பேரா. ஜெயராமன் மீது தேசத்துரோக வழக்கா?... அடக்குமுறையை நிறுத்துங்கள்.. சீமான் எச்சரிக்கை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : பேராசிரியர் ஜெயராமன் மீது போடப்பட்டுள்ள தேசத்துரோக வழக்கினை ரத்து செய்யக்கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். போராட்டக்காரர்கள் மீதான அடக்குமுறைகளை அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது : தமிழ்த்தேசிய இனத்தின் பெருமைமிகு ஆளுமையாகத் திகழ்கிற மண்ணுரிமைப்போராளி பேராசிரியர் த.ஜெயராமன் அவர்கள் எழுதிய, 'நதிநீர் இணைப்புத்திட்டம் - ஆறுகளைப் பிடுங்கி விற்கும் இந்தியா' எனும் நூலுக்காகத் தேசத்துரோக வழக்குத் தொடுக்கப்பட்டிருப்பது ஜனநாயக மாண்புகளுக்கும், நெறிகளுக்கும், கருத்துரிமைக்கும் முற்றிலும் எதிரானதாகும்.

நீண்ட நெடிய காலமாகவே அடிமைத்தேசிய இனமாய்த் தாழ்த்தி வீழ்த்தப்பட்டுக் கிடக்கிற அன்னைத்தமிழ்ச்சமூகத்தின் விடுதலைக்காக மாபெரும் சிந்தனைகளைத் தனது எழுத்துகளின் மூலமாகவும், பேச்சுகளின் மூலமாகவும், வலிமைமிக்கக் களப்போராட்டங்களின் வாயிலாகவும் விதைத்துவரும் பேராசிரியர் ஜெயராமன் மீது இந்திய ஒற்றுமைக்குத் தீங்கு விளைவித்ததாகக்கோரி தேசத்துரோக வழக்குப் பாய்ச்சப்பட்டிருப்பதனை எதன்பொருட்டும் ஏற்க முடியாது. தமிழக அரசின் இந்த அடக்குமுறை போக்கானது காட்டாட்சி தர்பார் நடத்துகிற சர்வாதிகார மனநிலையினையே வெளிக் காட்டுகிறது. மாற்றுக்கருத்தினை முன்வைப்பவர்களையும், ஆட்சியாளர்களை விமர்சிப்பவர்களையும் சிறைப்படுத்தி வதைப்படுத்தினால் தாங்கள் ஆடும் ஆட்டங்களுக்கு எதிர்க்குரலெழுப்ப ஆளிலிருக்காது என்கிற மமதையில் இந்த வகை அடக்குமுறைகள் ஏவப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

 கைப்பாவையாக மாறிய அரசு

கைப்பாவையாக மாறிய அரசு

பாஜக அரசானது பதவியேற்றது முதல் ஆட்சிக்கு எதிரான விமர்சனங்களை முன்வைப்போரையும், மக்களுடன் களத்தில் போராடுவோரையும், கருத்தியல் பரப்புரையில் ஈடுபடுவோரையும், பகுத்தறிவு சிந்தனையாளர்களையும், முற்போக்கு எழுத்தாளர்களையும் ஆளும் வர்க்கத்தின் துணைகொண்டு மிரட்டுவது, தாக்குவது, கொலைசெய்வது போன்ற கொடுஞ்செயல்கள் நாடு முழுக்க நடந்தேறி வருகின்றன. பாஜகவின் கைப்பாவையாக முழுமையாக மாறிவிட்ட அதிமுக அரசு அதனைப்போலவே தமிழகத்தையும் களம் அமைக்கத்துடிக்கிறது.

 அடக்க நினைக்கிறார்கள்

அடக்க நினைக்கிறார்கள்

வளர்மதியின் கைது, பேராசிரியர் ஜெயராமன் கைது என ஆளும் வர்க்கத்திற்கு எதிராகப் பரப்புரை செய்வோரையெல்லாம் அந்தவகையில்தான் அடக்கிஒடுக்க முனைகிறார்கள். அதிலும் பேராசிரியர் ஜெயராமன் போன்ற அரசியல் தளங்களுக்கு அப்பாற்பட்ட சிந்தனையாளர்கள் மீது பொய்வழக்கு புனைந்து சிறையிலடைத்து அடக்குமுறையை ஏவுவது தமிழகத்தில் தொடர்கதையாக மாறியிருக்கிறது.

 வழக்கிற்கு மேல் வழக்கு

வழக்கிற்கு மேல் வழக்கு

மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுத்தல், ஒ.என்.ஜி.சி. எண்ணெய்க் குழாய்களைப் பதித்தல் போன்ற பேராபத்து மிக்கத் திட்டங்களுக்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராடும் சமரசமற்ற போராளியாகப் பேராசிரியர் ஜெயராமன் அவர்கள் திகழ்வதால் ஆளும் வர்க்கத்திற்கு எழுந்த காழ்ப்புணர்ச்சியே அவர் மீது இதுபோன்ற பொய் வழக்குகளைப் புனையச் செய்திருக்கிறது. ஏற்கனவே, கதிராமங்கலத்தைக் காப்பதற்கான போராட்டத்தில் கைதாகி குண்டர் சட்டம் பாய்ச்சப்பட்டு அரசின் பல்வேறு விதமான அடக்குமுறைகளுக்கு உள்ளான அவர் மீது மீண்டும் தேசத்துரோக வழக்குப் பாய்ச்சப்பட்டிருப்பது கொடுமையிலும் கொடுமை என்றே கருதுகிறேன்.

 திரும்பப் பெற வேண்டும்

திரும்பப் பெற வேண்டும்

பேராசிரியர் ஜெயராமன் அவர்கள் தனிமனிதரல்ல! தமிழ்த்தேசிய இனத்தின் போர்க்குணமிக்கப் பேராளுமை என்ற வகையில் அவர் மீதான தேசத்துரோக வழக்கு பாய்ச்சப்பட்டிருப்பதை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. அவர் மீது புனையப்பட்டிருக்கும் தேசத்துரோக வழக்கு உள்ளிட்ட பொய்யான வழக்குகள் யாவற்றையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

 போராட நேரிடும்

போராட நேரிடும்

சமூகச்செயற்பாட்டாளர்கள் மீது தொடர்ச்சியாக ஏவப்படும் இந்த அடக்குமுறைகளைத் தமிழக அரசானது உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன். மாறாக, இது தொடரும்பட்சத்தில், மக்களை அணிதிரட்டி மாபெரும் போராட்டங்களை ஆளும் வர்க்கத்தின் அடாவடித்தனத்திற்கு எதிராக முன்னெடுப்போம் என எச்சரிப்பதாக சீமான் கூறியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Naam thamizhar party organiser Seeman condemns the sedition case filed against Professor Jayaraman and warned the government not to book the activists under these charges.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற