For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கத்தி-லைக்கா பெயர் நீக்க உறுதி; படம் பார்த்தபின் போராட்டம் வாபஸ்: தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: கத்தி திரைப்படம் மற்றும் விளம்பரங்களில் லைக்கா பெயரை நீக்குவதாக தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பிடம் அந்நிறுவனம் உறுதியளித்துள்ளது. இதனடிப்படையில் படத்தின் முதல் காட்சிகளை பார்த்த பின்னர் லைக்கா லோகோ பெயர் நீக்கப்பட்டிருந்தால் போராட்டம் திரும்பப் பெறப்படும் என்று தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் தி. வேல்முருகன் அறிவித்துள்ளார்.

ராஜபக்சே குடும்பத்தின் பினாமி நிறுவனமான லைக்கா விஜய் நடிக்கும் கத்தி திரைப்படத்தை தயாரிக்கிறது. இதற்கு தொடக்கம் முதல் 150க்கும் மேற்பட்ட இயக்கங்களின் கூட்டமைப்பான தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு கடுமையாக எதிர்த்து வருகிறது.

இந்த நிலையில் கத்தி திரைப்பட விவகாரத்தில் சுமூகத் தீர்வு ஏற்பட்டுவிட்டதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதனை மறுத்து தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தி. வேல்முருகன் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

Tamil movements firm to protest against Lyca's Kathi: Velmurugan

இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய்யும் லைக்காவின் பெயர் கத்தி திரைப்படத்தில் நீக்கப்படும் என்று அறிவித்திருந்தார். மேலும் திரையரங்க உரிமையாளர்களும் கத்தி திரைப்படம் வெளியிடுவதை உறுதி செய்தனர்.

இந்நிலையில் சென்னையில் இன்று மாலை தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கத்தி திரைப்படத்திலும் விளம்பரத்திலும் லைக்கா புரடொக்ஷன்ஸ் பெயரை நீக்க உறுதியளித்து அந்நிறுவனத்தின் கருணாமூர்த்தி உறுதி அளித்த கடிதம் குறித்து விவாதிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்கள் முன்னிலையில் லைக்காவின் உறுதி மொழி கடிதம், தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள தலைவர்களிடம் கொடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தி. வேல்முருகன், லைக்கா நிறுவனம் தமது பெயரை படத்திலும் விளம்பரங்களிலும் பெயரை நீக்க உறுதி அளித்துள்ளது. கத்தி திரைப்படம் நாளை வெளியாகி அதன் முதல் காட்சியில் லைக்கா நிறுவனத்தின் பெயர் நீக்கப்பட்டுள்ளதா என கண்காணிப்போம்.

எங்களுக்கு உறுதி அளிக்கப்பட்டபடி லைக்கா பெயர் நீக்கப்பட்டிருந்தால் எங்களது போராட்டத்தை நிறுத்துவோம். அனைத்து திரைப்பட சங்கங்களும் எதிர்காலத்தில் லைக்கா நிறுவனத்துடன் எந்த ஒரு வர்த்தக உறவை வைத்துக் கொள்ளமாட்டோம் என்றும் எங்களுக்கு உறுதி அளித்துள்ளன.

லைக்கா நிறுவனத்துடன் வர்த்தக உறவு வைக்கமாட்டோம் என அனைத்து திரைப்பட சங்கங்களும் உறுதிஅளித்துள்ளன என்றார் வேல்முருகன்.

இதற்கு முன்னதாக இன்று காலை வேல்முருகன் வெளியிட்ட அறிக்கை:

இலங்கை அதிபர் ராஜபக்சே குடும்பத்தினர் பங்குதாரராக இருக்கும் லைக்கா நிறுவனம் தயாரிக்கும் கத்தி திரைப்பட்ட பிரச்சனையில் சுமூக தீர்வு ஏற்பட்டுவிட்டதாக அந்நிறுவனமும் படக்குழுவினரும் விஷமத்தனமான செய்திகளை ஊடகங்களில் வெளியிட்டு வருவதை வன்மையாக கண்டிக்கிறேன். தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பினர் முன்வைத்த கோரிக்கையை கத்தி திரைப்படக் குழு இதுவரை ஏற்கவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் கத்தி திரைப்படத்தை "லைக்கா" நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் இலங்கைத் தமிழர் சுபாஷ்கரன். ஆனால் இனப்படுகொலையாளனாகிய இலங்கை அதிபர் ராஜபக்சேவின் சகோதரி மகன் ஹிமல் லீலந்திர ஹெட்டியராச்சிதான் லைக்காவின் உண்மையான உரிமையாளர்.

2007ஆம் ஆண்டே லைக்கா குழுமத்துக்கு சொந்தமான தாய் நிறுவனமான ஹேஸ்டிங்ஸ் என்ற நிறுவனத்தை ராஜபக்சேவின் சகோதரி மகன் ஹிமல் லீலந்திர ஹெட்டியராச்சி வாங்கிவிட்டார்.

இதற்கான ஆதாரங்களை இலங்கை நாட்டின் ஊடகங்கள் வெளியிட்டன. இந்த ஆதாரங்களை வெளியிட்டதற்காகவே சண்டே லீடர் என்ற இலங்கை ஊடகத்தின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டார்.

இதனை அடிப்படையாகக் கொண்டே லைக்கா நிறுவனத்துக்கும் ராஜபக்சே குடும்பத்துக்குமான உறவு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று இங்கிலாந்து நாட்டு எம்.பிக்கள் வலியுறுத்தினர். இது ஹப்பிங்டன் போஸ்ட் போன்ற சர்வதேச ஊடகங்களில் வெளிவந்த செய்திகளே.

இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்களைப் படுகொலை செய்த இனப்படுகொலையாளன் ராஜபக்சேவின் குடும்பத்துக்குச் சொந்தமான லைக்கா நிறுவனம்தான் தமிழ்த் திரைப்படங்களை தயாரித்தே தீருவோம் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறது.

தமிழக சட்டமன்ற தீர்மானத்துக்கு எதிராக..

ஏற்கெனவே இனப்படுகொலை போர்க்குற்றத்துக்காக ராஜபக்சேவை தண்டிக்க வேண்டும்; இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவால் முன்மொழியப்பட்டு தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளின் ஒப்புதலுடன் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தமிழக சட்டமன்றத் தீர்மானத்தின் அடிப்படையில்தான் ராஜபக்சே குடும்பத்தினருக்கு சொந்தமான லைக்கா நிறுவனம், கத்தி திரைப்படத்தை தயாரிக்கக் கூடாது என்று 150க்கும் மேற்பட்ட இயக்கங்களின் கூட்டமைப்பான தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி போராடி வருகிறது.

இது இயக்குநர் முருகதாசுக்கோ, நடிகர் விஜய்க்கோ மற்ற கலைஞர்களுக்கோ எதிரானது அன்று. எங்களைப் பொறுத்தவரையில் இனப்படுகொலையாளன் ராஜபக்சே குடும்பத்தினர் பங்குதாரராக இருக்கக் கூடிய லைக்கா நிறுவனம் கத்தி உட்பட எந்த ஒரு தமிழ்த் திரைப்படத்தை தயாரிக்கக் கூடாது. நாங்கள் வேறு எந்த தமிழ்த் தயாரிப்பு நிறுவனமும் திரைப்படத்தை தயாரித்து வெளியிடுவதை ஒருபோதும் ஆட்சேபனை தெரிவிக்கப் போவதில்லை என்று பலமுறை அறிவித்திருந்தோம். ஆனாலும் ஒட்டுமொத்த மொத்த தமிழகத்தின் வேண்டுகோளை ஏற்காமல் இனப்படுகொலையாளன் ராஜபக்சே குடும்பத்தினர் பங்குதாரராக இருக்கும் லைக்கா நிறுவனம் விடாப்பிடியாக வேண்டுமென்றே திர்மித்தனமாக கத்தி திரைப்படத்தை தயாரித்து வெளியிடுவதில் தீவிரம்காட்டி வருகிறது.

