For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மதுக்கடைக்கு எதிராக போராடிய பெண்களை கைது செய்வதா? ராமதாஸ் கண்டனம்

சிவகாசியில் மதுக்கடைக்கு எதிராகப் போராடிய 21 பேர் மீது வழக்குப் பதிவு செய்தது கண்டனத்துக்குரியது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: சிவகாசியில் மதுக்கடைக்கு எதிராக போராட்டம் நடத்திய பாமக மாநிலத் துணைத்தலைவர் திலகபாமா உள்ளிட்ட 14 பெண்களையும், 7 ஆண்களையும் காவல்துறையினர் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

சிவகாசியில் நெடுஞ்சாலையில் இருந்து அகற்றப்பட்ட மதுக்கடையை சிவகாசி கவிதா நகரில் திறக்க அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால், மக்களின் எதிர்ப்பையும் மீறி கவிதா நகரில் மதுக்கடை திறக்கப்பட்ட நிலையில், அக்கடையின் முன் பாமக மாநிலத் துணைத் தலைவர் திலகபாமா தலைமையில் பெண்களும், ஆண்களும் திரண்டு போராட்டம் நடத்தினர்.

Ramadoss statement about Anti-Tasmac protests in sivakasi

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் காவல்துறையினர் மிகவும் மரியாதைக் குறைவாக நடந்துள்ளனர். மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அங்கு கிடந்த கழிவுத்தாள்களை எரித்துள்ளனர். ஆனால், அவர்கள் மதுக்கடைக்கே தீ வைத்து எரித்ததாகக் கூறி அவர்களை கைது செய்துள்ளனர்.

போராட்டம் நடத்திய பெண்களை கைது செய்த காவல்துறையினர், சில பெண்களை தாக்கியுள்ளனர். மருத்துவ ஆய்வுக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட திலகபாமாவை பார்ப்பதற்காக வந்த அவரது கணவர் மகேந்திர சேகரை, அப்பகுதியின் மூத்த மருத்துவர் என்று கூட பார்க்காமல் காவல்துறையினர் தாக்கியுள்ளனர். கவிஞர் திலகபாமா உள்ளிட்ட பெண்கள் மீது அவர்கள் செய்யாத குற்றங்களையெல்லாம் செய்ததாக பொய் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

சென்னை அருகில் மதுக்கடைக்கு எதிராக போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், ''மதுக்கடைகளுக்கு எதிராக போராடுவது குற்றமா? மதுவுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களைக் கூட காவல்துறை கைது செய்யுமா?'' என்று வினா எழுப்பி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, மதுக்கடைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை கைது செய்யக் கூடாது என்றும் ஆணையிட்டுள்ளார். ஆனால், அதையும் மீறி திலகபாமாவை காவல்துறை கைது செய்திருப்பதிலிருந்தே மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டத்தை ஒடுக்க தமிழக அரசு எவ்வளவு தீவிரம் காட்டுகிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

மதுவை விற்று மக்களைக் கெடுத்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு மட்டுமே ஆட்சி நடத்த அரசு விரும்புகிறது. மதுவை விற்க வேண்டும்; அதன்மூலம் ஆளும் அதிமுக மற்றும் திமுக மது ஆலைகளுக்கு வருவாயை உறுதி செய்ய வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கும் தமிழக அரசு, அதற்காக எதையும் செய்ய துணிந்திருக்கிறது. அதன் விளைவு தான் தமிழகம் முழுவதும் மதுக்கடைக்கு எதிராக போராடும் பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறையாகும்.

திருப்பூர் சாமளாபுரத்தில் மதுக்கடைக்கு எதிராக போராட்டம் நடத்திய பெண்கள் மீது கொடூரமான முறையில் காவல்துறை தாக்குதல் நடத்தியது. போராட்டத்தில் ஈடுபட்ட அப்பாவி பெண்ணைக் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் கன்னத்தில் அறைந்ததால் அவரது செவித்திறன் பாதிக்கப் பட்டது.

இதுதொடர்பாக பாமக தொடர்ந்த அவசர வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், 'காவல்துறை தாக்குதலில் காயமடைந்த அனைவருக்கும் அவர்கள் விரும்பும் மருத்துவமனையில் மருத்துவம் அளிக்கப்பட வேண்டும். மக்களைத் தாக்கிய காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்று ஆணையிட்டனர்.

ஆனால், பாண்டியராஜன் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதற்குள்ளாக சிவகாசியில் மதுவுக்கு எதிராக போராடிய பெண்கள் மீது அடக்குமுறையும், பொய்வழக்குகளும் ஏவப்பட்டிருக்கின்றன. ஆட்சியாளர்களின் ஒப்புதல் இல்லாமல் மக்களுக்கு எதிராக இத்தகைய தாக்குதலை காவல்துறை தொடுத்திருக்காது.

உண்மைக்காகவும், நன்மைக்காகவும் போராடும் மக்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடும் எந்த ஆட்சியும் நீடித்ததாக வரலாறு இல்லை. இதை உணர்ந்து சிவகாசியில் பாமக துணைத்தலைவர் திலகபாமா உள்ளிட்ட 21 பேர் மீது தொடரப்பட்ட வழக்குகளை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். அதுமட்டுமின்றி, குடியிருப்புப் பகுதிகளில் மதுக்கடைகளை திறக்கும் திட்டத்தையும் கைவிட வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

English summary
Pmk founder Dr.Ramadoss has issue the statement about Anti-Tasmac protests in sivakasi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X