For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திராவிட அரசியலுக்கு தமிழகத்தில் தேவையே கிடையாது: சீமான் அதிரடி பேட்டி

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: தமிழர் என்று சொன்னால் பிராமணரும், அதில் வந்துவிடுவார்கள் என்று விமர்சனம் செய்கிறார்கள், ஆனால் நாம் தமிழர் கட்சி ஆரம்பித்து 4 வருடங்கள் ஆகியும் ஒரு பிராமணரும் கட்சியில் சேரவில்லை. ஆனால், திராவிட கட்சிகள் என்று கூறிக்கொள்ளும் இடங்களித்தான் பிராமணர்கள் சேர்ந்துள்ளனர் என்று கூறியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

திருச்சியில் வெற்றிகரமாக 'மாற்றத்துக்கான எளிய மக்களின் மாநாடு' நடத்தியுள்ள சீமான், சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்து நிற்கும் என்று சூட்டோடு சூடாக அறிவித்து தமிழக மக்களை திரும்பிப் பார்க்க செய்துள்ளார்.

காலம்காலமாக, தெலுங்கர், கன்னடர், மலையாளிகளை உள்ளடக்கி, திராவிடம் பேசிய வந்த கட்சிகளுக்கு நடுவே, தமிழ்நாட்டை தமிழரே ஆள வேண்டும் அப்போதுதான் தமிழர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள முடியும் என்று சீமான் வைக்கும் கோரிக்கை, தமிழர்களுக்கு புது பார்வையை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, இவ்வார ஆனந்த விகடன் வார இதழுக்கு சீமான் அளித்துள்ள பேட்டியிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இதோ:

தேர்தல் வாக்குறுதி

தேர்தல் வாக்குறுதி

தமிழ் வழியில் இலவசக் கல்வி, இலவச மருத்துவம், மது ஒழிப்பு ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுப்போம். தமிழ்த் தேசியத்தை வளர்த்தெடுக்க தமிழ் முதலாளிகளை உருவாக்குவோம். உடனே சிலர் தமிழ்நாட்டைத் தனியாகப் பிரித்துக்கொண்டுபோவோம் என, நாங்கள் சொல்வதாக நினைக்கிறார்கள். ஆனால், அது அப்படி இல்லை என்று தனது தேர்தல் பிரச்சார திட்டம் பற்றிய கேள்விக்கு சீமான் பதிலளித்துள்ளார்.

ஜெ.வை விமர்சிப்பதில்லையா?

ஜெ.வை விமர்சிப்பதில்லையா?

கருணாநிதியை விமர்சனம் செய்யும் அளவுக்கு ஜெயலலிதாவை விமர்சிப்பதில்லையே என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள சீமான் "கடந்த 50 ஆண்டு கால தமிழ்நாடு அரசியலின் மையம் கருணாநிதி என்பதால், அவர் மீதான விமர்சனங்கள் தீவிரமாக இருக்கின்றன. கருணாநிதி மட்டும் காமராஜர், கக்கன் போல இருந்திருந்தால், எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் தமிழ்நாட்டு அரசியலில் உருவாகியே இருக்க மாட்டார்கள்'' என்று காரமாக பதிலளித்துள்ளார்.

சொந்தமாக கற்றுக்கொண்டோம்

சொந்தமாக கற்றுக்கொண்டோம்

அரசியலில் மூத்தவர்களே தேர்தலில் கூட்டணிக்காக அலையும்போது, தனித்து நாம்தமிழரால் சாதிக்க முடியுமா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள சீமான் "மாநாடு நடத்தவோ, கட்சி நடத்தவோ யாரும் எங்களுக்குக் கற்றுக்கொடுக்கவில்லை. நாங்களாகக் கற்றுக்கொண்டு மாநாட்டை நடத்தி முடித்தோம். எமது முன்னோடிகளான வைகோ, ராமதாஸ், தொல்.திருமாவளவன் ஆகியோர் அரசியல் களத்தில் செய்த தவறுகள்தான், படித்துத் திருத்திக்கொள்ள வேண்டிய பாடங்கள். கருணாநிதி, ஜெயலலிதாவை விட்டால் நாங்கள் இருக்கிறோம் எனச் சொல்லவும், தேர்தலில் வெல்லவும் எங்களால் முடியும்'' என்று கூறியுள்ளார்.

ஸ்டாலின் பெயர் ஏன்?

ஸ்டாலின் பெயர் ஏன்?

நாம்தமிழர் மாநாட்டில் ஹிட்லர் படம் வைத்திருந்தது மற்றும், அதை திமுகவின் மனுஷ்யபுத்திரம் கேலி செய்தது போன்றவை குறித்த கேள்விகளுக்கு, "நான் ஹிட்லரை வைத்திருப்பது இருக்கட்டும். தி.மு.க தலைவர் தன் மகன் கருணாநிதிக்கு 'ஸ்டாலின்' என ஏன் பெயர் வைத்தார்? 'ஸ்டாலின் ஒரு ஃபாசிஸ்ட்' எனச் சிலர் சொல்கிறார்களே. மனுஷ்ய புத்திரன் இது பற்றி கேட்டுச் சொல்லட்டும். அப்படியே, கலைஞர் தொலைக்காட்சியில் ஹிட்லர் தொடரை ஏன் ஒளிபரப்பினார்கள் என்றும் கேட்டுச் சொல்லட்டும். மாநாடுகளில் வைக்கப்படும் விளம்பரப் பலகைகளை வைத்து அரசியல் முத்திரை குத்தத் தொடங்கினால், எல்லா அரசியல் கட்சிகளைப் பற்றியும் இப்படி ஆயிரம் அபத்தங்களை அடுக்க முடியும்" என்று கூறியுள்ளார்.

