For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2 உயிர்களை பலி வாங்கிய சேவல் சண்டை: போலீசுக்கு சமூக ஆர்வலர் எச்சரிக்கை

Google Oneindia Tamil News

கரூர்: கரூர் அருகே நடைபெற்ற சேவல் சண்டையில் 2 பேரின் உயிரை பலி வாங்க காரணமாக இருந்த போலீஸ் மற்றும் வருவாயத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவிட்டால் நீதிமன்றம் செல்ல உள்ளதாக சமூக ஆர்வலர் கருப்பையா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கரூர் மாவட்டம் அரவாக்குறிச்சி அருகே பூலாம்வலசு என்ற இடத்தில் சேவல் சண்டை கடந்த பல வருடமாக நடைபெற்று வருகின்றது. கடந்த 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை பொங்கல் திருவிழாவை முன்னிட்டு அரவக்குறிச்சி பூலாம்வலசு, கோவிலூர் உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் அனுமதியுடன் சேவல் சண்டை நடைபெற்று வந்தது.

இதில் சேவல் காலில் கத்தி கட்டக் கூடாது, சேவலுக்கு மதுபானங்களை கொடுக்கக் கூடாது, பணம் கட்டி சூதாட்டம் நடத்தக் கூடாது, பலத்த போலீஸ் பாதுகாப்பு மற்றும் சண்டைக்கு முன் சேவல்களை கால்நடை டாக்டர்கள் பரிசோதனை செய்த பிறகே அனுமதி அளிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

ஆனால் சேவல் காலில் கத்தியை கட்டி சேவல் சண்டையும், அதைத் தொடர்ந்து சூதாட்டமும் போலீஸார் முன்னிலையிலே நடைபெற்றதாக குற்றம் சாட்டப்படுகின்றது.

இந்த நிலையில் திருச்சி, வெள்ளகோவில், காங்கயம், பொள்ளாச்சி, மூலனூர், சேலம், வேடசந்தூர், திண்டுக்கல், பழனி, திருநெல்வேலி, போன்ற ஊர்களில் இருந்தும் கேரளா, கர்னாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் சிறியவர் முதல் பெரியவர் வரை ஆயிரக்கணக்கானவர்கள் இரண்டு சக்கர வாகனங்களிலும், ஜீப்களிலும் ஆர்வமுடன் கட்டுச் சேவல்களோடு வந்தனர்.

அப்போது அவர்களில் சிலரிடம் பேசிய போது, சேவல்கள் இயல்பாகவே ஆக்ரோஷத்துடன் சண்டையிடும் குணம் கொண்டது. என்பதால், அதில் பெரு விடைக் கோழி என்ற ரகத்தை தேர்வு செய்து சண்டைச் சேவலாகவே தனி ஊட்டம் கொடுத்து வளர்த்து சண்டையிட வைத்து வருகின்றோம்.

கிராமங்களில் சண்டை சேவல்களால் வருமானமும், கவுரவமும் தேடிவரும் என்பதால், பெற்ற குழந்தைகளை விட கண்ணும் கருத்துமாக இதை வளர்த்து வருகின்றோம் என்கின்றனர் பெருமிதமாக.

சேவல் போட்டி நடைபெறும் இடத்தில் சிறப்பு பயிற்சி பெற்ற கட்டாலிகள் மூலம் சேவல்களின் வலது கால் பின் விரலில் கூர்மையான கத்தியை கட்டி விட்டு சண்டையிட வைக்கின்றனர். இதில் வெற்றி பெறும் சேவலுக்கு வெற்றி என்றும், தோல்வி பெறும் சேவலுக்கு கோட்சை என்றும் பெயராம்.

இந்த நிலையில் கத்தியை பயன்படுத்தாமல் சேவல் சண்டை நடத்த பொது மக்கள் அனுமதி கோரியதையடுத்து ஜனவரி 13ம் தேதி முதல் மீண்டும் அரவக்குறிச்சி பகுதிகளில் சேவல் சண்டை போட்டிகள் பொங்கல் பண்டிகை தினத்திலிருந்து தொடர்ந்து 4 நாள்கள் நடைபெற்றது. முதல் நாள் போட்டி எந்தவித அசம்பாவிதமும் இன்றி மிக உற்சாகமாக நடைபெற்றது.

இரண்டாம் நாள் போட்டியின் போது அரவக்குறிச்சி பூலாம்வசு மற்றும் கோவிலூரில் சிலர் சேவல்களின் காலில் கத்தியை கட்டிவிட்டு சண்டையிட வைத்துள்ளனர். அப்போது அங்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த திருப்பூரைச் சேர்ந்த தொழிலாளி சசிகுமார் மற்றும் ஈரோடு கருங்கல்பாளையத்தைச் சேர்ந்த பாலாஜி ஆகிய இருவர் மீது சேவலின் காலில் இருந்த கத்தி குத்தி கிழித்ததில் இருவரும் பரிதாபமாக பலியானர்கள்.

இதையடுத்து ஜனவரி 16ம் தேதி கரூர் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட இடங்களில் சேவல் கட்டு ரத்து செய்யப்பட்டது. மேலும், மாவட்டத்தில் எந்த பகுதியிலும் சேவல் சண்டை நடத்தக் கூடாது என மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

இந்த சேவல் சண்டை குறித்து, சமூக ஆர்வலர் கருப்பையா நம்மிடம் கூறுகையில்,

சேவல் சண்டை நடைபெறும் இடங்களில் பெட்டிங் ரூ. 500 முதல் துவங்கி அதிகபட்சமாக ரூ. 2 லட்சம் வரை நடைபெறுகிறது. வெற்றி பெற்ற பல சேவல்கள் மூலம் பல லட்ச ரூபாய் கிடைப்பதால் இதற்காகவே என்று தனியாக புரோக்கர்கள் உள்ளனர். பெட்டிங்கில் பலர் பணத்தை மட்டுமல்லாது நகைகளை கூட இழந்துள்ளனர்.

சேவல் சண்டை நடக்கும் ஏரியாக்களில் காவல் நிலையத்திற்கு போட்டி நடைபெறும் நாள் அன்று ரூ 3000 முதல் 10,000 வரை மாமூலாக கொடுத்து விடுவதால் போலீஸார் சேவல் சண்டையின் கொடூரங்களை கண்டு கொள்ளாமல் இருந்து விடுகின்றனர்.

சேவல் சண்டையின் போது சேவல்கள் கால்களில் கூர்மையான கத்தியை கட்டி சண்டைக்கு விடுகின்றனர். அப்போது ஒரு சேவல் மற்ற சேவலை தாக்கும் போது கத்தி பட்டு ரத்தம் ஒழுகும். அந்த வலியையும் தாங்கிக் கொண்டு சேவல்கள் மீண்டும் சண்டை போட்டு மடிந்து கீழே விழும் போது பார்க்கவே பரிதாபமாக இருக்கும். இப்படி ஒரு போட்டி, இந்த கம்ப்யூட்டர் யுகத்தில் தேவையா என தோன்றுகின்றது.

எனவே, சேவல் சண்டையின் போது கருணை அடிப்படையில் சேவல் கால்களில் கத்தி கட்ட அரசு தடை விதிக்க வேண்டும். இது குறித்து தமிழக டிஜிபி-க்கு பொங்கல் முன்பே கடிதம் அனுப்பியுள்ளோம். ஆனால் அதை அவர்கள் கண்டு கொள்ளவே இல்லை.

இந்த முறை வேல் சண்டை என்ற பெயரில் சூட்டம் நடத்துவர்களை கண்டறிந்து அவர்கள் மீது காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், சூதாட்ட புள்ளிகளிடம் பல ஆயிரம் மாமூலை வாங்கிக் கொண்டு கையை கட்டி வாயைப் பொத்தி வேடிக்கை பார்க்கும் காக்கிகளை உரிய ஆதராங்களுடன் நீதி மன்ற படிக்கட்டுகளி்ல் ஏறுவோம் என்றார் ஆவேசமாக.

சேவல் சண்டையில் சூதாட்டம் இருக்கக் கூடாது, கூர்மையான பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது, கால்நடைத் துறை மருத்துவரிடம் பதிவு செய்த பின்பே சேவல்களை சண்டையில் பங்கேற்கச் செய்ய வேண்டும். சண்டை முடிந்த பிறகு சேவல்களை கால்நடை துறை மருத்துவர் பரிசோதித்து சான்றிதழ் அளிக்க வேண்டும். விதிமுறைகளை மீறமாட்டேன் என நிகழ்ச்சியை நடத்துபவர் உத்திரவாத பத்திரம் அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட விதிமுறைகளின் அடிப்படையில் சேவல் சண்டைக்கு அனுமதி வழங்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் கூறுகிறது.

ஆனால், இத்தகைய விதிமுறைகள் எதையும் கடைப்பிடிக்காமல் சேவல் கட்டில் விதிமுறைகள் காற்றில் பறக்கவிடப்பட்டதால், இருவர் பலியான சோகம் நேர்ந்துள்ளது. சேவல் கட்டை பொறுப்பேற்று நடத்தியவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன, விதிமுறைகள் பின்பற்றப்படாததைக் கண்காணிக்கத் தவறிய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறை தரப்பில் கேட்ட போது, சேவல் கட்டு நடத்த விதிமுறைகளை மாவட்ட நிர்வாகம் தான் வகுத்து அனுமதி வழங்குகிறது. அதற்கும் எங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்கின்றனர். மேலும், இந்த சேவல் சண்டையில் இருவர் பலியான சம்பவம் குறித்து வழக்குhdபதிவு செய்துள்ளோம். விரைவில் குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம் என்றனர்.

இந்த சேவல் சண்டையை நடத்தியவர் அதிமுக முக்கிய நிர்வாகி என்பதால், அவர் மீது வழக்குப் பதிவு செய்ய அரவக்குறிச்சி காவல் நிலைய அதிகாரிகள் தயக்கம் காட்டுகின்றனர்.

மேலும், இந்த சேவல் சண்டை குறித்து மாவட்ட எஸ்.பி.ஜோஜி நிர்மல்குமாருக்கு தனிப்படை போலீசார் தவறான தகவல் கொடுத்துள்ளதால், அவரும் இந்த விவகாரத்தில் அமைதி காத்து வருகின்றார்.

சேவல் சண்டை நடைபெறும் முன்பே தடை விதிக்கக் கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். அப்போது எல்லாம் மாவட்ட கலெக்டர் ஜெயந்தி கண்டு கொள்ளவே இல்லை. ஆனால், இந்த சேவல் சண்டையில் இருவர் பலியான பின்பு மாவட்டம் முழுக்க சேவல் சண்டைக்கு தடை விதித்தார். அவர் தாமதமாக செயல்பட்டதால் இரண்டு அப்பாவி உயிர்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.

English summary
Two lives were lost during a rooster fight in Karur. Social activist Karupiah told that if proper action is not taken against police and revenue department officials for being careless in rooster fight he will approach court for justice.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X