For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேவையற்ற பேச்சுக்களை விட்டு விட்டு வேலையைப் பாருங்கள்.. திருமாவளவன்

Google Oneindia Tamil News

சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மன்னிப்பு கேட்டு விட்டார். வருத்தம் தெரிவித்து விட்டார். தேவையற்றதை பேசுவதை விட்டு விட்டு தேர்தல் வேலைகளில் தீவிரம் காட்ட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

மதிமுக பொதுச்செயலாளரும் மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளருமான வைகோ 6-4-2016 அன்று மதிமுக கட்சி அலுவலகமாக தாயகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் அனைவரும் உடனிருந்தனர். அப்போது, தேமுதிகவில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து சில விளக்கங்களை அளித்தார். குறிப்பாக, தேமுதிகவிலிருந்து சிலர் வெளியேறியதற்கான பின்னணியில் திமுகவின் சதி வேலைகள் இருப்பதாக வெளிப்படையாகக் குற்றம் சாட்டினார். அதற்குச் சான்றாக குறிப்பிட்ட சிலரின் பெயர்களைச் சொல்லி அவர்களுக்கிடையில் நடந்த தொலைபேசி உரையாடல்கள் திமுகவின் சதிப் பின்னணியை உறுதிப்படுத்துவதாகவும் கூறினார்.

Thirumavalavan asks parties to leave Vaiko

திராவிட முன்னேற்றக் கழகம் ஏற்கனவே மதிமுகவைச் சீர்குலைக்க முயற்சி செய்தது என்றும், தற்போது தேமுதிகவுக்கெதிராகவும் அதேபோன்ற நடவடிக்கையில் திமுக ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டினார். தேமுதிகவிலிருந்து வெளியேறிய சிலரைக் குறிப்பிட்டு அவர்கள் தேமுதிகவிற்குத் துரோகம் இழைத்து விட்டார்கள், திமுகவின் சதிவலையில் விழுந்துவிட்டார்கள் என்று கடுமையாகச் சாடினார்.

மக்கள் நலக் கூட்டணியோடு விஜயகாந்த் தொகுதி உடன்பாடு வைத்துக்கொண்ட ஒரே காரணத்திற்காக இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கையில் திமுக இறங்கியுள்ளது என்றும் திமுகவின் மீது குற்றம்சாட்டிய வைகோ திமுக தலைவர் கலைஞர் அவர்களைக் கடுமையாகச் சாடினார். அப்போது அவர் கையாண்ட சொற்கள் அரசியல் நாகரிக வரம்புகளை மீறும் வகையில் அமைந்தன. இதனால் திமுக தரப்பினரிடமிருந்து மட்டுமின்றி பொதுத் தளத்திலிருந்தும் வைகோ மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. வைகோ அவர்களின் தனிநபருக்கெதிரான விமர்சனங்கள் மீது விடுதலைச் சிறுத்தைகளுக்கும் உடன்பாடு இல்லை என்பதை உடனே வெளிப்படுத்தினோம்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் தன்னுடைய பேச்சுக்கு உடனடியாக வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். சாதி உணர்வுகளுக்கு தான் அப்பாற்பட்டவன் என்பதையும் கட்சிவிட்டு கட்சி மாறும் கேவலமான கலாச்சாரத்தைக் கண்டிப்பது மட்டுமே தன்னுடைய நோக்கம் என்றும், சாதி அடிப்படையில் கலைஞர் அவர்களின் குடும்பத்தைக் களங்கப்படுத்தும் உள்நோக்கம் துளியும் தனக்கு இல்லை என்பதையும் தெளிவுபடுத்திய அதேவேளையில், தம் வாழ்க்கையில் செய்த மிகப் பெரிய தவறு என்பதை ஒப்புக்கொண்டு பகிரங்கமாக வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில், தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியைச் சார்ந்தவர்கள் இது தொடர்பாக தேவையற்ற விவாதங்களில் ஈடுபட வேண்டாம் எனவும், தேர்தல் பணிகளில் தீவிரம் காட்ட வேண்டும் எனவும் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

English summary
VCK leader Thirumavalavan has asked the parties to leave Vaiko issue and concentrate on poll related workds.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X