For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காஞ்சிபுரத்தில் 24 மணிநேரத்தில் 34.2 செ.மீ மழை! வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் குடியிருப்பு வாசிகள் கோவில்கள், பள்ளிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் காஞ்சிபுரத்தில் 34.2 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது. ஸ்ரீபெரும்புதூரில் 7.4 செ.மீ., தாம்பரத்தில் 6.8 செ.மீ மழையும் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. கனமழை காரணமாக மஞ்சள்நீர் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. நசப்பேட்டை, செவிலிமேடு, திருக்காலிமேடு உள்ளிட்ட கிராமங்களில் வெள்ளநீர் புகுந்து உள்ளது. இதன் காரணமாக காஞ்சிபுரம் - உத்திரமேரூர், காஞ்சிபுரம் - செய்யாறு இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

Rains slam Kanchipuram

மதுராந்தகம் பகுதியில் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை கொட்டி வருகிறது. தொடர் மழையால் மதுராந்தகம் பகுதியில் பல வீடுகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. மதுராந்தகம், ஆனாம்பேடு சாலை, சோத்துப்பாக்கம் - சித்தாமூர் சாலை, முதுகனா கூவாத்தூர் சாலை வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர். இன்றும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

கனமழையால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி முழுக்கொள்ளவை எட்டியது. ஏரி நிரம்பியதை அடுத்து உபரிநீர் கிளியாற்றில் வெளியேற்றப்பட உள்ளது. இதனால் ஏரியின் அருகே உள்ள கிளியாற்று கரை ஓரம் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. மேலும் இந்த ஏரியால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க பொதுப்பணித்துறையினர் உஷார் நிலையில் அமர்த்தப்பட்டுள்ளனர். கிளியாற்று கரை ஓரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

மதுராந்தகம் ஏரி 4 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் நிரம்பி உள்ளது.ஏரி நிரம்பியதன் மூலம் மதுராந்தகத்தில் 2800 ஏக்கர் பாசன வசதி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதன் மொத்த கொள்ளளவு 23 அடி. அணை நிரம்பி கீழியாற்று பாலத்தில் மறுகால் பாய்கிறது. கீழியாற்றில் மட்டும் 3 ஆயிரம் கன அடி நீர் வெளியேறி வருகிறது.இதன் காரணமாக கத்திரிசேரி, முள்ளி, தேவாதூர், காவாதூர், வளர்பிறை, கோதோபுதூர், கீழவலம், அருங்குளம் உள்ளிட்ட 10 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இங்கு பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் உஷார் படுத்தப்பட்டு உள்ளனர். அவர்கள் ஏரியில் உடைப்பு ஏற்படாமல் இருக்க கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். தொடர்ந்து மழை பெய்வதால் ஏரியின் மதகுகளை திறக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். 30 ஆண்டுகளுக்கு பிறகு ஏரி கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனுடன், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவி வருகிறது. இதன் பாதிப்பால், தென்கிழக்கு வங்கக்கடலில் 14-ம் தேதி (நாளை) காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும். இதனால், நாளை முதல் வட தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளிலும் உள் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளர்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை, கடலூர் உள்ளிட்ட வட கடலோர மாவட் டங்கள், புதுச்சேரியில் நாளை கனமழையும், நாளை மறுதினம் முதல் மிக கனமழைக்கும் வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காஞ்சிபுரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 34.2 செ.மீ மழையும், ஸ்ரீபெரும்புதூரில் 7.2 செ.மீ மழையும், தாம்பரம் பகுதியில் 6.8 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

English summary
Very heavy rainfall lashed the town of Kanchipduram and the rain continues.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X