மு.க.அழகிரியிடம் இருந்து 40 சென்ட் கோவில்நிலம் மீட்பு: அறநிலையத்துறை நடவடிக்கை
மதுரை: மு.க.அழகிரி பெயரில் போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்ட 44 சென்ட் கோவில் நிலம் மீட்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் சிவரக்கோட்டையில், மு.க.அழகிரி அறக்கட்டளைக்கு சொந்தமான தயா பொறியியல் கல்லூரி உள்ளது.
இந்த கல்லூரி அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சொந்தமான 44 சென்ட் இடத்தை, மு.க.அழகிரி பெயரில் போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு செய்ததாகவும், அந்த இடத்தை தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை மீட்க வேண்டும் என்றும் சிவரக்கோட்டையை சேர்ந்த விவசாய சங்க தலைவர் ராமலிங்கம் மதுரை ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார். அந்த புகாரின் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தயா கல்லூரிக்கு வந்த சிக்கல்
திருமங்கலம் சிவரக்கோட்டை அருகே அழகிரி கட்டிய தயா பொறியியல் கல்லூரி, அரசு நிலத்தில் உள்ள பாசனக் கால்வாய்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாகப் புகார் எழுந்தது. அதன் பிறகு பல்வேறு காரணங்களைக் கூறி இன்று வரை அந்தக் கல்லூரியைத் திறக்க அரசு அனுமதி அளிக்கவில்லை.

விவசாய சங்கத்தலைவர் புகார்
இந்த நிலையில், அந்தக் கல்லூரியை ஒட்டியுள்ள அறநிலையத் துறைக்குச் சொந்தமான நிலத்தை அழகிரி பெயரில் கிரயம் வாங்கியிருப்பதாகக் கூறி, கடந்த 20-ம் தேதி மதுரை மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியனிடம் விவசாய சங்கத் தலைவர் சிவரக்கோட்டை ராமலிங்கம் புகார் மனு கொடுத்தார். இவர்தான் தயா பொறியியல் கல்லூரி கட்டியுள்ளதில் நிலமோசடி நடந்துள்ளதாக ஏற்கெனவே புகார் எழுப்பியவர்.

மோசடி செய்த அழகிரி
மு.க.அழகிரி தன் மகன் பெயரில் கல்லூரி கட்டுவதற்காக சிவரகோட்டையில் 15 ஏக்கர் நிலம் வாங்கினார். கூடவே அருகில் இருந்த அறநிலையத் துறையின் விநாயகர் கோயிலுக்குச் சொந்தமான 44 சென்ட் நிலத்தையும் 2010-ல், மோசடியாக தன் பெயரில் பத்திரம் பதிந்துள்ளார்.

பட்டாவில் செய்த கோல்மால்
திமுக ஆட்சியில் இருந்ததைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, முதலில் பட்டாவில் கோல்மால் செய்துள்ளனர். முதலில், ஜெயராஜ் மகன் சதீஷ் என்பவரது பெயரில் அந்த நிலம் இருப்பது போன்று பட்டாவில் மாற்றம் செய்துவிட்டு பிறகு அந்த இடத்தை மதுரையைச் சேர்ந்த சேதுராமன் மகன் சம்பத்குமார் பெயருக்கு மாற்றியுள்ளார். அவரிடம் இருந்து அழகிரி கிரயம் வாங்கியதாக பத்திரம் தயார் செய்து, திருமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர்

கிரிமினல் வழக்கு
கோயில் நிலத்தை ஆக்கிரமித்து மோசடியாக பத்திரம் பதிவுசெய்த அழகிரி மீது, கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் விவசாய சங்கத் தலைவர் ராமலிங்கம்.

சகாயத்தின் நடவடிக்கை
மதுரையில் கலெக்டர் சகாயத்துக்குப் பிறகு வந்த அதிகாரிகள் நியாயமாக நடந்துகொள்ளவில்லை. அழகிரிக்குப் பயப்படுகிறவர்களாக இருக்கிறார்கள். இன்னும் வருவாய்த் துறையிலும் காவல் துறையிலும் பலர் தி.மு.க ஆதரவாளர்களாகத்தான் இருக்கிறார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அதிமுகவினர் ஆதரவு
அ.தி.மு.க முக்கிய நிர்வாகிகளே அழகிரியிடம் தொடர்புடன்தான் இருக்கிறார்கள் என்று புகார் தெரிவித்துள்ள அவர், முதல்வர் கவனத்துக்கு இந்த விவகாரத்தை கொண்டு சென்றதோடு மாவட்ட ஆட்சித்தலைவரிடமும் முறையிட்டார்.

