்ட மோதலால் அன்னா ஹசாரே இயகத்திலிருந்து தனித்து ஒதுங்கி பின்னர் பாஜக ஜோதியில் ஐக்கியமானார்.

2015 டெல்லி தேர்தலின் போது பாஜகவின் முதலமைச்சர் வேட்பாளராக அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக நிறுத்தப்பட்டு மண்ணைக் கவ்வியவர்தான் கிரண் பேடி. மக்கள் மன்றத்தில் தூக்கியடிக்கப்பட்ட ஒருவரை புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக நரேந்திர மோடி அரசு நியமித்துள்ளது.

நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்ற ஒரே மாநிலம் புதுச்சேரிதான். இதுதான் விஷயமே ... ‘'காங்கிரஸ் முக்த் பாரத்'' அதாவது காங்கிரஸ் இல்லாத பாரதம் தான் லட்சியம் என்று வெளிப்படையாகவே சொல்லி அரசியல் செய்து வருகிறது பாஜக. இந்தக் கோஷத்தை எழுப்பியதே பிரதமர் நரேந்திர மோடியும், பாஜக தலைவர் அமித்ஷா வும் தான். காங்கிரஸ் இல்லாத இந்தியாவை தேர்தல் வழிமுறைகள் மூலம் பாஜக சாதித்தால் அதில் யாரும் குறை கூற முடியாது. ஆனால் குறுக்கு வழிகள் மூலம், அரசியல் சாசனத்தை காலின் கீழ் போட்டு மிதிப்பதன் மூலம் சாதிக்க நினைப்பதால் தான் இது வில்லங்கமாகிறது.

இன்று நாட்டில் நடப்பது என்ன? உத்திராகண்டிலும், அருணாசலப் பிரதேசத்திலும் ஆளுநர்கள் நன்றாகவே உச்ச நீதிமன்றத்தில் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை கலைத்ததனால் இந்த அவப் பெயர் ஏற்பட்டிருக்கிறது. மத்தியபிரதேசத்தின் ஆளுநர் வியாபம் ஊழல் காரணமாக உச்ச நீதிமன்றத்தின் விசாரணை வரம்புக்குள் சிக்கியிருக்கிறார்.

இந்த பின்புலத்தில் பார்த்தால் தான் கிரண் பேடியின் நியமனத்தின் உண்மையான பரிமாணம் புரியும். வெளிப் பார்வைக்கு, ஒரு பாமரனின் பார்வையில் பார்த்தால் கிரண் பேடி செய்வதில் எந்த குறையும் காண முடியாது. அரசு ஊழியர்கள் உரிய நேரத்தில் பணிக்கு வர வேண்டும் என்று சொல்லுவதையோ அல்லது தெருக்கள் எல்லாம் நன்றாக கூட்டி, மெழுகி, சுத்தம் செய்யப் பட வேண்டும் என்று சொல்லுவதையோ யாரும் குறை கூற முடியாது.

ஆனால் விவகாரம் அதுவல்ல. எப்போதுமே மாநில ஆளுநர்களை விட துணை நிலை ஆளுநர்களின் அதிகாரம் என்பது கூடுதலானது. ஏனெனில் யூனியன் பிரதேசங்கள் எப்போதுமே மத்திய அரசின் நேரடி கட்டுப் பாட்டில் இயங்குபவை. ஒரு யூனியன் பிரதேசத்தில் முதலமைச்சரும், துணை நிலை ஆளுநரும் வெவ்வேறு கட்சிகளை சார்ந்தவர்களாக இருந்தால் நிர்வாகம் சந்தி சிரிக்கும் என்பதற்கு டெல்லி நிர்வாகம் சரியான உதாரணம்.

டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கும், துணை நிலை ஆளுநர் ஜங்குக்கும் ஏழாம் பொருத்தம் தான். இதே நிலைமைதான் விரைவில் புதுச்சேரியிலும் வரப் போகிறது என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். எதிர்கட்சிகள், பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில் குறிப்பாக யூனியன் பிரதேசங்களில் துணை நிலை ஆளுநர்கள் மூலமாக அந்தந்த யூனியன் பிரதேசங்களை ஆளும் முதலமைச்சர்களுக்கும், அமைச்சர்களுக்கும் பெரிய குடைச்சலை கொடுத்துக் கொண்டிருக்கிறது மத்தியில் ஆளும் பாஜக அரசு.

