For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோவன் கைது அரச பயங்கரவாதம்.. தே.பா. சட்டத்தை கருணாநிதியும் தவறாக பயன்படுத்தினார்: சீமான்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: தேசிய பாதுகாப்புச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தும் திராவிடக் கட்சிகள்.மக்கள் அதிகாரம் பாடகர் 'கோவன்' கைது அரசப்பயங்கரவாதம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மதுவிலக்குக் குறித்துப் பரப்புரை செய்த மக்கள் அதிகாரம் அமைப்பின் பாடகர் தோழர் கோவன் கைது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

Seeman wants folk artist Kovan has to be released from the jail

மதுவின் தீமைகளையும், மது விலக்கின் தேவை குறித்த விழிப்புணர்வையும் தமிழக மக்களுக்கு வீதி நாடகங்கள் மூலமும், தனது பாடல்களின் மூலமும் ஏற்படுத்தி வந்த மக்கள் அதிகாரம் சேர்ந்த பாடகர் தோழர் கோவன் நள்ளிரவு 02.30 மணியளவில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

மேலும், அவர் மீது தேசத்துரோக வழக்கு தொடுக்கப்பட்டு, அவர் எங்கு வைக்கப்பட்டிருக்கிறார் என்ற தகவலும் மறைக்கப்பட்டிருக்கிறது.

தேசத்துரோக வழக்கு தொடுக்கப்படுகிற அளவுக்குக் கோவன் செய்த குற்றமென்ன? மதுவிலக்கை வலியுறுத்துவது அவ்வளவு பெரிய தேசத்துரோகமா? ‘ஓபன் தே டாஸ்மாக்' என்றெல்லாம் திரைப்படங்களில் பாடல் வருகிறபோது, ‘டாஸ்மாக்கை மூடு' என்று பாடுவது தேசத்துரோகம் ஆகிவிடுகிறதா?

மகாகவி பாரதியாரும், பாவேந்தர் பாரதிதாசனும், மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் தனது எழுச்சிமிகு பாடல்களின் மூலம்தான் இந்த இன மக்களைத் தட்டியெழுப்பினார்கள். அவர்கள் உலவிய மண்ணில் பாடல்கள் பாடியதற்காகச் சிறை என்றால், கருத்துரிமையும், சனநாயகமும் எங்கிருக்கிறது? இது மக்களாட்சித்தத்துவத்தையே தவிடுபொடியாக்குகிற செயலில்லையா?

‘தந்தையே மகளைக் கற்பழித்தார்', ‘மது அருந்திவிட்டுச் சாலையில் மயங்கிய பெண்' போன்ற சம்பவங்களையெல்லாம் மேலைநாட்டுச் செய்திகளில் படித்துவந்த நாம் இன்றைக்கு அதனைத் தமிழகத்தில் பார்க்கிற அளவுக்குத் தமிழகம் பாழ்படுவதற்குக் காரணமாக இருக்கிற மதுபானக்கடைகளை மூடச்சொல்வது அவ்வளவு பெரிய சமூகக்குற்றமா?

'ஊத்திக் கொடுத்த உத்தமிக்குப் போயஸ் தோட்டத்தில் உல்லாசம்' என்று எழுதியவர் அப்படியே 'ஊத்திக்கொடுத்த உத்தமருக்குக் கோபாலபுரத்தில் உல்லாசம்' என்றும் எழுதி பாடியிருந்தால் இன்னும் சரியாக இருந்திருக்கும். அம்மையார் ஜெயலலிதா அரசு மட்டும் ஊற்றிக்கொடுக்கவில்லை. அய்யா கருணாநிதி அரசும்தான் ஊற்றிக்கொடுத்தது.

பழந்தமிழர் பயன்படுத்திவந்த கள்ளையே ‘போதைப்பொருள்' எனக்கூறி தடைசெய்திருக்கிற இந்த அரசுகள் மதுபானக்கடைகளை மட்டும் வீதிக்கு வீதி திறந்து வைத்திருப்பது எந்தவிதத்தில் நியாயம்? ‘மதுக்கடைகளின் மூலம் வரும் வருமானம் குஷ்டரோகிகளின் கையிலிருக்கும் தேனை நக்கிச்சுவைப்பது போன்றது' என்றார் அறிஞர் அண்ணா.

அந்த அண்ணாவின் பெயரை கட்சிக்கு வைத்திருக்கிற அதிமுக அரசு, வருமானத்திற்காக மதுபானக்கடைகளைத் திறந்து வைத்திருப்பதுதான் அண்ணாவை மதிக்கிற இலட்சணமா? ‘மக்களால் நான்! மக்களுக்காக நான்!‘ என்ற முழக்கத்தை முன்வைக்கிற தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் எந்த மக்கள் விரும்புகிறார்கள் என மதுபானக்கடைகளைத் திறந்து வைத்திருக்கிறார்?

மதுவால் வருகிற கோடிப்பிரச்சினைகள் தெரிந்துதான் நாளைய உலகை நிர்ணயிக்கிற இளைய தலைமுறை மாணவப் பிள்ளைகள் வீதியில் இறங்கிப் போராடினார்கள்; ஐயா சசிபெருமாள் தனது உயிரையே அந்தக் களத்தில் ஈகம் செய்தார்; இவ்வளவு நடந்தும் அரசு மதுவிலக்கு குறித்து வாய்திறக்க மறுக்கிறதென்றால் இந்த அரசும், அதிகாரமும் மக்களுக்கானதா? என்பதை நாம் சிந்திக்க வேண்டியிருக்கிறது.

மதுபானக்கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் பெருகிவிடும் எனக் காரணம் கற்பிக்கிற அரசு, இன்றைக்குப் பாடல் பாடியதற்காகக் கோவன் மீது எடுக்கும் நடவடிக்கையைக் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மீது பாய்ச்சி நடவடிக்கை எடுக்க முடியாதா? இன்றைக்குத் திமுகத் தலைவர் கருணாநிதி, கோவன் மீது பாய்ந்துள்ள தேசிய பாதுகாப்புச் சட்டத்தைக் கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். ஆனால், அவர் முதல்வராக இருந்தபொழுது தொடர்ச்சியாக என் மீது இதே தேசிய பாதுகாப்புச் சட்டத்தைப் பாய்ச்சினார்.

பிரபாகரனை ‘அண்ணன்' என்று பேசியதற்காக, ஈழப் படுகொலையைப் பற்றிப் பேசியதற்காக இரு இனங்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்துவதாகக் குற்றஞ்சாட்டி தொடர்ச்சியாக என்னைக் கைது செய்த கருணாநிதி இன்று கண்டித்து அறிக்கை விடுவது கொடுமை.

ஆளும் திராவிடக் கட்சிகள் தங்களின் ஆட்சிக்கு எதிராக இருப்பவர்களை ஒடுக்க தேசிய பாதுகாப்புச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறது. ஆகவே, தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டிருக்கும் மக்கள் அதிகாரம் தோழர் கோவன் மீதான வழக்கை ரத்துச் செய்து எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்

English summary
Naam Tamilar coordinator Seeman wants folk artist Kovan has to be released from the jail.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X