கல்லூரியில் ஆய்வு
இந்த நிலையில் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் முத்து தியாகராஜன், துணை ஆணையர் கருணாநிதி மற்றும் சர்வேயர்கள் கடந்த சிலதினங்களுக்கு முன்னர் சம்பத்தப்பட்ட இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்துவிட்டு பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு சென்றும் விசாரணை மேற்கொண்டனர். கோவில் ஆவணங்களை அவர்கள் ஆய்வு செய்தபோது, மு.க.அழகிரி பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்ட இடம் கோவில் இடம் என்பது உறுதி செய்யப்பட்டது.

நிலம் மீட்பு
இதையடுத்து, அந்த இடத்தை அதிகாரிகள் மீட்டனர். அதன் பின்னர் அந்த இடத்தில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு புல்டோசர் மூலம் சுத்தப்படுத்தப்பட்டது. இன்று அந்த இடத்தை சுற்றி கம்பிவேலி அமைக்கும் பணி நடைபெற்றது.

அழகிரி மீது வழக்குப் பதிவு
கோவில் நிலத்தை போலி ஆவணம் மூலம் ஆக்கிரமிப்பு செய்ததாக மு.க.அழகிரி, சம்பத்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத் துறை முடிவு செய்துள்ளது.

பத்திரப் பதிவு அலுவலர் மீது நடவடிக்கை
மேலும், இந்து சமய அறநிலையத் துறை தடையில்லா சான்று இல்லாமல் நிலத்தை பத்திரப்பதிவு செய்த திருமங்கலம் பத்திரப் பதிவு அலுவலர் மீதும் வழக்குப் பதிவு செய்ய திட்டமிட்டுள்ளனர்.

அடுத்தடுத்து சிக்கல்
2009 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அழகிரி, சொத்துப் பட்டியலுக்கான படிவத்தில் தன் சொத்துகளைப் பட்டியலிட்டபோது, திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா காட்டூர் கிராமத்தில் இருக்கும் பட்டா எண் 353-ல் உள்ள நிலத்தைக் காட்டாமல் மறைத்துவிட்டாராம். அந்தப் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவர், இதுகுறித்து 2013-ல் ஆதாரங்களுடன் தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்தார்.

வழக்கு தொடர்ந்த கலெக்டர்
அதைப் பரிசீலித்த தேர்தல் ஆணையம், 'இதில் உண்மை இருக்கிறதா?' என்று விசாரிக்க திருவாரூர் கலெக்டருக்கு உத்தரவிட்டது. அந்தப் புகார் உண்மைதான் என்று முடிவானதால், மதுரை கலெக்டரிடம் திருவாரூர் கலெக்டர் அறிக்கை கொடுத்தார். அதை அடிப்படையாக வைத்து, மதுரை ஜே.எம். நீதிமன்றத்தில் அழகிரிக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளார் கலெக்டர்.

கோவில் நில விவகாரத்தில்
இந்த விவகாரம் அழகிரிக்குப் பிரச்னையை உண்டாக்கும் என்று கூறிவரும் நேரத்தில் இப்போது கோயில் அபகரிப்புப் புகார் புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

மானநஷ்ட வழக்கு
ஆனால் இதுகுறித்து கூறிய மு.க.அழகிரி, ''இது முழுக்க முழுக்கப் பொய். தேவையில்லாமல் அவதூறு பரப்புகிறார்கள். ஏற்கெனவே கல்லூரி மீது உள்நோக்கத்தோடு அவதூறு கிளப்பினார்கள். அந்த விஷயத்தையே இப்போதும் சொல்கிறார்கள். விரைவில் அந்த ராமலிங்கம் மீது மானநஷ்ட வழக்குத் தொடரப் போகிறேன்'' என்று கூறியிருந்தார்.
இப்போது நிலம் அபகரிப்பு செய்யப்பட்டுள்ள உறுதி செய்யப்பட்டுள்ளது. என்ன செய்யப்போகிறார் அழகிரி.












Click it and Unblock the Notifications