சுபாஷ்கரன் ஒப்புதல்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய லைக்கா நிறுவனத்தின் சுபாஷ்கரன் வெளிப்படையாக, இலங்கை அரசுக்கு சொந்தமான இலங்கை ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துடன் இணைந்து வர்த்தகம் செய்கிறோம் என்று ஒப்புதல் வாக்குமூலமே கொடுத்திருக்கிறார். இந்த இலங்கை ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இயக்குநராக இருப்பவர் ராஜபக்சேவின் சகோதரர் மகன் சமீந்திர ராஜபக்சே. இதே லைக்கா நிறுவனம்தான் தமிழக அரசு கடுமையாக எதிர்த்த கொழும்பு காமன்வெல்த் மாநாட்டின் கோல்டன் ஸ்பான்சராக இருந்ததுடன் இலங்கைக்கு பொருளாதாரத்தை ஈட்டித் தரக்கூடிய வகையிலான மாநாட்டையும் நடத்தியது. இம்மாநாட்டில் லைக்காவின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த காங்லியும் கலந்து கொண்டார்.

இப்படி தமிழ்நாட்டு சட்டமன்றத்தின் "இலங்கை மீதான பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்" என்ற தீர்மானத்தைத் தகர்க்கும் வகையில் ஜெயலலிதாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில்தான் லைக்கா நிறுவனம் திட்டமிட்டே கத்தி திரைப்படத்தை தயாரித்து வெளியிட இருக்கிறது. இதனால்தான் 150க்கும் மேற்பட்ட இயக்கங்களின் கூட்டமைப்பான தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு இதை கடுமையாக எதிர்க்கிறது.

அதுமட்டுமல்ல. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுபாஷ்கரன், கத்தி திரைப்படத்துக்கான முதலீடு தன்னுடைய 2 நாள் வருமானம் மட்டுமே என்று அகந்தையாக கூறியிருக்கிறார். இப்படிப்பட்ட பினாமி பணமுதலைகளைத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பில் தொடர்ந்தும் இயங்க அனுமதித்தால் நடிகர், நடிகைகள் இந்த பினாமி கும்பலை நோக்கித்தான் செல்வார்கள். இதனால் சிறு திரைப்பட தயாரிப்பாளர்கள் பெரும் நெருக்கடிக்குள்ளாக நேரிடும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறோம்.

லைக்கா நிறுவனத்துக்கு எதிரான எங்களது இந்த எதிர்ப்புக் குரலும் போராட்டமும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் உறவுகளுக்குமானது என்பதை திரை உலகம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்தோம்.

இத்தனை இயக்கங்கள் கை கோர்த்து "லைக்கா" நிறுவனத் தயாரிப்பான கத்தி திரைப்படத்தை எதிர்ப்பதால் இப்படத்தை வாங்கி விநியோகிக்காமலும் தங்களது திரையரங்குகளில் திரையிடாமலும் இருக்க வேண்டும் என்று 150-க்கும் மேற்பட்ட தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

பொய்யான வதந்தி

இந்த நிலையில் 'கத்தி' திரைப்படம் தொடர்பான எங்களது எதிர்ப்பில் தீர்வு காணப்பட்டுவிட்டது; சுமூகத் தீர்வு காணப்பட்டது என்று ஊடகங்களில் பொய்யான செய்திகளை கத்தி திரைப்படக் குழுவும் லைக்கா நிறுவனமும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இந்த செய்திகளில் துளியும் உண்மை இல்லை. கத்தி திரைப்படத்தின் தயாரிப்பில் இருந்து லைக்கா நிறுவனம் விலகும் வரை எங்களது எதிர்ப்பு தொடரவே செய்யும்.

