துடி துடிக்க.. கடலுக்கு நடுவே இலங்கை அராஜகம்! 23 தமிழ்நாடு மீனவர்கள் கைது! இதற்கு முடிவே இல்லையா?
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை அவர்களை கைது செய்து 2 படகுகளையும் இலங்கை பறிமுதல் செய்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராமேஸ்வரத்தில் இருந்து ஏராளமான மீன்பிடி படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று உள்ளனர். இந்த காங்கேசந்துறை கடலோரப் பகுதி மீனவர்கள் முகாமிட்டு மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். இந்த நிலையில் அவர்களை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்து எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்து இருக்கிறார்கள். 23 மீனவர்களையும் அவர்களின் 2 படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசந்துறை நீதிமன்றத்தில் இலங்கை கடற்படை ஆஜர்படுத்தி இருக்கிறது. இலங்கை கடற்படையின் இந்த அட்டூழியத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. 23 மீனவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பதால் ராமேஸ்வரத்தில் உள்ள அவர்களின் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கி உள்ளனர். தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் துயரம் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. தமிழ்நாடு மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி தாக்கி அவர்களின் படகுகளை சேதப்படுத்தி வலைகளை அறுத்து அட்டூழியம் இலங்கை கடற்படையினர் செய்து வருகிறார்கள்.
மத்திய மாநில அரசுகள் இதற்கு முற்றுப்புள்ளி வைத்து தாங்கள் பாதுகாப்பாக மீன் பிடிக்க உதவ வேண்டும் என மீனவர்கள் பல முறை கோரிக்கை வைத்து உள்ளனர். இருந்தாலும் எந்த பயனும் கிடைத்தபாடில்லை. இலங்கை அரசிடம் மத்திய மாநில அரசுகள் தரப்பிலும் கோரிக்கை வைத்தும் அவர்கள் அதற்கு அவர்கள் செவி சாய்க்கவில்லை. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலினும் பல முறை இது தொடர்பாக கடிதம் எழுதி இருக்கிறார்.
வாரந்தோறும் ஏராளமான தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு மீன்பிடி தடை காலம் என்பதால் மே மாதம் பெரிதாக இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படவில்லை. கடந்த ஜூன் மாதம் மீன்பிடித்தடைக் காலம் முடிந்து மீனவர்கள் கடலுக்கு சென்றவுடன் இலங்கை கடற்படை வேலையை தொடங்கிவிட்டது. அண்மையில் மோடி ராமேஸ்வரம் செல்வதை அடுத்து மீனவர்களை விடுவிப்பதாக தெரிவித்த இலங்கை அரசு, அடுத்த சில நாட்களிலேயே மேலும் சில மீனவர்களை கைது செய்தது. இந்த நிலையில் தற்போது 23 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டு உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications