For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழர் - பிறமொழியாளர் இடையே பிரிவினையை உண்டாக்குகிறேனா?- சீமான்

By Shankar
Google Oneindia Tamil News

சீமான்...

அதிரடிப் பேச்சுக்காரர், தெளிவான அரசியல் பாதை, அணுகுமுறையுடன் தேர்தல் களத்தில் ஒரு ஆச்சர்யக்குறியாய் நிற்கிறார்.

2011-ல் காங்கிரஸ் என்ற மிகப் பெரிய கட்சி மண்ணைக் கவ்வ முக்கிய காரணமாக அமைந்தது, சீமானின் அனல் பறக்கும் பேச்சுகள்.

`கடலூர் கூட்டத்தில் 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிவிக்கப்போகிறேன்` என்று சீமான் சொன்னபோது, அவரது நெருங்கிய தம்பிகள் தவிர அனைவரும் அவரை ஏளனமாகவே பார்த்தார்கள். அன்று திரண்ட கூட்டமும், நடுவில் ஒரு சொட்டு நீர் கூட அருந்தாமல் 165 நிமிடங்களுக்கு சீமான் ஆற்றிய அர்த்தம் பொதிந்த ஆவேசப் பேருரையும், 2021ல் அல்ல வரும் 2016 தேர்தலிலேயே என்னவோ நடக்கப் போகிறது என்கிற அச்சத்தை ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு ஏற்படுத்தியிருக்கிறது.

பணம் வெள்ளமாய் பாய்ந்தோடவிருக்கும் இந்தத் தேர்தலில், எந்த தைரியத்தில் 234 தொகுதிகளிலும் தனித்து வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளீர்கள் என்று கேட்டால், "மக்கள் பணிதானே செய்ய வருகிறோம். வியாபாரம் செய்யவோ, கொள்ளையடிக்கவோ அல்லவே... மக்கள் பணி செய்ய எதற்கு பணம்? அதிகாரம் எங்களிடம் இருந்தால் மக்களுக்கு என்னவெல்லாம் செய்ய முடியும் என்று சொல்லி களத்தில் நிற்கிறேன். அதற்கு வாக்களித்தால் போதும்," என்கிறார் சீமான்.

Seeman's Question & Answer series part -1

`நாங்களும் எங்கள் `ஒன் இந்தியா` வாசகர்களும் உங்களிடம் கேட்பதற்கு நிறைய கேள்விகள் வைத்திருக்கிறோம்' என்ற போது `மணிக்கணக்கா பேசி முடிச்சாலும் ஒரு வார்த்தை கூட புரியாத தலைவனல்ல நான். என்கிட்ட என்ன வேணும்னாலும் கேளுங்க. பதில் சொல்றேன்` என்று ஒரு போடு போட்டார் சீமான். அதுதான் இந்த `கேள்விகளால் ஒரு வேள்வி செய்வோம்`.

இனி சீமானுடன்...

கேள்வி: ஒரு திரைத்துறை கலைஞராக உள்ளே வந்த நீங்கள், அரசியலைக் கையிலெடுக்க வேண்டிய அவசியம் என்ன?

சீமான்: அரசியல் இல்லாமல் ஒண்ணுமே இல்ல. ஒரு மனிதனுடைய பிறப்பிலிருந்து இறப்பு வரை அனைத்தையுமே தீர்மானிப்பது அரசியலா இருக்கு. பிறப்புச் சான்றிதழ் முதல் இறப்புச் சான்றிதழ் வரை, காலையில் பிதுக்குகிற பற்பசை, குடிக்கிற தேநீர், படிக்கிற பாடம், பார்க்கிற வேலை, வாங்குகிற சம்பளம், இவை எல்லாத்தையுமே தீர்மானிப்பது அரசியலா இருக்கு. அரசா இருக்கு. அந்த அரசைத் தீர்மானிப்பது அரசியல். எனக்கான அரசியலை நான் தீர்மானிக்காம வேற யார் தீர்மானிக்க முடியும்? இது நமது கடமை. அரசியல் வேண்டாம் என நினைப்பது வானமே இல்லாத பூமியின் கீழே வாழப் போகிறேன் என்பதற்கு ஒப்பானது. உலகத்தையே இரண்டு இயல்கள்தான் இயக்குகின்றன. ஒன்று அறிவியல். இன்னொன்று அரசியல். உலகை இயக்கும் அந்த அறிவியலையே இயக்குவது அரசியலா இருக்கு. இவ்வளவு வலிமை பெற்ற அரசியலை நாம் செய்யாமல் வேறு யார் செய்வது?

கேள்வி: இப்போதுள்ள அரசியல் - சமூகச் சூழலில் நீங்கள் நினைக்கிற அரசியலைச் செய்ய முடியும்னு நம்பறீங்களா?

சீமான்: எதுவுமே முடியுமா சாத்தியமா என்பதிலிருந்து பிறப்பதில்லை. தேவையா தேவையில்லையா என்பதிலிருந்துதான் பிறக்கிறது. சாத்தியத்திலிருந்து எதுவும் பிறப்பதில்லை. தேவையிலிருந்துதான் பிறக்கிறது. தேவையே கண்டுபிடிப்பின் தாய். Demand is the Mother of Invention என்றுதான் போதிக்கிறாங்க. இந்த அடிப்படையில்தான் உலகத்தில் எதுவுமே படைக்கப்பட்டிருக்கு. இந்த பறவை மாதிரி நம்மால் பறக்க முடியாது என்று நினைத்திருந்தால் வானூர்தி இல்லை. தேவையா தேவை இல்லையா என்ற நிலையில்தான் நாம நிக்கிறோம்.

அரசியல் என்பது முழுக்க முழுக்க மக்களுக்கான சேவைதான் என்பது அய்யா பெருந்தலைவர் காமராஜர் கருத்து. அரசியல் என்பது மக்களின் மீது அதிகாரத்தைச் செலுத்துகிற விவகாரம் அல்ல. அது மக்களுக்கு ஆற்றப்படுகிற தொண்டு என்று தேசிய தலைவர் பிரபாகரன் கூறியிருக்கிறார். நாங்க இன்னும் ஒருபடி மேலே, 'அரசியல் என்பது அனைத்து உயிர்களுக்குமான தேவையும் அதை நிறைவு செய்கிற சேவையும்தான் அரசியலக் என்று பார்க்கிறோம்.

இன்றைய சூழலில் அரசியல் என்பது முழுக்க முழுக்க ஒரு தொழிலாக மாறிவிட்டது. தன்னலம் சார்ந்த ஒரு பிழைப்பு வாதமாக மாறியிருக்கு. எங்க அதிக இடம் கொடுப்பாங்க, யார் அதிகமா பணம் கொடுப்பாங்க, யாருடன் சேர்ந்தால் வெல்லலாம், எப்படியாவது இந்த மக்களை ஏமாற்றி ஆட்சி செய்திட முடியாதா? என்தாக உள்ளது. இதை மாற்றி எப்படியாவது இந்த மக்களை வாழ வச்சிட முடியாதா என்ற தவிப்பு நமக்கிருக்கு.

மாற்றம் என்பது ஒரே நாளில் ஏற்பட்டு விடுவதல்ல. ஒரு புள்ளியிலிருந்து தொடங்குவது. அந்த அடிப்படையில், மாற்றத்தை விரும்புகிற ஒவ்வொருவரும் அங்கங்கே சிதறிக் கிடக்கிறார்கள். இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் அடுத்த நொடியில் மாற்றம். மாற்றமும் புரட்சியும் பணத்திலிருந்து பிறப்பதல்ல, மக்களின் மனதிலிருந்து பிறப்பதுதான். அப்படி ஒரு மாற்றத்துக்கான, மாற்று அரசியலுக்கான சூழல் இப்போது உருவாகியிருப்பதாக நான் நினைக்கிறேன். எனவே நம்பிக்கையோடு களத்திலிறங்கியிருக்கிறேன்.

கேள்வி: இந்த சமூகம் இப்போது எதிர்நோக்குகிற தலையாய பிரச்சினைகள் என்னென்ன என்று நீங்கள் அடையாளம் கண்டிருக்கிறீர்களா?

சீமான்: உறுதியாக. இந்த தமிழ்ச் சமூகம் மட்டுமல்ல, இந்தியாவில் வாழுகிற அத்தனை தேசிய இனங்களுக்கும் இந்தியாவின் பொருளாதாரக் கொள்கை ஆபத்தானதாக இருக்கிறது. காந்தி கண்டது சுயராஜ்ஜியம். இந்தியனாய் இரு இந்தியப் பொருளை வாங்கு. அன்னிக்கு இது தேசப் பற்று. இன்னிக்கு இந்தியனா இருந்து இந்தியப் பொருளை வாங்கினால் தேசத் துரோகமா மாறிடும். இன்னிக்கு தற்சார்பு பொருளாதாரக் கொள்கையைத் தாண்டி, உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் சூழல். அன்னிக்கு கப்பலில் வந்து வியாபாரம் பண்ணவனை அடிச்சி விரட்டிட்டு, இன்னிக்கு வானூர்தியில் வர்த்தகம் செய்ய வர்றவனையெல்லாம் வா வா ன்னு சிவப்புக் கம்பளம் விரிச்சு வரவேற்கிற நிலை இருக்கு. அன்னிக்கு ஒருத்தனுக்கு அடிமையாக இருந்த என் நாடு இன்று உலகத்திலிருக்கிற எல்லாருக்கும் அடிமையாகத் துடிக்கிற போக்கை நாம பாக்கிறோம். அதனால் இந்திய நிலப்பரப்புக்குள் வாழ்கிற ஒவ்வொரு தேசிய இனமும் பேராபத்தை எதிர்கொள்கிற போக்கை நான் பார்க்கிறேன்.

என் தனிப்பட்ட பார்வையில், உயிர் - அறிவு, மருத்துவம் - கல்வி. வயிறு.. இது வேளாண்மை சம்பந்தப்பட்டது. வேளாண்மையை இந்த நாடு கைவிட்டுவிட்டது. வளர்ச்சி என்பதே தொழில்துறை சார்ந்ததா பார்க்கப்படுகிறது. இந்தியா பன்னாட்டு முதலாளிகளைக் கூப்பிட்டு தொழில் தொடங்க வைக்கிறதே தவிர, ஜப்பான், கொரிய, ரஷ்ய, சீன முதலாளிகள் வருவதாகச் சொல்கிறார்களே தவிர, இந்த நாடுகளிலெல்லாம் என் தேசம் எந்த முதலீடுகளையும் செய்யவில்லை. என் நாடு முதலீடு செய்வது ஸ்விஸ் வங்கியிலயும் அந்நிய நாட்டு வங்களிலும்தான்.

வேளாண்மையைக் கைவிட்டதால் என் நாட்டில் 130 கோடி மக்களில் 40 கோடிப் பேர் இரவு உணவின்றி தூங்கப் போகிறார்கள். இது ஒரு பேராபத்து. இன்னொன்னு உயிர் ஆகாரமா இருக்கிற குடிநீர் விற்பனைக்கு வந்துடுச்சி. தண்ணீர் விற்பனைக்கு வந்துவிட்ட தேசம் என்னைக்குமே உருப்படாது. பரிணாம வளர்ச்சியில் கடைசி நிலைதான் மனிதன். நான் ஒரு கடையில் பணம் கொடுத்து பாட்டில் தண்ணீர் வாங்கி குடித்துவிட முடியும். ஆனால் யானை, புலி, சிங்கம், குருவி, கொக்கு போன்றவையெல்லாம் எங்கே போகும்? இவையெல்லாம் இல்லேன்னா, இந்த உயிர்ச்சூழல், பல்லுயிர்ப் பெருக்கம் என்பதே இருக்காதே. நான் வாழ்வதற்கு எல்லாவிதமான உயிர்களையும் அழிப்பதை எப்படி நாம் பார்க்கணும்? காட்டுக்குள்ள வாழ்கிற எந்த உயிரினத்தாலும் அந்த காட்டுக்கு ஆபத்து இல்லை. ஆனால் நாட்டுக்குள் வாழ்கிற இந்த சமூக விலங்கான மனிதனால்தான் காடுகளுக்கு பேராபத்து.

Seeman's Question & Answer series part -1

அடுத்து உயிர் காக்கிற மருத்துவம் முழுக்க வியாபாரமாகிடுச்சி. அறிவு எனும் கல்வியும் வியாபாரமாகிடுச்சி. இதுதான் இந்த இந்திய நிலப்பரப்பில் வாழ்கிற மக்கள் சந்திக்கிற பேராபத்தா நான் கருதறேன். என் தந்தை பெரிய பணக்காரனாக இருந்தால்தான் நல்ல கல்வி பெற முடியும், பொருளாதார வசதி இருந்தால்தான் நல்ல மருத்துவம் பெற முடியும் என்றால், நான் இந்த நாட்டில் பிறந்ததைத் தவிர பிழையொன்றும் செய்யவில்லையே! இது என்ன ஜனநாயகம்? ஏழைக்கொரு கல்வி, பணக்காரனுக்கு ஒரு கல்வி, ஏழைக்கொரு மருத்துவம், பணக்காரனுக்கு ஒரு மருத்துவம், காசிருக்கிறவன் கடையில் தண்ணி வாங்கி குடிக்கலாம், காசில்லாதவன் நாக்கு வறண்டு சாகலாம்... இது பேராபத்தான நிலை என்று நான் பார்க்கிறேன். இந்த அடிப்படையையே மாற்ற வேண்டும் என நினைக்கிறேன். இந்த மாதிரி எண்ணம் இந்த நாட்டில் வாழ்கிற பல இளைஞர்களுக்கும் இல்லையென்று சொல்ல மாட்டேன். ஆனால் யார் செய்வது என்ற தவிப்பு, தேடல் இருக்கிறது. நிச்சயமா இந்த மண்ணில் அந்த மாற்றம் வரும்.

இன்னும் சரியாக கால் நூற்றாண்டு கடந்து பார்த்தால், இந்த மண்ணில் மாபெரும் பணக்காரனாக இருப்பவன் தங்கம், பெட்ரோல் விற்பவனாக இருக்கமாட்டான். தண்ணீரை விற்பவனாகத்தான் இருப்பான். எனவே இந்த சமூகம் அடிப்படையிலேயே பேராபத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கு. இதற்கு மேல ஊழல், லஞ்சம், பாலியல் வன்கொடுமை, சாதிய இழிவு, தீண்டாமை... இதெல்லாம் கணக்கிட முடியாத சிக்கல்கள் வேற. ஆனா ஒட்டுமொத்தமா இந்திய மக்கள் சந்திக்கிற அடிப்படைச் சிக்கலா இதை நான் பார்க்கிறேன்.

கேள்வி: ஒட்டு மொத்தமா அரசியல் என்பதே தொழிலாகிவிட்டதா சொல்றீங்க.. இந்த நிலையில் நாம் தமிழர் முன் வைக்கிற மாற்று அரசியல் என்ன?

சீமான்: இங்கே அடிப்படையிலிருந்தே அனைத்தையும் மாற்ற வேண்டும் என்கிறேன். முதலில் லஞ்ச ஊழலற்ற முறையான நிர்வாகம். முழுமையான மக்களாட்சியைக் கொடுப்பது. பசி பஞ்சம் பட்டினி, பாலியல் வன்கொடுமை, சாதி இழிவு, தீண்டாமை, வேலையின்மை, அனைவருக்கும் சரியான கல்வி, சரியான மருத்துவம் கிடைக்காமை, நடந்து செல்ல சரியான பாதையில்ல, குடிநீர் இல்ல... எல்லாத்தையும் இலவசமா கொடுக்கிற இந்த அரசு தண்ணீரை விற்கிறது. ஏன் தண்ணீரை விற்க வேண்டிய தேவை இருக்கிறது என்ற கேள்வி எழுது. 30 ஆயிரம் ரூபாய் மடிக்கணிணியை இலவசமாகத் தருகிற அரசு, தண்ணீரை ஏன் 10 ரூபாய்க்கு விற்க வேண்டும்? ஏன்னா தண்ணீரை மிக உயர்ந்த வர்த்தகப் பொருளா வச்சிருக்க வேண்டிய தேவை இந்த அரசுக்கு இருக்கு. தண்ணீரை இலவசமா கொடுத்துட்டா, தண்ணீரை விற்கிற முதலாளி பாதிக்கப்படுவான். அவன் பாதிச்சா உனக்கென்னன்னு அரசைக் கேட்டா, அவன்கிட்டருந்து வர்ற கமிஷன் பணம் கிடைக்காமப் போயிடும்னு பதில் வருது. ஆக இந்த அற்ப கமிஷன் பணத்துக்காக இந்த அதிகாரம் தன் நாட்டு மக்களுக்கு துரோகம் செய்யுது. இந்த நிலையை மாற்றியாக வேண்டும்.

சுத்தமான தண்ணீர், பாதுகாப்பான சுற்றுச் சூழல், பெண்ணிய உரிமை, காட்டு வளம், கனிம வளம், நீர்வளம், நிலவளம், மண்வளம், கடல் வளம், மலை வளம்... இதையெல்லாம் காப்பது என்பது ஒவ்வொரு தேசிய இனத்தின் அடிப்படை உரிமை. இந்த பூமி எனதல்ல. என் சந்ததிக்கானது. நான் போகும்போது பாதுகாப்பாக அவர்களிடம் திருப்பி ஒப்படைக்கணும்.

எங்களுடைய கனவு ஆட்சி மாற்றம் மட்டுமல்ல, அடிப்படை மாற்றம், அமைப்பு மாற்றம், அரசியல் மாற்றம்.

இதுவரைக்கும் இருந்த தேசிய, திராவிட கட்சிகளுக்கு தமிழ் குறித்து, மொழி குறித்து எந்தவித ஆழமான புரிதலும் இல்லை. தமிழ் செத்துப் போய்விட்டது என்ற உண்மையை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். தாய் மொழியை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டிய கடமை இருக்கிறது. மொழி அழிந்தால் தேசிய இனம் அழிந்து போகும். ஆக அழிந்து கொண்டிருக்கிற ஒரு தேசிய இனத்தை, அதன் மொழி, கலை, இலக்கியம், பண்பாடு, தொன்றுதொட்ட வேளாண்மை என அனைத்து வளங்களையும் கட்டிக் காத்து ஒரு தேசிய இனத்தையே மீள் கட்டமைப்பு செய்ய வேண்டிய வரலாற்றுப் பெரும்பணியை நாம் மேற்கொண்டிருக்கிறோம். ஏதோ அதிகாரத்துக்கு, ஆட்சி செய்யணும் என்றெல்லாம் நம்மால் இருக்க முடியாது.

ஊழலை ஒழிக்க சட்டம், திட்டம், துறைகள் எல்லாம் இருக்கு. ஆனால் சட்டம் போட்டோ, திட்டங்கள் போட்டோ அதை ஒழிக்க முடியாமல் இருக்குன்னா.. அதற்குக் காரணம் இது சட்டங்களாலும் திட்டங்களாலும் ஒழிக்கக் கூடிய ஒன்றல்ல. உளமாற உணர்ந்து ஒவ்வொருத்தரும் நின்னாத்தான் அது ஒழியும். இருக்கிறவனை வச்சி இதை ஒழிக்க முடியாது. இனி பிறக்கிற ஒவ்வொரு பிள்ளையையும் இந்த ஊழலுக்கு எதிராக உருவாக்கினால்தான் இதை ஒழிக்க முடியும்.

அரசியல்வாதிகள் எப்போதும் அடுத்த தேர்தலைப்பற்றிச் சிந்திப்பார்கள். ஆனால் தலைவர்கள் மட்டும்தான் அடுத்த தலைமுறையைப் பற்றிச் சிந்திப்பார்கள். நாம் அடுத்த தலைமுறையைப் பற்றிச் சிந்திப்பவர்களாக இருக்க வேண்டும் என்பதுதான் நம்முடைய ஆசை. அதனால்தான் நாங்கள் சீர்த்திருத்தவாதிகள் அல்ல.. புரட்சியவாதிகள் என்று திரும்பத் திரும்ப சொல்கிறோம். சீர்த்திருத்தவாதி என்பவன் ஒரு கட்டடத்தில் இருக்கிற சின்னச் சின்ன பிரச்சினைகளைச் சரிசெய்வான். ஆனால் புரட்சியவாதி, அந்தக் கட்டடத்தையே இடித்துவிட்டு புதிதாக எழுப்புவான். புரட்சி என்பது தலைகீழ் மாற்றம். புரட்சி ஒன்றால்தான் இத்தனை தீமையையும் ஒருசேர புரட்டிப் போட முடியும்.

கேள்வி: நாம் தமிழர் மீது முன்வைக்கப்படும் முக்கிய குற்றச்சாட்டு, நீங்கள் தமிழர் - இங்கேயே வாழும் தமிழர் அல்லாத மக்கள் இடையே பிரிவினைவாதத்தை உண்டாக்குகிறது என்பது. அதற்கு உங்கள் விளக்கம்...

சீமான்: ஓராண்டு ஈராண்டல்ல.. நீண்ட நெடிய காலமாக அதிகாரத்தை வேறு ஒருவரிடம் கொடுத்துவிட்டு அடிமையாகக் கிடக்கும் தமிழ்ச் சமூகத்தின் பிள்ளைகள் அதிகாரத்தை கையிலெடுக்க நினைப்பது அவர்களின் உரிமை. ஒருவருடைய பொருளாதாரம், அரசியல், அதிகாரம்.. இந்த மூன்றில் ஒன்றை அடுத்தவரிடம் இழந்தாலும் நான் அடிமையாகிவிடுவேன். ஆனால் இந்த மூன்றுமே என் இனம் சார்ந்த மக்களுக்கு அடுத்தவரிடத்தில் இருக்கிறது. நீண்ட நெடிய காலமாக இவை அடுத்தவரிடம்தான் இருக்கின்றன. தமிழர்கள் பெருந்தன்மை என்ற பெயரில் செய்த பிழையால் இந்த நிலை.

இன்று நாங்கள் விழித்துக் கொண்டு எங்களின் நியாயமான உரிமையை நான் கேட்கும்போது பிற மொழியாளர்களுக்கும் தமிழர்களுக்குமான மோதல் மோல இது சித்தரிக்கப்படுகிறது. இது ஒரு பெரிய துரோகம் என்கிறேன். இந்த மண்ணை நம்பி நீண்ட காலமாக இருந்தவர்களுக்கு நீர் கொடுத்து, சோறு கொடுத்து, பாதுகாப்பான வாழ்க்கை கொடுத்து, அதிகாரம் கொடுத்து, வாழவும், ஆளவும் வைத்து அழகு பார்த்த ஒரு தேசிய இன மக்களுக்குச் செய்கிற துரோகம்.

வாழும் உரிமை எவருக்கும் உண்டு. ஆளும் உரிமை தமிழர் எமக்கே உண்டு என்ற தத்துவத்தை முன் வைக்கிறோம். வந்தவரை எல்லாம் வாழ வைப்போம் அது எம் இனத்தின் பெருமை. ஆனால் எம் சொந்தவரை மட்டும் ஆள வைப்போம். அது எங்கள் உரிமை. உலகம் பூரா இதுதான் நடைமுறை. அந்தந்த தேசிய இன மக்களை அந்தந்த மொழி வழி தலைவர்கள்தான் ஆளுகிறார்கள். என்னைப் பெற்ற என் தாய் தந்தைக்கு என்னைவிட உண்மையான மகன் யார் இருக்க முடியும்? என் மண்ணையும் மக்களையும் நிலத்தையும் வளத்தையும் என்னைவிட யார் நன்றாகப் பார்த்துக் கொள்ள முடியும்?

நீண்ட காலமாக எங்களை ஆண்டு வந்திருக்கிறீர்கள். மொழிப்போர் ஈகிகளின் தியாகத்தால்தான் இந்த திமுக ஆட்சியைப் பிடித்தது. இந்த அரசியலை நீங்கள் நுட்பமாகப் பார்க்க வேண்டும். என் மொழி செத்துவிடக் கூடாது என்று செத்தவனின் தியாகத்துக்கு ஏதாவது பலனிருக்கா? இந்த 50 ஆண்டுகளில் தமிழை அழித்துவிட்டார்கள். சாகடித்துவிட்டார்கள். போராட்டத்தில் செத்தவன் எல்லாம் தமிழன். பிற மொழியாளர் யாரும் சாகவில்லை. ஆனால் அதிகாரத்தை கைப்பற்றியவன் திராவிடர் போர்வையில் இருந்த மாற்று மொழியாளன். 'தமிழன் தாய்மொழிமேல உயிரையே வச்சிருக்கான். மொழிக்கு ஒன்று என்றால் உயிரையும் விடத் தயாரா இருக்கான். அந்த மொழியை அழிச்சாத்தான் சூழல் நமக்கு சாதகமாகும்'னு திட்டமிட்டு வேலை செய்தார்கள் பிறமொழி ஆட்சியாளர்கள். தமிழன் தமிழனாக இருக்கும்வரை அதிகாரத்துக்கு வரமுடியாது என்று தெரிந்து கொண்டு திட்டமிட்டு தமிழை அழித்தார்கள். ஒரு சின்ன பதிலில் இதற்கு பதில் சொல்லிவிட முடியாது. நான் கேட்பது எனது தார்மீக உரிமை.

கேரளாவில் பல லட்சம் தமிழர்கள் வாழ்கிறோம். மகாராஷ்ட்ராவில் 26 லட்சம் பேர் இருக்கோம். கர்நாடகத்தில் ஒண்ணேகால் கோடிக்கு மேல் வாழ்கிறோம். இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் தமிழர் வாழாத நிலப்பரப்பு இல்லை. உலகின் பல நாடுகளிலும் வாழ்கிறோம். ஆனால் எந்த நாட்டிலும் தமிழருக்கென்று தனித்த அரசியல் இல்லை. அந்தந்த மண்ணின் மக்கள் முன்னெடுக்கிற அரசியலோடு நாங்க கரைஞ்சி பயணிக்கிறோம். அதுபோல இந்த மண்ணில் வாழ்கிற பிறமொழி தேசிய இன மக்கள், தமிழ் தேசிய இன மக்களாகிய நாங்கள் முன்னெடுக்கிற அரசியலோடு பயணித்து வலிமை சேர்க்க வேண்டும் என்பது தார்மீகக் கடமை என்றுதான் நாங்கள் சொல்கிறோம். நீங்கள் எங்களை ஆள வேண்டும், அதிகாரத்தை கையில் எடுக்க வேண்டும் என்று நினைத்தால் நாங்கள் அடிமையாகி விடுவோம். நாங்கள் இன்னொரு முறை அடிமையாகத் தயாராக இல்லை.

இப்போது தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் சிலர் இங்கே எங்களுடன் மோதல் போக்கைக் கடைப்பிடிக்கிறார்கள். ஆனால் கன்னடத்தைத் தாய் மொழியாகக் கொண்ட யாராவது? அல்லது மலையாளிகள் யாராவது? அண்மையில் கேரள முதல்வர் உம்மண்சாண்டி சொன்னதை எல்லாரும் அறிவீர்கள். 'அவன் அதிகாரத்தைக் கேட்டு வெறியோடு வருகிறான். அவன் கேட்பது நியாயம். அதில் என்ன தவறு இருக்கிறது? என்னை மலையாளியா திராவிடனா என்று கேட்டால் நான் மலையாளி என்றுதான் சொல்வேன்' என்று கூறியிருக்கிறார். அந்த உணர்வு எல்லாருக்கும் வரணும்.

வெளிப்படையா பேசுவோம்... ஆந்திரா. ஒரே மொழிவழி தேசிய இனத்தின் மக்கள் அங்கு வாழ்கிறார்கள். நீண்ட காலமாக ஒரே நிலப்பரப்பில் வசித்தவர்கள் இன்று தெலங்கானா, ஆந்திரா என இரு மாநிலங்களாக பிரிந்துவிட்டன. தெலங்கானாவை சந்திரசேகர் ராவும், ஆந்திராவை சந்திரபாபு நாயுடுவும் ஆள்கிறார்கள். மாறி, சந்திரசேர் ராவை ஆந்திராவுக்கும், சந்திரபாபு நாயுடுவை தெலங்கானாவுக்கும் முதல்வராகிடச் சொல்லுங்க பார்ப்போம். நாம இந்த அரசியலை விட்டுடலாம். வாய்ப்பே இல்ல. ஆக நான் கேட்பது ரொம்ப தார்மீக உரிமை. காலங்கடந்து கேட்கிறேன். எல்லாவற்றையும் இழந்துவிட்டு, கண் முன்னாடி ஒரு இனச் சாவைச் சகித்துக் கொண்டு நிற்கிறேன்.

நானூறு ஆண்டுகளாக இருக்கிறார்களே... அவர்களை எங்கே போகச் சொல்கிறீர்கள் என்கிறார்கள். எங்கேயும் போக வேணாம். எங்களோடு தாயா புள்ளையா இருங்க. எங்களோடயே வாழுங்க. எங்ககிட்ட அமைச்சரா இருங்க. ஆனா முதலமைச்சர் நாங்கதான். எத்தனை தளபதிகள் வேணும்னாலும் இருங்க.. மன்னன் நான்தான். இதுல என்ன கசப்பு இருக்கு? இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொள்வதில் உள்ள தடுமாற்றம்தான் அவர்களுக்கு.

உங்களுக்கு நான் ஒரு கேள்வியை முன் வைக்கிறேன்.

நானூறு ஆண்டுகளாக இருந்த எங்களை இப்படிச் சொல்கிறார்களே என்கிறார்கள். அப்படிப் பார்த்தால், மூவாயிரம் ஆண்டுகளாக இங்கிருக்கும் பிராமணர்களை எப்படிப் பார்க்கிறீர்கள்? ஏன் இத்தனை ஆண்டுகள் அவர்களை எதிர்த்தீர்கள்? தூய தமிழர் எங்களை திராவிடன் என்று சேர்த்துக் கொண்டு, மூவாயிரம் ஆண்டுகளாக ஏன் எதிர்த்தீர்கள்? அவன் இத்தனைக்கும் வீட்டுக்குள் தமிழ், வெளியிலும் தமிழ் பேசறான். வாய் மொழியும் தாய் மொழியும் தமிழா இருக்கு. நீங்களாவது வீட்டுக்குள் போய் தெலுங்கு பேசுகிறீர்கள். அவன் வீட்டிலும் தமிழ்தானே பேசுகிறான். அவனை ஏன் எதிர்த்தீர்கள்?

பிறப்பின் அடிப்படையில் சீமான் தூய இனவாதம் பேசுகிறான் என்று சொல்கிறீர்கள். பார்ப்பணர் அல்லாதோர் இயக்கம் என்று நீதிக்கட்சி ஆரம்பித்தீர்களே.. எந்த அடிப்படையில் அவர்களைப் பார்ப்பணர்களாகப் பார்த்தீர்கள்? ஆரியர் திராவிடர் என்றீர்களே.. எப்படி ஆரியர்களைக் கண்டீர்கள்? பிறப்பின் அடிப்படையில்தானே?

பாரதி, சூரிய நாராயண சாஸ்திரியாக இருந்த பரிதிமாற் கலைஞர், தூய தமிழறிஞர்.. பிறகு உ வே சாமிநாதய்யர், இவரைத் தாண்டிய தமிழறிஞர் உண்டா.. காலி செருப்பு கூட இல்லாமல் ஊர் ஊராகப் போய் ஓலைச் சுவடிகளை உவே சாமிநாதய்யர் திரட்டிக் கொண்டுவந்து சேர்க்கவில்லை என்றால், எனக்கு ஏது இத்தனை சங்கத் தமிழ் நூல்கள்? பாரதியைத் தாண்டிய ஒரு தமிழன் உண்டா? சாதிகள் இல்லையடி பாப்பான்னு சொன்னவனை 'பார்ப்பான்னு' சொல்லிக் கொடுத்தது யாரு?
அடிமைப்பட்டுக் கிடந்த தேசிய இன மக்கள் தங்கள் உரிமைகளைக் கேட்கிறார்கள் என்ற புரிதல் வந்துவிட்டால் நான் கேட்பது நியாயம் என புரியும். இல்லையில்லை.. நாங்கள்தான் ஆளுவோம் என்றால்... மன்னராட்சிக் காலத்தில் நாயக்க மன்னர்கள் ஆட்சி. மக்களாட்சிக் காலத்திலும் நாயக்கர்கள் ஆட்சி என்றால் நாங்கள் விடுதலைப் பெறுவது எப்போது? யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இதில் கோபப்பட ஆத்திரப்பட, இனத் துவேஷம், பாஸிஸம், இன வெறி என்று சொல்ல ஏதுமில்லை.

எங்களோடு இருங்கள். தெலுங்கர் தெலுங்கராக இருங்கள், கன்னடர் கன்னடராக இருங்கள், மலையாளி மலையாளியாக இருங்கள், துளுவர் துளுவராக இருங்கள், மராட்டியர் மராட்டியராக இருங்கள், உருது பேசும் இஸ்லாமியர் உருது பேசுபவர்களாகவே இருங்கள்... எல்லாரையும் ஆரத் தழுவி அன்பு கொண்டு வாழ்கிற மாண்பு எங்களுக்கு இருக்கிறது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று பாடியவன் நான்தானே. திருவள்ளுவரிலிருந்து, கம்பரிலிருந்து, இளங்கோவடிகளிலிருந்து உலகந்தழுவி நேசித்துப் பாடியது எங்கள் முன்னோர்கள்தானே. வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடியதாகப் பாடினார் வள்ளலார். காக்கை குருவி எங்கள் சாதி என்றான் பாரதி. பயிருக்கும் காக்கை குருவிக்கும் வாடிய நாங்கள் சக மனிதரை நேசிக்க மாட்டோமா?

பிறமொழிக்காரர்கள் அவர்களாகவே இருக்கட்டும். நாங்கள் அவர்களைச் சகோதரர்களாக ஆரத் தழுவிக் கொண்டு வாழ்கிறோம். ஆனால் ஆளும் உரிமை எங்களுக்குத்தான். தமிழனை தமிழன் ஆண்டிருந்தால் ஈழத்தில் இனம் அழிந்திருக்காதே. தமிழன் ஆண்டிருந்தால் கச்சத் தீவை எடுத்துக் கொடுத்திருக்க முடியாது. நாங்கள் ஆண்டிருந்தால் மீத்தேனுக்கு கையெழுத்து போட்டிருக்க முடியாது. நாங்க ஆண்டிருந்தா அணு உலைகள் இங்கே இருந்திருக்காது. நாங்க ஆண்டிருந்தா மேற்குத் தொடர்ச்சி மலையில் அந்த நியூட்ரினோ ஆய்வு வந்திருக்காது. இந்த 50 ஆண்டுகளில் வெட்டப்ப குளங்கள் ஏரிகள் எத்தனை... ஆனால் இந்த திராவிட ஆட்சிகளில் அவை தூர்க்கப்பட்டு கட்டப்பட்ட வீடுகள் எத்தனை? நாங்கள் ஆண்டிருந்தால் இது நடந்திருக்காது.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

இந்த திராவிட இயக்கத் தலைவர்களுக்கு தமிழர்களை ஆள வேண்டும் என்ற நோக்கம் மட்டும்தான். எல்லா மொழிவழி தேசிய இன மக்களைப் போல தமிழர்களும் உரிமை பெற்று பெருமையோடு வாழ வேண்டும் என்ற கனவு ஒருபோதும் இருக்காது. அது இந்த மண்ணின் பிள்ளை இந்த இனம் சார்ந்த பிள்ளைக்குத்தான் இருக்கும். அதனால்தான் அந்த உரிமையை எங்களுக்குத் தாங்கன்னு கேட்கிறோம்!

-வேள்வி தொடரும்...

சந்திப்பு: எஸ் ஷங்கர்

English summary
Naam Tamilar Party chief Seeman's Question - Answer series part -1.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X