அதிலும் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு ஏற்கனவே பிரச்சனைகள் அதிகம். உட்கட்சி பூசல் காங்கிரசில் தலையெடுத்து ஆடிக் கொண்டிருக்கிறது. நாராயணசாமி இன்னுமும் எம்எல்ஏ கூட ஆகவில்லை. இரண்டு திமுக எம்எல்ஏ க்களின் ஆதரவுடன்தான் நாராயணசாமி ஆண்டு கொண்டிருக்கிறார். ஆட்சிக்கு தற்போதைக்கு ஆபத்தில்லை.

ஆனால் விவகாரம் தொலை நோக்கு பார்வையில் பார்த்தால் துணை நிலை ஆளுநர் கிரண் பேடியுடன் தான் அவருக்கு காத்துக் கிடக்கிறது. ஏற்கனவே ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ஆம் ஆத்மி கட்சி போன்றவை கிரண் பேடியின் நியமனத்தை விமர்சனம் செய்திருக்கின்றன. இந்த நியமனம் முழுக்க ஒரு அரசியல் நியமனம் என்று இந்த கட்சிகள் வர்ணித்திருக்கின்றன.

காங்கிரஸ் சற்றே அடக்கி வாசிக்கிறது. ‘'இந்த நியமனம் முழுக்கவும் மத்திய அரசின் ஆளுகைக்கு உட்பட்டதுதான். ஜனநாயகரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசுடன் பாரபட்சமின்றி துணை நிலை ஆளுநர் செயற்பட வேண்டும் என்பதுதான் எங்களது எதிர்பார்ப்பு. அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு அவர் நடந்து கொண்டால் எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. புதுச்சேரியில் எங்களுக்கு நல்ல மெஜாரிட்டி இருக்கிறது'' என்கிறார் காங்கிரஸ் மூத்த தலைவர் பி.சி. சாக்கோ. ‘டெல்லி தேர்தலில் பலவீனமான பாஜக வின் முதலமைச்சர் வேட்பாளராக களத்தில் நிற்க சம்மதித்ததற்காக கிரண் பேடிக்கு கிடைத்த வெகுமானம் தான் இந்த பதவி'' என்று மேலும் கூறுகிறார் சாக்கோ.

தென் மாநிலங்களில் பாஜகவை வளர்க்க காவிக் கட்சி மேற்கொள்ளும் தந்திரோபாயத்தின் ஒரு பகுதியாவும் தான் கிரண் பேடியின் நியமனம் பார்க்கப்படுகின்றது. ‘'தென் மாநிலங்களில் கட்சியை வளர்க்க ஹிந்துத்துவாவை விட, நிருவாகத் திறமை, நிருவாகத்தில் நேர்மை போன்ற விஷயங்களைத் தான் பாஜக அதிகமாக நம்புகிறது. அதன் ஒரு பகுதியாகவும்தான் நாம் கிரண் பேடியின் நியமனத்தை பார்க்க வேண்டும். இது கட்சி சார்பற்ற, மதில் மேல் பூனையாக இருக்கும் வாக்காளர்களை குறி வைத்து நடத்தப்படும் நியமனமாகும்'' என்கிறார் டெல்லியில் பணியாற்றும் பத்திரிகையாளர் ஒருவர்.

ஆளுநர்கள் நியமனம் பற்றி, மத்திய மாநில அரசுகளின் உறவுகளைப் பற்றி ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட சர்காரியா கமிஷன் இவ்வாறு கூறுகிறது ‘'ஒவ்வோர் மாநிலத்திலும் ஆளுநர்களை நியமிப்பதற்கு முன்பாக அந்தந்த மாநிலங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்களை, மாநில அரசுகளை, மத்திய அரசு கலந்தாலோசிக்க வேண்டும்''. ஆனால் கிரண் பேடி நியமனத்தில் எந்த கலந்தாலோசனையும் இல்லை. புதுச்சேரி ஒரு யூனியன் பிரதேசமாக இருந்தாலும், சர்காரியா கமிஷன் பரிந்துரைகள் அதற்கும் கூட பொருந்தும்தான்.