உணர்வுள்ள தமிழன் வேண்டும்

உணர்வுள்ள தமிழன் வேண்டும்

தமிழ்நாட்டை தமிழன் ஆண்டால் பிரச்சினைகளை சரி செய்துவிடுவார்களா என்ற கேள்விக்கு "நாம் தமிழர்' என்ற பெயர்தான் இங்கு பிரச்னையா?. ஆந்திராவில் என்.டி.ஆர் கட்சி தொடங்கும்போது 'திராவிட தேசம்' என்றா பெயர் வைத்தார்? 'தெலுங்கு தேசம்' எனத்தானே பெயர்வைத்தார்! இதெல்லாம் யாருக்கும் பிரச்னை இல்லை. அரசியலாகத்தான் தெரியும். ஆனால், நாங்கள் தமிழ்த் தேசியம் பேசினால், அது பக்கவாதமாகவும் முடக்குவாதமாகவும் இருக்கும். ஆக, அனுபவங்களின் அடிப்படையில் சொல்கிறேன்... உணர்வுள்ள தமிழன் வந்தால், இங்கு எல்லாம் சரியாகிவிடும். இதை நான் சத்தியம் செய்து சொல்கிறேன். அதற்குத்தான் வாய்ப்பு கேட்டு வருகிறோம். ஏனென்றால், நாங்கள் தேர்தல் கூட்டணியில் இருந்து விலகி நிற்கிறோம் என்று கூறியுள்ளார் சீமான்.

திராவிடம் எக்காலமும் வேண்டாம்

திராவிடம் எக்காலமும் வேண்டாம்

திராவிடத்துக்கான தேவை இந்த காலத்துக்கு பொருந்தவில்லை என்கிறீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள சீமான் ''எந்தக் காலத்துக்கும் பொருந்தவில்லை; அதற்கான தேவையும் இல்லை என்பதே எங்கள் நிலைப்பாடு. மலையாளிகள், கன்னடர்கள், தெலுங்கர்கள் யாரும் தங்களை திராவிடர்களாக அடையாளப்படுத்தாதபோது, நமக்கும் அது தேவை இல்லை என்றே சொல்கிறேன்.

எங்கே பிராமணர்

எங்கே பிராமணர்

உடனே, 'தமிழன் என்று சொன்னால், பிராமணர்களும் தமிழன் என்று நம்மோடு வந்துவிடுவான்' என்கிறார்கள் ஒரு தரப்பினர். நாங்கள் கட்சி தொடங்கி நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவரை ஒரு பிராமணர்கூட 'நானும் தமிழன்தான்' என வரவில்லை. ஆனால், அவர்கள் திராவிட இயக்கங்களில் இணைந்திருக்கிறார்கள். ஆக, தமிழர்களின் மான உணர்வைச் சிதைத்து ஐயாவின் காலில் விழவும், அம்மா பயணிக்கும் ஹெலிகாப்டரின் நிழலில் விழுந்து வணங்கும் அடிமை அரசியலைத்தான் திராவிடம் இங்கே கொண்டு வந்தது'' என்றுள்ளார்.

தீக்குளிப்பேன்

தீக்குளிப்பேன்

நீங்கள் சீமான் இல்லை, சைமன் (கிறிஸ்தவர்) என்ற விமர்சனங்களும் வருகிறதே என்ற கேள்விக்கு ''என் பெயர் சைமன் என யாரேனும் நிரூபித்தால், நான் தீக்குளிக்கத் தயாராக இருக்கிறேன். என் மதம் தமிழம், என் வேதம் திருக்குறள். 'நாம் தமிழர்' மூலம் தமிழ் மண்ணில் நாங்கள் விரும்பும் அரசியல் மாற்றத்தை நிகழ்த்திக்காட்டுவோம். இவர்கள் என்னைப் பற்றி என்ன வேண்டும் என்றாலும் பேசட்டும்; கவலை இல்லை. இதுவரை ஈழத்தையும் பிரபாகரனையும் வைத்து விற்று பிழைப்பு நடத்தியவர்கள், நாங்கள் விதைப்பதைக் கண்டு பொறாமையில் இப்படிப் பொசுங்குகிறார்கள்.

நான் எதிரியில்லை

நான் எதிரியில்லை

நான் மலையாளிகளுக்கோ, தெலுங்கர்களுக்கோ, கன்னடர்களுக்கோ எதிரி அல்ல. அடிமைப்பட்ட தமிழர்களுக்கான அரசியல் விடுதலையின் தமிழ் வடிவம் நான் என்பதை அவர்கள் புரிந்துகொள்ளும்போது, என்னைத் திட்ட மாட்டார்கள்!'' என்று தனது பேட்டியில் ஆவேசமாக கூறியுள்ளார் சீமான்.

English summary
Naam Tamilar party's chief coordinator Seeman says in an interview that,Tamilan should rule Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X