For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரிக்காக போராடுவதா? தமிழக அரசின் அலட்சியத்தை எதிர்த்து போராடுவதா?- கருணாநிதி

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: காவிரி பிரச்சனையில் தமிழக அரசின் நடவடிக்கைகள் மர்மாக இருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக கருணாநிதி இன்று வெளியிட்ட அறிக்கை:

காவேரிப் பிரச்சினையில் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு, தமிழக அரசு என்ன நிலை எடுக்க போகிறது என்று வெளிப்படையாக அறிவித்திட வேண்டுமென விரிவாக ஓர் அறிக்கையினை கடந்த 6-9-2016 அன்று நான் விடுத்திருந்தேன்.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் "சம்பா பயிர் சாகுபடிக்காக விவசாயிகள் நலன் கருதி தமிழகத்திற்கு 10 நாட்களுக்கு தினமும் விநாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும். நடுவர் மன்றத் தீர்ப்பின் அடிப்படையில் தண்ணீர் தேவை என்றால், 3 நாட்களுக்குள் தமிழக அரசு, காவேரி கண்காணிப்புக் குழுவை அணுகலாம். கண்காணிப்புக் குழு தமிழக அரசின் கோரிக்கையைப் பரிசீலித்து பத்து நாட்களுக்குள் உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்" என்று கூறி, விசாரணையை 16ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

காவிரி கண்காணிப்புக் குழுவும், 12-9-2016 அன்று கூட இருக்கிறது. அதில் தமிழக அரசு கலந்து கொள்ளப் போவதாகச் செய்தி வெளி வந்துள்ளது.

சம்பாவுக்கு போதுமானது அல்ல

சம்பாவுக்கு போதுமானது அல்ல

வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர் தர வேண்டும் என்ற உச்ச நீதி மன்றத்தின் உத்தரவு நிச்சயமாகச் சம்பாவுக்கு போதுமானதல்ல. நடுவர் மன்றத் தீர்ப்பின்படி கூடுதல் தண்ணீர் தரக் கோரி தமிழக அரசு உச்ச நீதி மன்றத்தில் மறு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்திருக்கிறார்கள். எனவே தமிழக முதல்வர் ஜெயலலிதா அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஒரு குழுவை அமைத்து, பிரதமரை நேரில் சந்தித்து கர்நாடகத்திலிருந்து நடுவர் மன்றத் தீர்ப்பின்படி தண்ணீர் பெற வேண்டும் என்றும், மறு சீராய்வு மனுவை உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்து கூடுதல் தண்ணீரை உடனடியாகப் பெற வேண்டுமென்றும் அவர்கள் கோரியிருக்கிறார்கள்.

ஆண்டுக்கு 193 டி.எம்.சி.

ஆண்டுக்கு 193 டி.எம்.சி.

தமிழகத்திற்கு கர்நாடகா வழங்க வேண்டிய காவிரி நீரின் அளவு கடந்த மாதத்துடன் 96 டி.எம்.சி. என்ற நிலையில் உள்ளது. விரிவாகச் சொல்ல வேண்டுமேயானால், காவேரி நடுவர் மன்றத்தின் தீர்ப்புப்படி, தமிழகத்தின் தேவைக்காக ஆண்டு தோறும் 193 டி.எம்.சி. காவிரி நீரை கர்நாடகா வழங்க வேண்டும்.

ஜூன் முதல் மே வரை

ஜூன் முதல் மே வரை

நீர் வழங்கும் காலம் ஒவ்வொரு ஆண்டும், ஜுன் மாதம் துவங்கி, அடுத்த ஆண்டு மே மாதம் வரை நீடிக்கும். ஒவ்வொரு மாதமும் எவ்வளவு நீர் வழங்கவேண்டும் என்பது பற்றி நடுவர்மன்றம் இறுதி செய்துள்ளது.

கர்நாடகா பாக்கி

கர்நாடகா பாக்கி

ஆனால் தமிழகத்திற்கு நடுவர் மன்றத் தீர்ப்பினையொட்டி, முறைப்படி தண்ணீர் வழங்காமல் கர்நாடகா தொடர்ந்து மறுத்து வருகிறது. 2015-2016ஆம் ஆண்டு நீர் வழங்கும் காலத்தில், 35 டி.எம்.சி.யை தமிழகத்திற்கு வழங்காமல் கர்நாடகா பாக்கி வைத்திருந்தது.

உத்தரவு வரவில்லை

உத்தரவு வரவில்லை

இதை வழங்க வலியுறுத்தி, உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. அதிலே உச்ச நீதி மன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க வில்லை.

ஜூனிலும் பாக்கி

ஜூனிலும் பாக்கி

2016-17ஆம் ஆண்டுக்கான நீர் வழங்கும் காலம் ஜுன் மாதம் தொடங்கியது. நடுவர் மன்றத் தீர்ப்புப்படி ஜுன் மாதத்தில் 11 டி.எம்.சி. நீரை கர்நாடகா தந்திருக்கவேண்டும்; ஆனால் 3.85 டி.எம்.சி. தண்ணீரை மட்டுமே கர்நாடகா வழங்கியது.

ஜூலை, ஆகஸ்ட்டிலும்...

ஜூலை, ஆகஸ்ட்டிலும்...

ஜுலை மாதத்தில், 34 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடக வழங்கியிருக்க வேண்டும்; ஆனால் 15.5 டி.எம்.சி., தண்ணீரை மட்டுமே வழங்கியது. ஆகஸ்ட் மாதத்தில் வழங்க வேண்டிய தண்ணீர் 50 டி.எம்.சி.யில் 14.6 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே கிடைத்துள்ளது.

96.35 டி.எம்.சி., பாக்கி

96.35 டி.எம்.சி., பாக்கி

95 டி.எம்.சி. நீரை கர்நாடகா தமிழகத்திற்கு வழங்கியிருக்க வேண்டும். இந்த ஆண்டுக்கான தவணைக் காலத்தில் 33.95 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்த ஆண்டுக்கான, கர்நாடகம் வழங்கிட வேண்டிய தண்ணீர் பாக்கி 61.35 டி.எம்.சி. கடந்த ஆண்டு பாக்கி 35 டி.எம்.சி. ஆக மொத்தம் 96.35 டி.எம்.சி., தண்ணீரை கர்நாடகா, தமிழகத்திற்குத் தர வேண்டும்.

13 டிஎம்சி தான்

13 டிஎம்சி தான்

பாக்கியுள்ள இந்த 96 டி.எம்.சி. தண்ணீரில் தான், 50 டி.எம்.சி. யைக் கேட்டு தமிழக அரசு வழக்கு தொடர்ந்ததில், உச்ச நீதி மன்றம் தமிழகத்திற்கு நாள் தோறும் வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி நீரைத் திறக்க உத்தரவிட்டது. அதன்படி பார்த்தால் 13 டி.எம்.சி. தான் நீர் கிடைக்கும்.

கர்நாடகா அனைத்து கட்சி கூட்டம்

கர்நாடகா அனைத்து கட்சி கூட்டம்

அது நம்முடைய சம்பா சாகுபடிக்கு எந்த வகையிலும் போதாது என்பது தான் தமிழக விவசாயிகளின் கருத்து. காவேரி பிரச்சினைக்காக - தண்ணீரைக் கொடுக்க வேண்டிய இடத்திலே உள்ள கர்நாடக மாநில முதலமைச்சர் அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டுகிறார்; அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த நாடாளு மன்ற உறுப்பினர்களை அழைத்துச் சென்று பிரதமரிடம் முறையிடுகிறார்;

அவசர ஆலோசனை

அவசர ஆலோசனை

அடுத்து இன்றையதினம் காவிரி நதி நீர் விவகாரத்தில் கர்நாடக அரசின் நிலைப்பாடு குறித்தும், விவசாயிகள் மற்றும் கன்னட அமைப்புகளின் போராட்டங்கள் குறித்தும் விவாதிப்பதற்காக கர்நாடக அமைச்சரவையின் அவசரக் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறார்; அடிக்கடி பத்திரிகையாளர்களை அழைத்து விபரங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.

தமிழக அரசு இருக்கிறதா?

தமிழக அரசு இருக்கிறதா?

ஆனால் தண்ணீரைப் பெற்றுத் தீர வேண்டிய நிலையிலே உள்ள தமிழ் நாட்டில் அரசு என்று ஒன்று இருக்கிறதா? அது இயங்குகிறதா? அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் காவிரிப் பிரச்சினைக்காக எப்போதாவது கூட்டினார்களா? கலந்தாலோசித்தார்களா?

எதுவுமே இல்லையே

எதுவுமே இல்லையே

பிரதமரிடம் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்துச் சென்றார்களா? இதற்காக தனியாக அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டினார்களா? என்றால் இல்லை. பத்திரிகையாளர்களை அழைத்துத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்களா? எதுவும் இல்லை என்பது தான் பதில்.

மர்மமாக இருக்கிறதே

மர்மமாக இருக்கிறதே

காவிரிப் பிரச்சினையில் தமிழக அரசின் நடவடிக்கைகள் மர்மமாகவே இருந்து வருகின்றன. இன்னும் சொல்லப் போனால், இந்தியாவின் குடியரசுத் தலைவர் தமிழகத் திற்கு வருகை தந்த போது, "பிரோட்டகால்" மரபுகளின்படி அவரை வரவேற்கச் செல்ல வேண்டிய முதலமைச்சர் ஜெயலலிதா செல்லவே இல்லை. ஊரிலே இல்லை, உடல் நலக் குறைவு என்பது போலக் காரணம் இருந்தாலும் பரவாயில்லை.