அரசியல் சாசனத்தின்படி துணை நிலை ஆளுநருக்கு ஒரு மாநில ஆளுநரை விட கூடுதலான அதிகாரம் இருப்பது உண்மைதான். ஆனால் அவர் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை விட அதிகாரம் மிக்கவராக எப்போதும் ஆகி விட முடியாது. ஆனால் இன்று கிரண் பேடி தன்னிச்சையாக உத்தரவுகளை பிறப்பித்துக் கொண்டிருக்கிறார். சிகப்பு சுழல் விளக்கு பொருத்தப்பட்ட கார்கள் புதுச்சேரியில் யாருக்கும் இல்லை என்று கூறிவிட்டார். மக்களோடு மக்களாகத் தான் அனைவரும் பயணிக்க வேண்டும் என்கிறார். எவருக்காகவும், போக்குவரத்து நிறுத்தப் படாது என்கிறார். இவையெல்லாமே ஒரு தேர்ந்தெடுக்கப் பட்ட அரசு செய்ய வேண்டிய வேலையாகும்.

இதே போன்ற உத்தரவை பிறப்பிக்கக் கூடிய ஒரு ஆளுநரை தமிழ் நாட்டுக்கு நியமிக்கக் கூடிய அரசியல் துணிச்சல் நரேந்திர மோடி அரசுக்கு இருக்கிறதா என்று கேட்டால் அது மில்லியன் டாலர் கேள்விதான். அப்படியே ஒருவேளை அத்தகையை துணிச்சல் மிக்கவர் தமிழக ஆளுநரானால் அவரது நிலைமை 1993 - 1996 காலகட்டங்களில் தமிழக ஆளுநராக இருந்த டாக்டர் சென்னா ரெட்டியின் நிலைமைதான் என்பது கூடுதல் தகவலாகும்.

புதுச்சேரியில் நாராயணசாமி அரசுக்கு உண்மையான பிரச்சனை பல்வேறு விதமான அரசு நியமனங்களில் வரலாம். நேரடியாகவே மத்திய உள்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியின் நிர்வாகத்தில் தான் நினைத்தால் அனுதினமும் கிரண் பேடியால் நாராயணசாமி அரசுக்கு தொல்லை தர முடியும். அறிவுக் கூர்மையும், நிர்வாகத் திறனும் கொண்டவர்தான் கிரண் பேடி. அதே போல எப்போதுமே மீடியா ஒளி வெள்ளத்தில் இருக்கவும் விரும்புபவர்தான் கிரண் பேடி. ஆனால் சிக்கல் எங்கே வருகிறது என்றால் கிரண் பேடி தற்போது ஏற்றிருக்கும் பதவி என்பது இந்திய அரசியல் சாசனம் கொடுத்திருக்கும் பதவியாகும்.

இந்தப் பதவியில் இருப்பவர்கள் தன்முனைப்பு கொண்டவர்களாகவும், எப்போதுமே மீடியா ஒளி வெள்ளத்தில் இருக்க விரும்புபவர்களாகவும் இருந்தால் அது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு சிக்கல்தான். ஆனால் கிரண் பேடியின் நியமனம் ‘'காங்கிரஸ் முக்த் பாரத்'' என்ற பாஜக வின் இலட்சியத்தின் படியான நியமனம் தான் என்றால் அப்போது அதில் விவாதிப்பதற்கு ஏதுமில்லை.

அந்தக் கோணத்தில் பார்த்தால் புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் பதவிக்கு சகல விதத்திலும் பொருத்தமானவர்தான் கிரண் பேடி. இன்று கர்நாடாகவை தவிர வேறு எந்த பெரிய மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சியில் இல்லை . மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சொன்னது போன்று காங்கிரஸ் இன்று சில மலையோர மாநிலங்களிலும், சில யூனியன் பிரதேசங்களிலும் தான் ஆண்டுக் கொண்டிருக்கிறது. அந்த சிறு பிராந்தியங்களிலும் கூட காங்கிரஸூக்கு ஆப்பு வைக்கும் வேலையை மோடி அரசு கனகச்சிதமாக செய்யத் துவங்கி விட்டது என்பதுதான் கிரண் பேடி நியமனத்தின் சாராம்சமாகும்......

English summary
BJP trying to rope in intellectuals and reputed administrators in the south India through the Kiran Bedi's appointment as Lt Governor of Pudhucherry.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X