For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோயம்பேடு ஸ்டைலில் கோவையில் வருகிறது பிரமாண்ட பஸ் நிலையம் - ஜெ. அறிவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: கோவை, வெள்ளலூர் பகுதியில் பிரமாண்டமான ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், கோவைக்கான பல்வேறு திட்டங்கள் குறித்தும் அவர் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தென்னிந்தியாவின் மான்செஸ்டர்

தென்னிந்தியாவின் மான்செஸ்டர்

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுவதும், தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்த நகரமாக விளங்குவதும், விரைந்து வளர்ந்து வரும் வணிக மையமாகவும், உகந்த சீதோஷ்ண நிலையைக் கொண்டதாகவும் விளங்குகின்ற கோயம்புத்தூர் மாநகராட்சியில், பெருகி வரும் மக்கள் தொகையைக் கணக்கிற்கொண்டு, கடந்த மூன்று ஆண்டுகளில் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளை எனது தலைமையிலான அரசு ஏற்படுத்தி உள்ளது.

ரூ. 309 கோடியில் பணிகள்

ரூ. 309 கோடியில் பணிகள்

கடந்த மூன்று ஆண்டுகளில், குடிநீர் திட்டப்பணிகள், பாதாள சாக்கடை பணிகள், சாலைகள், மழைநீர் வடிகால்கள், திடக்கழிவு மேலாண்மை பணிகள், தெருவிளக்குகள், கட்டடங்கள், பூங்காக்கள் என மொத்தம் 309 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 1490 அடிப்படை வசதிப்பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு பெரும்பாலான பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எஞ்சிய பணிகள் நடைபெற்று வருகின்றன.

மருத்துவ வசதிகள்

மருத்துவ வசதிகள்

மருத்துவ வசதி என எடுத்துக் கொண்டால், கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லுலூரியில் 57 கோடியே 19 லட்சம் ரூபாய் செலவில் அடுக்குமாடி கட்டடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. மேலும், இம்மருத்துவமனையில் 15 கோடி ரூபாய் செலவில் மண்டல புற்றுநோய் சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி இம்மருத்துவமனையில் ஒருங்கிணைந்த அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்புச் சேவை (சீமாங்) பிரிவிற்கு 7 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடமும், அறுவை சிகிச்சை அரங்கிற்கு 2 கோடி ரூபாய் செலவில் நவீன மருத்துவக் கருவிகளும், மேம்படுத்தப்பட்ட வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

மேம்பாலங்கள் - சாலைகள்

மேம்பாலங்கள் - சாலைகள்

இது தவிர, கோயம்புத்தூர் மாநகரில் உக்கடம் சுண்டக் காமுத்தூர் மேம்பாலம் கட்டும் பணிகள் மற்றும் கோவை புதூர் சாலைப்பணிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. கோயம்புத்தூர் காந்திபுரம் பேருந்து நிலையப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் டாக்டர் நஞ்சப்பா சாலை மற்றும் சின்னசாமி சாலை ஆகியவற்றில் மேம்பாலம் மற்றும் பாதசாரிகள் சுரங்க பாதை அமைக்கும் பணிகள் 162 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயலாக்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு உள்ளன.

பாதுகாக்கப்பட்ட குடிநீர்

பாதுகாக்கப்பட்ட குடிநீர்

இது மட்டுமல்லாமல், கோயம்புத்தூர் மாநகராட்சியில் சீரான அழுத்தத்துடன் பாதுகாக்கப்பட்ட குடிநீர் அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் கிடைக்கும் வகையில், குடிநீர் விநியோகத் திட்டம் 451 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என என்னால் தமிழ்நாடு சட்டசபையில் அறிவிக்கப்பட்டு அதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் புதிய திட்டங்கள்

மேலும் புதிய திட்டங்கள்

இதன் தொடர்ச்சியாக, கோயம்புத்தூர் மாநகராட்சி மக்களுக்கு மேலும் கூடுதல் வசதிகளை ஏற்படுத்தித் தரும் வகையில் கீழ்க்காணும் திட்டங்களை செயல்படுத்த நான் ஆணையிட்டுள்ளேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நகர்ப்புற சுகாதார மையங்கள்

நகர்ப்புற சுகாதார மையங்கள்

1. நகர்ப்புர ஏழை மக்களின் மருத்துவத் தேவைகளை நிறைவு செய்யும் பொருட்டு 7 கோடியே 4 லட்சம் ரூபாய் செலவில் கோயம்புத்தூர் மாநகராட்சியில் தற்போதுள்ள 12 நகர்ப்புர சுகாதார மையங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்படுவதோடு 20 நகர்ப்புர சுகாதார மையங்கள் மேம்படுத்தப்படும். இதுமட்டுமின்றி ஒரு புதிய நகர்ப்புர ஆரம்ப சுகாதார நிலையம் ஏற்படுத்தப்படும்.

