எம்.ஜி.ஆர். வேற.. "சிவாஜி" வேற.. எப்படி தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினிகாந்த் எம்ஜிஆர் போல சாதிப்பார். இது பலரது நம்பிக்கையாக உள்ளது. உண்மையில் எம்ஜிஆருடன் ரஜினியை ஒப்பிடவே முடியாது. மேலும் எம்.ஜி.ஆர். போல ரஜினியும் சாதிப்பார் என்று எதிர்பார்த்தால் அது நிச்சயம் ஏமாற்றத்திலேயே முடியும் என்பது அரசியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

தமிழகத்தில் சினிமாப் பைத்தியம் அதிகம். மற்ற அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், சினிமாவில் ஒருவர் புகழ் பெற்று விட்டால் அடுத்து அவர் தைரியமாக முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டு விடுகிறார். காரணம் மக்களின் மூளையில் அந்த அளவுக்கு அறியாமை மண்டிப் போய்க் கிடப்பதுதான்.

இன்று ரஜினியும் கூட அரசியலுக்கு ஆசைப்பட இதுவும் கூட ஒரு காரணம்தான். இதுவே மலையாளிகளின் புத்தியுடன் தமிழர்கள் இருந்திருந்தால் நிச்சயம் ரஜினி அரசியலுக்கு ஆசைப்பட்டிருக்க மாட்டார். ரஜினி மட்டுமல்ல தமிழகத்திற்கு ஒரு எம்.ஜி.ஆரே. கூட கிடைத்திருக்க மாட்டார். ஜெயலலிதா கிடைத்திருக்க மாட்டார்.

ஆந்திராவைப் போல

ஆந்திராவைப் போல

ஆந்திராவைப் போலத்தான் தமிழகத்திலும் சினிமாவும், அரசியலும் கை கோர்த்துக் கிடக்கின்றன. என்ன ஒரு வித்தியாசம் என்றால் ஆந்திராவில் தெலுங்கு நடிகர்கள் கோலோச்சுகிறார்கள். தமிழகத்தில் தமிழ் தெரியாத பிற மொழி நடிகர்களின் ஆதிக்கம் கோலோச்சுகிறது. சினிமாவில் பிரபலமாகி விட்டால் அப்படியே அரசியலுக்கும் வந்து விடலாம் என்பது எழுதப்படாத சட்டமாகவே தமிழகத்தில் மாறிப் போயுள்ளது.

வெற்றிடம்

வெற்றிடம்

தற்போது தமிழக அரசியலில் மிகப் பெரிய வெற்றிடம் நிலவுகிறது. ஜெயலலிதா இல்லை. கருணாநிதிக்கு உடல் நிலை சரியில்லை. பிற தலைவர்களும் ஸ்டெடியாக இல்லை. உருப்படியான அரசு இல்லை. விளங்காத அரசு நிர்வாகத்தால் மக்களுக்கு தொல்லையோ தொல்லை. இந்த இடத்தை நிரப்பத்தான் ரஜினி தலையெடுக்கப் பார்க்கிறார்.

மாற்றம் நடக்கும்

மாற்றம் நடக்கும்

ரஜினி வந்தால் தமிழக அரசியலே மாறிப் போகும். தென்னிந்திய அரசியலே மாறிப் போகும். மிகப் பெரிய திருப்புமுனை ஏற்படும். அகிலஇந்திய அளவில் அது எதிரொலிக்கும் என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது. ஆனால் அப்படி நடக்க வாய்ப்பே இல்லை என்பது அரசியல் நிபுணர்களின் கருத்தாகும்.

எம்.ஜி.ஆர். அல்ல ஜெ. இடத்தைக் கூட நிரப்ப முடியாது

எம்.ஜி.ஆர். அல்ல ஜெ. இடத்தைக் கூட நிரப்ப முடியாது

உண்மையில் எம்.ஜி.ஆர். இடத்தை அல்ல, ஜெயலலிதா இடத்தைக் கூட ரஜினி நிரப்பமுடியாது என்கிறார்கள். ரஜினி பாஜகவுடன் கை கோர்த்துக் களம் குதித்தால் அவருக்கு நிச்சயம் மக்கள் ஆதரவு கிடைக்காது. காரணம், பாஜக தமிழக மக்களிடம் சம்பாதித்து வைத்துள்ள "நல்ல" பெயர்.

ரஜினியை வைத்து பாஜகவே பலனடையும்

ரஜினியை வைத்து பாஜகவே பலனடையும்

மோடி பெயரைச் சொன்னால் ரஜினிக்கு ஓட்டு கிடைக்காது. அதேசமயம், ரஜினி பெயரை வைத்து பாஜக பலனடையவே அதிக வாய்ப்புகள் உள்ளன. அதுதான் பாஜகவின் மறைமுக திட்டமும் கூட. பாஜக ஆதரவுடனோ அல்லது கட்சி ஆரம்பித்து அதை பாஜகவுடன் கூட்டணி வைத்தோ ரஜினி மக்களை சந்தித்தால் அவருக்கு நிச்சயம் தோல்வியே கிடைக்கும்.

சிரஞ்சீவி கதிதான்

சிரஞ்சீவி கதிதான்

ஆந்திராவில் இப்படித்தான் சிரஞ்சீவி கட்சி ஆரம்பித்தார். அமோக ஆதரவும் கிடைத்தது. ஆனால் தான் ஆரம்பித்த பிரஜா ராஜ்ஜியம் கட்சியை தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டது சிரஞ்சீவிக்கு. காங்கிரஸுடன் போய்ச் சேர்ந்தார். இப்போது அவரும் ஒரு அரசியல்வாதி அவ்வளவுதான். இதே நிலைதான் ரஜினிக்கும் ஏற்படும் என்று சொல்கிறார்கள்.

வயதைத் தாண்டி விட்டார்

வயதைத் தாண்டி விட்டார்

முதல் முறையாக ரஜினியைத் தேடி அரசியல் ஓடி வந்தபோது அவருக்கு 50 வயதுக்குள்தான். அப்போதே அவர் வந்திருக்கலாம். ஆனால் இன்று அவருக்கு வயதை 66. உடல் நலக்குறைபாடுகள் உள்ளன. முன்பு போல புயலாக மாறி செயல்படும் நிலையில் அவர் இல்லை என்பதே உண்மை. இதுவும் அவருக்குப் பாதகமாக அமையும் என்று சொல்கிறார்கள்.

மக்கள் மாறி விட்டார்கள் பாஸ்

மக்கள் மாறி விட்டார்கள் பாஸ்

அதை விட முக்கியமாக சினிமாக்காரர்கள் பின்னால் இளைஞர்கள் கண் மூடித்தனமாக சென்ற காலம் மெரீனா புரட்சியுடன் முடிந்து போய் விட்டது. சினிமாக்காரனாக இருந்தால் என்ன பெரிய கொம்பா என்று மக்கள் குறிப்பாக இளைஞர்கள் கேட்க ஆரம்பித்து விட்டார்கள். அந்த பைத்தியக்காரத்தனம் இப்போது வெகுவாக குறைந்து போய் விட்டது. இது வெறும் சினிமா பிரபலம் என்ற தகுதியை மட்டுமே வைத்துள்ள ரஜினிக்கு நிச்சயம் பாதகமாகவே அமையும்.

எம்ஜிஆர் வேறு.. சிவாஜி வேறு!

எம்ஜிஆர் வேறு.. சிவாஜி வேறு!

அதை விட முக்கியமாக எம்ஜிஆர் வேறு, "சிவாஜி" ராவ் கெய்க்வாட் எனப்படும் ரஜினிகாந்த் வேறு. எம்.ஜி.ஆர். நடிகராக இருந்தாலும் கூட அடி மட்ட மக்களுடன் நெருங்கிப் பழகியவர். மக்களின் பிரச்சினைகளுக்காக நடிகராக இருந்தபோதே குரல் கொடுத்தவர். மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கத் தயங்காதவர். மக்களுக்காக ஓடி வரக் கூடியவர். அரசியலையும், நடிப்பையும், மக்கள் பிரச்சினைகளையும் சமமாக பாவித்தவர். அவர் திடீர் அரசியல்வாதி அல்ல. ஆனால் ரஜினி அப்படியா?

இப்படி பல குழப்பங்கள், குளறுபடிகள், சிரமங்கள், சிக்கல்கள் உள்ளன. இதையெல்லாம் தாண்டி ரஜினி என்ற பெயருக்கு மட்டும் ஒட்டு விழும் என்று ரஜினி நினைத்தால், அவரது ரசிகர்கள் நினைத்தால்.. நிச்சயம் அவர்களுக்கு அதில் வெற்றி கிடைக்காது என்பதே நிதர்சனம்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Actor Rajinikanth cannot become another MGR for various reasons. He cannot emulate the late leader in variopus aspects.
Please Wait while comments are loading...