For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மக்களிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேளுங்கள்.. முதல்வர், எம்.பிக்கள், விஜயபாஸ்கருக்கு ஸ்டாலின் விளாசல்

நீட் துரோகத்தை மாணவர்கள் மறக்க மாட்டார்கள்... மன்னிக்க மாட்டார்கள் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: நீட் தேர்வில் விலக்கு பெற்றுத்தராத அமைச்சர் விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியல் துறவறம் மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

நீட் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி, ஒரு நிர்வாக திறமையற்ற முதல்வர் என்பதை நிரூபித்துக் காட்டிவிட்டார் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக இன்று ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:

மருத்துவக் கல்வியில் சேருவதற்கு கட்டாயமாகக் கொண்டு வரப்பட்ட நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற முடியாமல், மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவைக் கலைத்துவிட்டு நிற்கிறது அதிமுக அரசு.

உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் உரிய நேரத்தில் முறையிடாமல் அமைதி காத்து, எண்ணற்ற மாணவர்களின் மருத்துவராகும் கனவைப் பறித்துவிட்டது அதிமுக அரசு.

நிர்வாக திறமையற்றவர்

நிர்வாக திறமையற்றவர்

கிராமப்புற மாணவர்கள் மற்றும் நகர்ப்புறத்தில் உள்ள ஏழை மாணவர்களின் மருத்துவக் கல்விக்கு பேராபத்தை உருவாக்கும் நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றிய இரு மசோதாக்களையும் இழந்துவிட்டு, ஆட்சியில் தொடர்ந்து அமர்ந்து கொண்டு அரசு கஜானாவை கொள்ளையடிக்க இணைப்பு நாடகத்தை நடத்தி முடித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஒரு நிர்வாக திறமையற்ற முதல்வர் என்பதை நிரூபித்துக் காட்டிவிட்டார்.

டெல்லிக்கு காவடி

டெல்லிக்கு காவடி

எனக்கு எப்படியாவது பதவி வாங்கிக் கொடுத்து விடுங்கள் என்று டெல்லிக்கு காவடி எடுத்தார் துணை முதல்வராகியிருக்கும் ஓ.பன்னீர்செல்வம். 'என் ஆட்சி கவிழ்வதை காப்பாற்றுங்கள்' என்று தானும் நேரில் சென்று, தன் அமைச்சர்களையும் டெல்லிக்கு அனுப்பி, மத்திய அமைச்சர்களையும், பிரதமரையும் அனைவரும் தொடர்ந்து சந்தித்து வந்தார்கள்.

அம்பலமான நாடகம்

அம்பலமான நாடகம்

நீட் தேர்வு குறித்து பேசுகிறோம், இரு தினங்களில் நல்ல செய்தி வரும், ஓராண்டு விலக்காவது தற்காலிகமாக பெற்று விடுவோம் என்றெல்லாம் சொன்னார்களே தவிர, டெல்லியில் முகாமிட்ட அதிமுக அமைச்சர்கள் அனைவரும் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது இப்போது அம்பலமாகி விட்டது.

ஓராண்டு விலக்கு

ஓராண்டு விலக்கு

'கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவது தமிழகத்திற்கு நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள பிரத்யேக பாதிப்பு' என்பதை மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். 'ஒரு வருடத்திற்கு விலக்கு கொடுக்கப்படும். அதற்கு மத்திய அரசு உதவும்' என்றார்.

மாணவர்கள் தலையில் பேரிடி

மாணவர்கள் தலையில் பேரிடி

ஆனால், இன்றைக்கு மத்திய அரசே உச்ச நீதிமன்றத்தின் முன்பு 'ஒரு மாநிலத்திற்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது' என்று சொல்லி கைவிரித்து இருப்பது, தமிழக மாணவர்களின் தலையில் பேரிடியை இறக்கியுள்ளது. இன்றைக்கு 4 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் ஆளுவோரின் சதியால் சூறையாடப்பட்டுள்ளது.

கொடுமையான பாதிப்பு

கொடுமையான பாதிப்பு

சமூகநீதியிலும், இட ஒதுக்கீட்டு கொள்கையிலும் தீராத வெறுப்பில் இருக்கும் பாஜக தலைமையிலான அரசிடமிருந்து தமிழகத்திற்கு ஏற்பட்ட கொடுமையான பாதிப்பு, இன்றைய தினம் தமிழக மாணவர்களை மத்திய அரசு கைவிட்டதுதான்.

கண்துடைப்பு நாடகம்

கண்துடைப்பு நாடகம்

நீட் தேர்வு விவகாரத்தில் மத்தியில் உள்ள பாஜக அரசும், மாநிலத்தில் உள்ள அதிமுக அரசும் இணைந்து நடத்திய கண்துடைப்பு நாடகத்தின் இறுதிக்காட்சி, இன்றைக்குத் தமிழக மாணவர்களுக்கு மிகப் பெரிய துரோகம் இழைக்கப்பட காரணமாக அமைந்துவிட்டது.

அந்தர் பல்டி

அந்தர் பல்டி

நீட் தேர்வுக்கு விலக்கு அளித்து சட்டம் நிறைவேற்ற மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறது என்று முதலில் உச்ச நீதிமன்றத்தில் கூறிவிட்டு, இன்றைக்கு உச்ச நீதிமன்றம் முன்பு அப்படியே மத்திய அரசு அந்தர் பல்டி அடித்திருப்பது மர்மமாக இருக்கிறது.

எதிர்காலம் சீரழிந்து விட்டது

எதிர்காலம் சீரழிந்து விட்டது

திமுக ஆட்சியில் நீட் தேர்வு நடத்த மத்தியிலிருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உத்தரவு பிறப்பித்தாலும், அதைத் தடுத்து நிறுத்தி, உயர் நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெற்றது தலைவர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு தான். பிறகு, உச்ச நீதிமன்றம் வரை சென்று நீட் தேர்வே செல்லாது என்று தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனால், இந்த நீட் தேர்வை வலுக்கட்டாயமாக திணித்தது மத்தியில் உள்ள பாஜக அரசு. அதனைக் கைகட்டி வேடிக்கை பார்த்து, தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை சீரழித்துள்ளது இங்குள்ள அதிமுக அரசு.

பாஜக - அதிமுக அரசு

பாஜக - அதிமுக அரசு

அதனால் தான் திமுக ஆட்சியிலிருந்த போது, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மத்தியில் இருந்தபோது, தமிழகத்தில் வராத நீட் தேர்வு, பாஜக ஆட்சியிலும், அதிமுக ஆட்சியிலும் வந்துவிட்டது. சமூகநீதியை அதிமுக அரசும், டெல்லியில் உள்ள பாஜக அரசும் கைகோத்து தோற்கடித்துவிட்டோம் என்று மனதிற்குள் மகிழ்ச்சியடையலாம்.

தக்க பதிலடி தருவார்கள்

தக்க பதிலடி தருவார்கள்

ஆனால் காவிரி, விவசாயிகள் கடன் தள்ளுபடி, ஹைட்ரோ கார்பன் திட்டம், பெட்ரோ கெமிக்கல் திட்டம், இன்றைக்கு நீட் தேர்வு உள்ளிட்ட அனைத்திலும் தமிழகத்திற்கு துரோகம் செய்துள்ள அதிமுக அரசுக்கும், மத்தியில் உள்ள பாஜக அரசுக்கும் தமிழக மக்களும், மாணவர்களும் தக்க பதிலடி கொடுக்க தயாராகி விட்டார்கள் என்பதை மறந்து விட வேண்டாம்.

மன்னிப்பு கேட்க வேண்டும்

மன்னிப்பு கேட்க வேண்டும்

ஆகவே, தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அடுக்கடுக்கான துரோகங்களுக்கு பொறுப்பேற்று, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன் பதவியை ராஜினாமா செய்து விடுவதே நல்லது. அதிமுகவைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களும், குறிப்பாக லோக்சபா துணைத் தலைவராக இருக்கும் தம்பிதுரையும் உடனடியாக பதவி விலகி, வாக்களித்த மக்களிடம் மண்டியிட்டு - மன்னிப்பு கேட்க வேண்டும்.

அரசியல் துறவறம்

அரசியல் துறவறம்

எல்லாவற்றிற்கும் மேலாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்வதோடு மட்டுமின்றி, தமிழக இளைஞர்களுக்கு இழைத்த துரோகத்திற்காக அரசியல் துறவறம் போக வேண்டும் என்பதே எண்ணற்ற மாணவர்களின் விருப்பமாக இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

மன்னிக்க மாட்டார்கள்

மன்னிக்க மாட்டார்கள்

மாணவர்களின் மருத்துவக் கனவை சவப்பெட்டியில் அடைத்து கடைசி ஆணியையும் அறைந்து விட்டன மக்கள் விரோத மத்திய - மாநில அரசுகள். இந்தத் துரோகத்தை பெற்றோரும் - மாணவர்களும் மறக்கவும் மாட்டார்கள், மன்னிக்கவும் மாட்டார்கள்'' என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

English summary
DMK working president today demanded the resignation of Tamil Nadu Health Minister C Vijayabhaskar for "failing" to protect the interests of the states students on the issue of a Neet execemtion result.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X