இப்படி பொய்யான செய்திகளைப் பரப்பி விஜய் ரசிகர்கள், தமிழ்த் திரைப்பட உலகத்துக்கும் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்புக்கும் இடையே மோதலை உருவாக்கும் பெரும் சதியில் லைக்கா நிறுவனம் இறங்கியுள்ளது. இத்தகைய மோதல் மூலம் தமிழகத்தில் மிகப் பெரிய அளவில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க செய்ய வேண்டும் என்ற ராஜபக்சேவின் சதித் திட்டத்தை லைக்கா நிறுவனம் அரங்கேற்ற முயற்சிக்கிறது என்று நாங்கள் குற்றம்சாட்டுகிறோம்.

தற்போது கத்தி திரைப்படத்துக்கு தமிழக அரசே பாதுகாப்பு கொடுக்கப் போகிறது என்று ராஜபக்சேவின் அடிவருடி சுப்பிரமணியன் சுவாமி தமது ட்விட்டர் பக்கத்தில் பொய்யான ஒரு செய்தியை பகிரங்கமாக தெரிவித்திருப்பதன் மூலம் ராஜபக்சே- லைக்கா நிறுவனம்- சுப்பிரமணியன் சுவாமி ஆகியோரின் கூட்டுச் சதியும் அம்பலமாகி இருப்பதை சுட்டிக்காட்டுகிறோம்.

அற வழிப்போராட்டம்

கத்தி திரைப்படத்தை தயாரிப்பில் இருந்து இனப்படுகொலையாளன் ராஜபக்சே குடும்பத்தினர் பங்குதாரராக இருக்கும் லைக்கா நிறுவனம் வெளியேறும் வரை எங்களது எதிர்ப்பும் அறவழிப் போராட்டமும் தொடரவே செய்யும்.

லைக்கா நிறுவனம் ஊடகங்களில் பரப்பி விடும் எந்த ஒரு செய்தியையும் தமிழ் மக்கள் நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன். எங்களது வேண்டுகோளை மீறி கத்தி திரைப்படம் வெளியானால் எங்களது எதிர்ப்பை அறவழியில் அனைத்து திரையரங்குகள் முன்பாக வெளிப்படுத்துவோம் என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள முக்கிய அரசியல் கட்சிகள், தமிழ்த் தேசிய அமைப்புகள், பெரியார் இயக்கங்கள், மாணவர் அமைப்புகள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், படைப்பாளிகள் அனைவரும் நமது கூட்டமைப்பின் சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை லைக்கா நிறுவனமும் கத்தி திரைப்படக் குழுவும் பரப்பிவிடும் எந்த ஒரு வதந்தியையும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் நமது தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள அத்தனை அரசியல் கட்சிகள், இயக்கங்களின் தோழர்களும் தொண்டர்களும் கத்தி திரைப்படத்துக்கு எதிராக அமைதியான அறவழியில் மட்டுமே போராட்டம் நடத்த வேண்டும்; எந்த ஒரு வன்முறைச் சம்பவங்களிலோ வேறு எந்த ஒரு நடவடிக்கையிலோ ஈடுபடவே கூடாது என்றும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையிலான சட்டம் ஒழுங்கு சீர்குலைவு செயல்களை மேற்கொள்வதன் மூலம் நமது இன எதிரிகள் கொண்டாடி மகிழ்வதற்கு ஒருபோதும் நாம் இடம் அளித்துவிடக் கூடாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு தி. வேல்முருகன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
150 Pro-Tamil groups firm their stand to opposing the release of the film alleging that its producers, Lyca Productions, have close business ties with Sri Lankan President Rajapaksa, seen as responsible for the killings of several thousand Tamil civilians allegedly by his army during the final phase of the war against the Tamils.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X