நான் சீமானாக இருந்தால் என்ன? சைமனாக இருந்தால் என்ன?.. என் கொள்கைகளை பாருங்க.. சீமான் நச்!

சென்னை: எனது பெயரும் மதமும் எதுவாக இருந்தால் என்ன, எனது கோட்பாடுகள், கொள்கைகள் ஆகியவற்றில் ஏதேனும் குறையிருக்கிறதா என்று பாருங்கள் என்று சீமான் தெரிவித்தார்.
சீமான் இந்து அல்ல என்று கிறிஸ்துவரான தனது அடையாளத்தை அவர் மறைக்கிறார் என்றும் பேச்சுகள் எழுந்தன. மேலும் அவரது பெயர் சைமன் என்றும் கூறப்படுகிறது. அதிமுக அரசு குறித்தும், சீமானின் பெயர் விவகாரம் குறித்தும் சன் நியூஸ் சேனலில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சீமானில் கேட்கப்பட்டது.
அதற்கு அவர் பதில் அளிக்கையில், ஈழம் என்பது அரசியல் அல்ல அவசியம் என்பேன். ஈழ விடுதலை என்பது என் இனத்தின் விடுதலை என்பேன். தமிழ்நாட்டுக்கென்று ஒரு தனி அமைப்பில்லை. அதை பேசுவதே பைத்தியக்காரத்தனம், இந்தியாவின் அமைப்புதான் தமிழகத்துக்கும். கமல், ரஜினி போன்றோர் எதிர்த்து பேசியிருக்க வேண்டியது மத்திய அரசைத்தான். பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ11,400 கோடியை எடுத்துக் கொண்டு சென்ற நீரவ் மோடியை கமல் எதிர்க்கவே இல்லை. கமல் என்னுடன் கூட்டணிக்கு வந்தால் ஏற்பேன்.

முருகனை போற்றுவது மரபு
அவர் மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் வரட்டும். ஆனால் எங்கள் கொள்கைகளை ஏற்க வேண்டும். என்னுடைய கொள்கை எனக்கு இந்த நிலமும் அதிகாரமும் தேவைப்படுகிறது. முருகனை போற்றுவது எனது இன மரபு.

தாய்-தந்தை வைத்த பெயர்
நான் தமிழன்தான். எனது பெயர் சீமான். ஆனால் என் மீது குறையே சொல்ல முடியாது என்பதற்காக இந்த ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் என்னை சைமன் என்றும் கிறிஸ்துவர் என்றும் கூறிவருகின்றனர். இதற்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது. என்னுடைய பெயர் என்ன என்பதை என் தாய்- தந்தையிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். அதை விட்டு விட்டு யார் யாரோ சொல்வதை கேட்பது என்ன நியாயம்.

சிந்தனைகளில் குறை உள்ளதா?
என்னை கிறிஸ்துவர் என்று கூறும் அந்த இயக்கத்தினர் இந்துக்களாக இருந்து என்ன செய்துவிட்டார்கள். நான் எனது அடையாளத்தை மறைக்கவில்லை. அதற்காக முருகனை கும்பிடவும் இல்லை. நான் எப்படி இருந்தால் என்ன, என் பெயர் என்னவாக இருந்தால் என்ன. எனது கருத்துகள், சிந்தனைகளில் குறை இருந்தால் கூறுங்கள். என் முகத்தை பார்க்காமல் முடியை ஏன் பார்க்கிறீர்கள்?.

எடப்பாடி ஆட்சிக்கு மதிப்பெண்களா?
காவிரி விவகாரத்தில் எடப்பாடி அரசு கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டம் சரியானது. பிரதமர் சென்னைக்கு வரும்போது எதிர்ப்பு வந்துவிட கூடாது என்பதற்காகவே எடப்பாடி அரசு இந்த கூட்டத்தை கூட்டியதாக கூறப்படுகிறது. எடப்பாடி ஆட்சிக்கு 100-க்கு எத்தனை மார்க் போடுவீர்கள் என்று கேட்கிறீர்கள். இந்த பேப்பரை நான் திருத்தவே மாட்டேன். அவர்களை குறை சொல்லி ஒன்றும் இல்லை.

பினாமி பாஜக ஆட்சி
இது ஜெயலலிதா ஆட்சியின் நீட்சி. தற்போது பாஜகவின் பினாமி அரசு. அதிமுகவின் இரு அணிகளையும் இணைத்ததே பிரதமர்தான் என்று ஓபிஎஸ் கூறுவதிலேயே தெரிகிறது. இதில் தலையிட்டவர்கள் ஆட்சியிலும் தலையிட்டு கருத்து சொல்லியிருக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!