For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குற்றவாளியின் பிறந்தநாளை கொண்டாடுவது கேலிக்கூத்து.. ஆட்சியாளர்கள் வெட்கப்படனும்: ராமதாஸ் கொந்தளிப்பு

குற்றவாளியின் பிறந்தநாளை அரசு விழாப்போல் கொண்டாடப்படுவது கேலிக்கூத்தானது என பாமக நிறுவனர் ராமாஸ் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: ஊழல் குற்றவாளி ஜெயலலிதாவின் பிறந்தநாள் அரசு விழாவைப்போல் கொண்டாடப்படுவது கேலிக்கூத்தானது என பாமக நிறுவனர் ராமாஸ் தெரிவித்துள்ளார். இதற்காக தமிழக ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும் என்றும் ராமதாஸ் சாடியுள்ளார்.

சட்டத்தையும், நீதிமன்றங்களையும் துளியும் மதிக்காத அரசு தமிழகத்தில் தற்போது நடைபெறுகிறது என்று ராமதாஸ் கூறியுள்ளார். இதற்கு சிறந்த உதாரணம் தமிழகத்தில் இன்று நடத்தப்படும் அரசு விழாக்கள் தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் பிறந்த நாளை கொண்டாட அரசு சார்பிலும், அரசின் அழுத்தத்தால் தனியார் சார்பிலும் பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது கண்டிக்கத்தக்கது என்றும் ராமதாஸ் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் மக்களையும், சட்டத்தையும் மதிக்காமல் செயல்பட்ட ஆட்சியாளர்கள் பொதுமக்களாலும், சட்டத்தாலும் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். இன்றைய ஆட்சியாளர்களும் தங்களைத் திருத்திக் கொள்ளாவிட்டால் அவர்களும் வெகுவிரைவில் சட்டத்தாலும், பொதுமக்களாலும் தண்டிக்கப்படுவார்கள்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது,

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 69-ஆவது பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு முழுவதும் 69 லட்சம் மரக்கன்றுகளை நடும் மாபெரும் திட்டத்தை தமிழக அரசு இன்று தொடங்கியிருக்கிறது. சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசினர் பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மரக்கன்றுகளை நட்டு வைத்து இந்த மாபெரும் திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறார். இத்திட்டத்திற்காக பல கோடி ரூபாய் செலவில் நாளிதழ்களில் முழுப்பக்க விளம்பரம் செய்யப்பட்டிருக்கிறது.

தனியார் மருத்துவமனைகளுக்கு மிரட்டல்

தனியார் மருத்துவமனைகளுக்கு மிரட்டல்

அதேபோல், ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, தனியார் மருத்துவமனைகளில் சார்பில் தமிழ்நாடு முழுவதும் 690 சிறப்பு மருத்துவ முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த மருத்துவ முகாம்களை தனியார் மருத்துவமனைகள் தாமாக முன்வந்து நடத்துவது போன்ற தோற்றம் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டிருந்தாலும், இம்முகாம்கள் அனைத்தும் அரசு கொடுக்கும் அழுத்தம் காரணமாகவே நடத்தப்படுகின்றன. முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயனடையும் தனியார் மருத்துவமனைகளின் நிர்வாகிகளை தமிழக சுகாதாரத்துறை அமைச்சரும், அதிகாரிகளும் அழைத்து ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும், இல்லாவிட்டால் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்திலிருந்து உங்கள் மருத்துவமனை நீக்கப்படும் என மிரட்டல் விடுத்துள்ளனர். இதற்கு அஞ்சி தான் அம்மருத்துவமனைகள் வேறு வழியின்றி மருத்துவ முகாம்களை நடத்துகின்றன.

ஜெயலலிதாவுக்காக விழா நடத்துவதை ஏற்க முடியாது

ஜெயலலிதாவுக்காக விழா நடத்துவதை ஏற்க முடியாது

இவை தவிர ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏராளமான நிகழ்ச்சிகளுக்கு இன்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சிகளுக்காக மட்டும் ஏராளமான கோடி மக்கள் வரிப்பணம் வாரி இறைக்கப்பட்டிருக்கிறது. தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளுக்காகவோ, இந்தியாவின் விடுதலை நாள் அல்லது குடியரசு நாளுக்காகவோ இத்தனை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தால் அதற்காக மகிழ்ச்சி அடையலாம். ஆனால், மக்களின் வரிப் பணத்தைக் கொள்ளையடித்து வருவாய்க்கு மீறிய வகையில் ரூ.66.65 கோடி சொத்துக்குவித்த வழக்கில் உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்காக விழா நடத்துவதை ஏற்க முடியாது.

அப்போதும் இதேதான் நடந்தது

அப்போதும் இதேதான் நடந்தது

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா தீர்ப்பளித்ததை தொடர்ந்து ஜெயலலிதா பதவியிழந்த போது முதலமைச்சராக பதவி வகித்த ஓ.பன்னீர்செல்வமும், இப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் சட்டத்தையும், நீதிமன்றத்தையும் மதிக்காமல் இதுபோன்ற செயல்களில் தான் ஈடுபடுகின்றனர். ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு, பதவி இழந்து அமர்ந்திருந்த போது 2015-ஆம் ஆண்டில் ஜெயலலிதாவின் 67-ஆவது பிறந்தநாளையொட்டி, இதேபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும்

ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும்

இப்போது ஜெயலலிதாவின் பிறந்த நாள் அறிவிக்கப்படாத அரசு விழாவாக நடத்தப்படுகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, ஓர் ஊழல் குற்றவாளியின் பிறந்த நாளை கிட்டத்தட்ட அரசு விழாவைப் போல கொண்டாடப்படுவது கேலிக்கூத்தானது. இதற்காக தமிழக ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும்.

நீதிபதியின் அழைப்பு அரசுக்கும் பொருந்தும்

நீதிபதியின் அழைப்பு அரசுக்கும் பொருந்தும்

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதி அமிதவா ராய், "உயிர்க்கொல்லி தீமையான ஊழலின் பிடியிலிருந்து குடிமக்கள் சமுதாயத்தை மீட்க வேண்டும். நமது முன்னோர் மற்றும் இந்திய விடுதலைக்காக போராடிய தியாக சீலர்களால் கனவு காணப்பட்ட நிலையான, நியாயமான, உன்னதமான சமூக அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்பினால், இப்புனித பணியில் ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்" என்று அழைப்பு விடுத்தார். சாதாரண குடிமகனுக்கான இந்த அழைப்பு தமிழக அரசுக்கும் பொருந்தும்.

சட்டத்தை அவமதிக்கும் தமிழக அரசு

சட்டத்தை அவமதிக்கும் தமிழக அரசு

அதுமட்டுமின்றி, ஊழல் குற்றவாளியான ஜெயலலிதாவின் புகைப்படங்களை அரசு அலுவலகங்களில் இருந்து அகற்ற வேண்டும், ஜெயலலிதாவை குறிக்கும் வகையில் அம்மா என்ற பெயரில் செயல்படுத்தப் பட்டு வரும் திட்டங்களின் பெயர்களை மாற்ற வேண்டும் என அரசுக்கு ஆணையிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. ஆனால், இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் ஜெயலலிதாவின் பிறந்த நாளை அரசு விழாவாக தமிழக அரசு கொண்டாடுகிறது என்பதிலிருந்தே சட்டத்தையும், நீதிமன்றங்களையும் எவ்வளவு மோசமாக அவமதிக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.

விரைவில் தண்டிக்கப்படுவார்கள்

விரைவில் தண்டிக்கப்படுவார்கள்

ஆட்சி, அதிகாரம் கைகளில் இருப்பதால் ஆட்சியாளர்கள் இப்படி ஆட்டம் போடலாம். கடந்த காலங்களில் மக்களையும், சட்டத்தையும் மதிக்காமல் செயல்பட்ட ஆட்சியாளர்கள் பொதுமக்களாலும், சட்டத்தாலும் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். இன்றைய ஆட்சியாளர்களும் தங்களைத் திருத்திக் கொள்ளாவிட்டால் அவர்களும் வெகுவிரைவில் சட்டத்தாலும், பொதுமக்களாலும் தண்டிக்கப்படுவார்கள் என்பது உறுதி. இவ்வாறு பாமக நிறுவனர் ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

English summary
PMK founder Ramadoss condemns government for spending public money to celebrate culprit Jayalalitha's birthday. Its a Shame for rulers in Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X