வெள்ளலூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்

வெள்ளலூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்

2. கோயம்புத்தூர் மாநகரத்தின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு கீழ்காணும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்:

(அ) வெள்ளலூர் பகுதியில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில், தமிழ்நாடு உட்கட்டமைப்பு மேம்பாட்டு வாரிய நிதியின் கீழ் 125 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும்.

லாரிகள் நிறுத்துமிடம்

லாரிகள் நிறுத்துமிடம்

(ஆ) கோவை மாநகருக்கு வெளியே பல்வேறு உட் கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய லாரிகள் நிறுத்துமிடம் அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, இதனடிப்படையில் திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

சங்கனூர் பள்ளம்

சங்கனூர் பள்ளம்

(இ) சங்கனூர் பள்ளத்தை சீரமைத்து, அதன் இரு கரைகளிலும் இலகு ரக வாகனங்கள் செல்லும் விதமாக, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, அவினாசி சாலை மற்றும் திருச்சி சாலை முதலான சாலைகளை இணைத்து ஒரு அரை வட்ட சாலை அமைக்கப்படும். மேலும், கரைகளில் வாழ்ந்து வரும் மக்களுக்கு மாற்றிடங்களில் வீடுகள் வழங்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

பல அடுக்கு வாகன நிறுத்துமிடம்

பல அடுக்கு வாகன நிறுத்துமிடம்

(ஈ) காந்திபுரம், ஆர்.எஸ். புரம் டி.பி.சாலை மற்றும் டவுன் ஹால் ஆகிய மூன்று இடங்களில் பல அடுக்கு வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்படும். இதனை தனியார் பங்களிப்புடன் 80 கோடி ரூபாயில் செயல்படுத்த விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது.

20 ஏக்கரில் வீட்டு வசதித் திட்டம்

20 ஏக்கரில் வீட்டு வசதித் திட்டம்

3. சமுதாயத்தின் நலிந்த பிரிவினர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் போதுமான வீட்டு வசதியை ஏற்படுத்தி தரவேண்டும் என்பதன் அடிப்படையில், வீடில்லாத ஏழைகளுக்கு 443 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மாநகராட்சிக்கு சொந்தமான 20 ஏக்கர் பரப்பளவில் 2912 வீடுகள் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் கட்டித்தரப்படும்.

3வது குடிநீர்த் திட்டம்

3வது குடிநீர்த் திட்டம்

4. கோயமுத்தூர் மாநகரின் அதிகரித்து வரும் குடி நீர் தேவையை கருத்திற்கொண்டு, மூன்றாவது குடிநீர் திட்டத்தை செயல்படுத்த ஏதுவாக, பெரிய கோம்பை மலை மற்றும் கட்டன் மலையில், 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தனிக்குகை வழிப்பாதை அமைக்கப்படும்.

பாதாள சாக்கடைத் திட்டம்

பாதாள சாக்கடைத் திட்டம்

5. கோயம்புத்தூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு உள்ள பகுதிகளில் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படும். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் மேற்கொள்ளப்படவுள்ள இத்திட்டத்திற்கு விரிவான திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. மேலும், கோயம்புத்தூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ள பகுதிகளில், சுமார் 1745 கிலோ மீட்டர் நீளம் மழை நீர் வடிகால் வசதி படிப்படியாக ஏற்படுத்தி தரப்படும். 1550 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இப்பணிகளை மேற்கொள்வதற்கான விரிவான திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

60 கோடியில் சாலை சீரமைப்பு

60 கோடியில் சாலை சீரமைப்பு

6. கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடைப் பணிகள் மற்றும் குடிநீர் பணிகளால் சேதமடைந்த சாலைகள் 60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்படும்.

கட்டடக் கழிவுகள் மறு சுழற்சி

கட்டடக் கழிவுகள் மறு சுழற்சி

7. கோயம்புத்தூர் மாநகரின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், கட்டடக் கழிவுகளை மறு சுழற்சி செய்து பயன்தரும் பொருட்களாக மாற்றம் செய்யும் திட்டம் 12 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாட்டில் முதன்முறையாக செயல்படுத்தப்படும். மேற்காணும் திட்டங்கள் மூலம், கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் கூடுதல் வசதிகளை பெறுவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

English summary
Chief Minister J Jayalalithaa today announced a slew of projects worth more than Rs. 2,000 crores which would bring new amenities and infrastructure upgradation in the industrial and textile city of Coimbatore. The projects announced include 2,912 houses for homeless poor at a cost of Rs. 443.55 crore, under-ground drainage and storm water drains in extended areas of city corporation at an estimated cost of Rs. 1,555 crore and a Rs. 125 crore new integrated bus terminus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X