சென்னையில் 250 செ.மீ. மழை கொட்டுமா? நாசா கூறியதாக வாட்ஸ்அப்பில் பரவும் வதந்தி
சென்னை: தமிழகத்தை நவம்பர் 22ம் தேதி மிகப்பெரிய புயல் தாக்கும் என்று பஞ்சாங்கத்தை ஆதாரமாக வைத்து வாட்ஸ் அப்பில் தகவல் பரவிய நிலையில், சென்னையில் நவம்பர் 21 அல்லது 22 ஆம் தேதி 250 செமீ அளவுக்கு மழை பெய்யும் என்று நாசா கூறியதாக வாட்ஸ்அப்பில் அதிர்ச்சி தகவலை பரப்பி வருகின்றனர். இந்த செய்தியில் உண்மையில்லை என்றும் இது வெறும் வதந்திதான் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலானவர்களின் வாட்ஸ்அப் செயலிக்கு அதிர்ச்சி செய்தி ஒன்று பகிரப்பட்டு வருகிறது. அதில், சென்னையில் 21 அல்லது 22 ஆம் தேதி கடும்புயல் வீசும். மேலும் இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு 250 செ.மீ மழை கொட்டித்தீர்க்கும். மேலும், மத்திய அரசு சார்பில் 3000 தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தமிழ்நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் முப்படையினரும் அதிக எச்சரிக்கையுடன் உள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், நாசா-வின் முன்னெச்சரிக்கை எப்போதும் தவறானது இல்லை என்றும் இந்தியாவின் சி.என்.என்.-ஐ.பி.என் தொலைகாட்சி இச்செய்தியை நேரலையாக ஒளிபரப்பி வருகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இச்செய்தி குறித்து விளக்கம் அளித்துள்ள வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன், சென்னையில் வரும் நாள்களில் லேசான மழை பெய்யலாம் என்றும், மேலும், சி.என்.என்.-ஐ.பி.என் தொலைகாட்சியும் நாசா-வின் எச்சரிக்கை குறித்த எவ்வித செய்தியையும் ஒளிபரப்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.
நாசா-வின் எச்சரிக்கை செய்தி கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் தேதி, ஹெலன் புயல் வீசியபோது விடுக்கப்பட்டது என சில இணையதள செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன.
35 செ.மீ மழைக்கே சென்னையும் புறநகர் பகுதிகளும் மூழ்கிவிட்டன. ஆனால் 250 செ.மீ மழை பெய்தால் என்னவாகும் சென்னை என்று நினைத்து பலரும் அச்சமடைந்துள்ளனர். மழை, வெள்ளத்தால் சென்னை வாழ் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தகைய விஷம செய்திகளை பரப்புவர்கள் மீது சைபர் க்ரைம் போலீஸார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications