For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மீனவர் பேச்சுவார்த்த்தை விவகாரம்.. 'நீலிக் கண்ணீர்' சோனியாவுக்கு ஜெ. கண்டனம்

By Mathi
|

சென்னை: தமிழக- இலங்கை மீனவர்களிடையேயான பேச்சுவார்த்தை தாமதமாக நடைபெற அதிமுக அரசுதான் காரணம் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டியதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.

வடசென்னை லோக்சபா தொகுதியில் நேற்று பிரசாரம் மேற்கொண்ட ஜெயலலிதா பேசியதாவது:

கன்னியாகுமரியில் அண்மையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தமிழக மீனவர் பிரச்னையில் அதிமுக அரசு அக்கறை செலுத்தவில்லை என்றும் இந்திய-இலங்கை மீனவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தைக்கு காங்கிரஸ் அரசுதான் காரணம் என்றும் பேசியுள்ளார்.

Sonia Gandhi 'shedding crocodile tears' for Tamil fishermen: Jayalalithaa

உண்மை இல்லை: இதில் எள்ளளவும் உண்மை இல்லை. மாறாக, மீனவர்களை வஞ்சித்த அரசு, மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு. ஏனெனில் தமிழக மீனவர்களுக்கும் இலங்கை மீனவர்களுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கு முன்பு, சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, அதை நிறைவேற்றிக் காட்டியது அதிமுக அரசு.

ஆனால், இந்தப் பேச்சுவார்த்தைக்கு காரணமே காங்கிரஸ் அரசுதான் என்று சோனியா பேசி இருக்கிறார். இது என்ன பித்தலாட்டம்? சோனியா காந்தி நீலிக் கண்ணீர் வடிக்கிறார்.

மேலும் மீனவர்களின் நண்பனாக விளங்கும் ஒரே இயக்கம் அதிமுக என்பதை மீனவர்கள் நன்கு அறிவார்கள்; அதிமுக அரசு அக்கறை செலுத்தவில்லை என்பதை மீனவர்கள் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் அச்சுறுத்தப்படும்போதும், சிறைபிடிக்கப்படும்போதும், வலைகள்-படகுகள் சேதப்படுத்தப்படும்போதும் உடனடியாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மூலமும் தூதரக நடவடிக்கைகள் மூலம் தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்தது அதிமுக அரசுதான்.

கச்சத்தீவு விவகாரம்..

இலங்கை அரசுக்கு கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதுதான் தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு முக்கியக் காரணம். 1974 மற்றும் 1976-ஆம் ஆண்டைய ஒப்பந்தங்களின் மூலம் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால்தான் இலங்கை நாட்டுக்கு கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது. அப்போது தமிழகத்தின் முதல்வராக இருந்தவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி.

கச்சத்தீவை தாரைவார்த்த ஒப்பந்தங்கள் செல்லத்தக்கதல்ல என அறிவிக்க வேண்டும் என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் 2008-ஆம் ஆண்டு நான் வழக்கு தொடர்ந்தேன். இதற்கு மத்திய காங்கிரஸ் அரசு என்ன பதில் மனு தாக்கல் செய்தது? கச்சத்தீவு இந்திய நாட்டின் ஒரு பகுதியே அல்ல என்று கூறி, ஜெயலலிதாவின் மனுவை தள்ளுபடி செய்யுமாறு மத்திய காங்கிரஸ் அரசு மனு தாக்கல் செய்தது.

இதுதான் மீனவர்கள் மீது மத்திய காங்கிரஸ் அரசு கொண்டுள்ள அக்கறையா? இது மீனவர் விரோதச் செயல் இல்லையா?

இது சோனியா காந்திக்கு தெரியாதா? ஒன்றுமே தெரியாததுபோல் சோனியா காந்தி பேசுகிறாரா? இப்படிப்பட்ட சோனியா காந்தி, மீனவர்கள் பிரச்னையில் எனது தலைமையிலான அதிமுக அரசு அக்கறை செலுத்தவில்லை என்று கூறுவது நகைப்புக்குரியது மட்டுமல்ல, கேலிக்கூத்தானதும் ஆகும்.

பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?

தமிழக மீனவர் பிரச்னைக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்குமாறு வலியுறுத்தி பிரதமருக்கு அன்றாடம் கடிதம் எழுதுகிறேன். அதன் மீது மத்திய அரசால் ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? மேலும் தமிழக மீனவர்களுக்கும் இலங்கை மீனவர்களுக்கும் இடையே 2010-ஆம் ஆண்டு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகளை நிறைவேற்ற மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு ஏன் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை?

2011-ஆம் ஆண்டு மார்ச்சில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவுகளை ஏன் மத்திய காங்கிரஸ் அரசு வெளியிடவில்லை? இதனை அனுப்புமாறு நாங்கள் கேட்டும், அனுப்பாமல் மத்திய காங்கிரஸ் அரசு ஏன் மௌனம் சாதிக்கிறது என்பதை சோனியா காந்தி விளக்க வேண்டும்.

தமிழக மீனவர்கள் பிரச்னையில் காங்கிரஸ் கட்சி போல் துரோகம் செய்த கட்சி வேறு எதுவுமே கிடையாது. மீனவர்களைப் பற்றி பேசுவதற்கு காங்கிரஸ் கட்சிக்கு அருகதை இல்லை.

காங்கிரஸ் மற்றும் அதற்குப் பக்கபலமாக இருந்த தி.மு.க. ஆகியவற்றின் மீனவ விரோதச் செயலுக்கு இந்தத் தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும். காங்கிரஸ் கட்சிக்கும் தி.மு.க.வுக்கும் நீங்கள் சம்மட்டி அடி கொடுக்க வேண்டும்.

காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை அனைத்துத் தொகுதிகளிலும் நீங்கள் டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும்.

இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.

English summary
Launching a blistering attack on Congress President Sonia Gandhi for the first time during the current electioneering, Tamil Nadu Chief Minister Jayalalithaa today charged her with shedding crocodile tears for Tamil Nadu fishermen on poll eve.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X