ஜனாதிபதியை வரவேற்கவில்லை..

ஜனாதிபதியை வரவேற்கவில்லை..

எந்தக் காரணமும் இல்லாமல் குடியரசு தலைவர் வருகையை முதலமைச்சர் புறக்கணித் திருக்கிறார் என்கிற போது காவிரிப் பிரச்சினைக்காக நாம் எங்கே சென்று போராடுவது? குடியரசுத் தலைவர் வருகையை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி, அவரிடம் காவிரிப் பிரச்சினையில் தமிழகம் எப்படியெல்லாம் வஞ்சிக்கப்படுகிறது என்பது பற்றி முதல்வர் முறையிட்டிருக்கலாமே?

யாரை எதிர்த்து போராடுவது?

யாரை எதிர்த்து போராடுவது?

தண்ணீர் கொடுக்க மறுக்கிற கர்நாடக அரசை எதிர்த்துப் போராடுவதா? அல்லது அந்தத் தண்ணீரைப் பெற்றுத் தருவதற்காகப் பாடுபட வேண்டிய தமிழக அரசின் அலட்சியத்தை எதிர்த்துப் போராடுவதா? காவேரியில் என்ன நிலையை இந்த அரசு எடுத்திருக்கிறது என்று வெளி உலகத்திற்கு ஒளிவுமறைவின்றி, எடுத்துச் சொல்லவே முன் வராத அரசை அல்லவா நாம் பெற்றிருக்கிறோம்.

மோடியுடன் சந்திப்பு- கடிதம்

மோடியுடன் சந்திப்பு- கடிதம்

இதற்கிடையே கர்நாடக முதலமைச்சர், பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மாநில முதலமைச்சர்களின் கூட்டத்தை உடனடியாகப் பிரதமர் கூட்டி, இந்தக் காவேரி பிரச்சினை பற்றி விவாதித்து நல்லதோர் முடிவினை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருக்கிறார். மேலும் கர்நாடகத்தைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் தேவகவுடா அவர்கள் பிரதமர் மோடி அவர்களை நேரில் சந்தித்து, காவேரி பிரச்சினையில் தலையிட்டுத் தீர்வு காண வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

நழுவிய மோடி

நழுவிய மோடி

ஆனால் பிரதமர் மோடி அவர்களோ, காவேரிப் பிரச்சினையில் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருப்பதால், அதிலே தலையிட முடியாது என்று கூறியிருக்கிறார் எப்படியோ, பிரதமர் மோடி காவிரிப் பிரச்சினையிலிருந்து நழுவி விட்டார்.

என்ன செய்யப் போகிறது அரசு?

என்ன செய்யப் போகிறது அரசு?

இந்த நிலையில் தமிழக அரசு என்ன செய்யப் போகிறது என்பதை அறிய தமிழ்நாட்டு விவசாயிகள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இனியும் தமிழக அரசு அமைதியாக இருக்காமல், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன். 13 டி.எம்.சி. வழங்க உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டதையே முழுமையாக ஏற்றுக் கொள்ளாமல், கர்நாடக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய உள்ளது.

பல் இல்லாத கண்காணிப்புக் குழு

பல் இல்லாத கண்காணிப்புக் குழு

அதைப் போல தமிழக அரசும், 96 டி.எம்.சி., தண்ணீரைக் கர்நாடகம் தர வேண்டுமென்றும், காவேரி மேலாண்மை வாரியம் - காவேரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை காலவரையறை நிர்ணயம் செய்து இப்போதாவது அமைத்திட மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டுமென்றும், சீராய்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்திட வேண்டும். காவிரி கண்காணிப்புக் குழுவை நம்பி எந்தப் பயனும் ஏற்பட்டு விடப் போவதில்லை. ஏனெனில் அதற்குச் சட்ட அங்கீகாரமோ, மாநிலங்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரமோ கிடையாது. ஜெயலலிதா பாணியில் சொல்ல வேண்டுமென்றால், காவேரிக் கண்காணிப்புக் குழு, பல் இல்லாத குழு! எதுவாயினும், காவேரிப் பிரச்சினையில் ஜெயலலிதா அரசு எதைச் செய்தாலும் வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடித்து அறிவித்துச் செய்ய வேண்டும்!

English summary
DMK leader Karunanidhi on Saturday asked the Tamil Nadu government to spell out its next course of action on Cauvery water dispute.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X