For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுக தேர்தல் அறிக்கை, அதிமுக நலத்திட்டங்களை சுட்டு 'கப்சா' கலவையாக பாஜக தேர்தல் அறிக்கை

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: திமுக தேர்தல் அறிக்கை, அதிமுகவின் நலத்திட்டங்களை சேர்த்து கலவையாக்கி பாரதிய ஜனதா கட்சி தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் களமிறங்கியுள்ளது. இந்த கூட்டணியில் பிரதான கட்சிகள் எதுவுமே இல்லை. பாரிவேந்தர், தேவநாதன் ஆகியோரது அடையாளம் தெரியாத கட்சிகள்தான் இடம்பெற்றுள்ளன.

அதனால்தான் என்னவோ பாரதிய ஜனதாவும் தேர்தல் பணிகளில் மட்டுமின்றி... தேர்தல் அறிக்கை தயாரிப்பிலும் ஏதோ ஒன்றை நாங்களும் வெளியிட்டோம் என கடனுக்கு செய்திருக்கிறது. பாஜகவின் தேர்தல் அறிக்கையில் தனித்துவமான அம்சங்கள் எதுவுமே இல்லை எனலாம்.

அதைவிட திமுக உள்ளிட்ட பல கட்சிகளின் தேர்தல் அறிக்கை, கொள்கை விளக்க குறிப்பு, அதிமுக அரசின் நலத் திட்டங்கள் இவை அனைத்தையும் ஒன்றாக கலந்தும் 2 ஆண்டுகால மத்திய அரசில் எதையும் சாதிக்க முடியாத அம்சங்களை தமிழகத்தில் ஆட்சி அமைத்து சாதிப்போம் எனவும் கப்சா கலவையாக உருவாக்கப்பட்டுள்ளது பாஜக தேர்தல் அறிக்கை.

திமுக அறிக்கையில்..

திமுக அறிக்கையில்..

திமுக தேர்தல் அறிக்கையின் பிரதான அம்சங்களாக இருப்பவை விவசாயத்துக்கு தனிபட்ஜெட், விவசாய கடன் தள்ளுபடி, மீனவர்களை எஸ்டி பிரிவில் சேர்ப்பது உள்ளிட்டவை. எந்த தயக்கமுமே இல்லாமல் அப்படியே பாஜகவின் அறிக்கையில் இவை அனைத்தும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் அனைத்து கட்சிகளுமே இயற்கை விவசாயம் குறித்து பேசிவரும் போது பாஜகவும் தம்முடைய தேர்தல் வாக்குறுதியாக இயற்கை விவசாயத்துக்கு தனி கொள்கை வகுப்போம் என கூறியிருக்கிறது.

மாட்டிறைச்சிக்கு தடை?

மாட்டிறைச்சிக்கு தடை?

தமிழக பாஜக தேர்தல் அறிக்கையில் கால்நடை வளர்ப்பு, நாட்டுப் பசு வளர்ப்பு பற்றி பேசப்படுகிறது. பால், ஆட்டிறைச்சி, கோழி இறைச்சிகளை சர்வதேச தரக் கட்டுப்பாடுடன் உற்பத்தி செய்ய உதவி; அதிக மூலதனத்தில் இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலைகளை தனியாரே அமைத்திட அனைத்து உதவிகளையும் அரசு செய்யும் என்கிறது... எந்த இறைச்சி என சொல்லாமல் கமுக்கமாக நழுவியிருக்கிறது பாஜக

நதிநீர் இணைப்பு

நதிநீர் இணைப்பு

நதிநீர் இணைப்பு, ஏரி குளம் தூர்வாருதல், மீட்டெடுத்தல் என பிற கட்சிகள் பாடிய பல்லவியை பாஜகவும் தம் பங்குக்கு தேர்தல் அறிக்கையில் பாடி வைத்திருக்கிறது. மத்தியில் 2 ஆண்டுகாலமாக ஆட்சியில் இருக்கும் பாஜக நதிகள் இணைப்புக்கு என்ன துரும்பை கிள்ளிப்போட்டது? என்பதுதான் தெரியவில்லை.

மேலாண்மை வாரியம்

மேலாண்மை வாரியம்

தமிழகத்தின் மிக முக்கிய பிரச்சனையான காவிரி நதிநீர் பற்றி பாஜகவுக்கு இருக்கிற புரிதல் ஒற்றை வரியில் சொல்லப்பட்டுள்ளது... அதாவது உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 205 டி.எம்.சி. நீர் பெற்றிட, காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க மத்திய அரசு மூலம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறது பாஜக தேர்தல் அறிக்கை. 205 டி.எம்.சி. நீர் என்பது 1991-ல் காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இடைக்கால தீர்ப்பு. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு காவிரியில் தமிழகத்தின் பங்கு 419 டி.எம்.சி. என்கிறது. சரி புள்ளிவிவரம் கிடக்கட்டும்.. மேலாண்மை வாரியத்தை ஏன் 2 ஆண்டுகாலமாக மத்திய பாஜக அரசு அமைக்கவில்லை? தமிழக பாஜக ஏன் இதற்கான முன்முயற்சிகளை எடுக்கவில்லை என்பதுதான் அக்கட்சிக்கே வெளிச்சம்.

தமிழகத்தின் வாழ்வாதாரமான காவிரியில் மட்டுமல்ல முல்லைப் பெரியாறு, பாலாறு, நெய்யாறு இடதுகரை கால்வாய் நீர் ஆகியவை அனைத்தும் தொடர்பாக ஒவ்வொரு வரியில் வாக்கு கொடுத்துவிட்டு போக்கு காட்டுகிறது பாஜக தேர்தல் அறிக்கை.

பாலைவனமாகும் ராமநாதபுரம்

பாலைவனமாகும் ராமநாதபுரம்

சாயப்பட்டறை கழிவுகளை கடலில் கலக்க விடக்கூடாது என கடலூர் மக்கள் கொந்தளித்துபோய் போராடி வருகின்றனர். இப்போது ராமநாதபுரத்திலும் குழாய் மூலம் கொண்டு போய் கழிவுகளை கடலில் விடப்போவதாக வாக்குறுதி தருகிறது பாஜக தேர்தல் அறிக்கை.

மணல் கொள்ளை

மணல் கொள்ளை

தாதுமணல், கிரானைட் கொள்ளை, மணல் கொள்ளைதான் தமிழகத்தின் முதன்மையான இயற்கை வளசூறையாடல். தாது மணல், கிரானைட் கொள்ளையை தடுப்போம்; அரசே விற்பனையை மேற்கொள்ளும் என்ற ஒற்றை முழக்கத்துடன் அடங்கிப்போகிறது பாஜக,.

சமச்சீர் கல்வி மாற்றியமைப்பு

சமச்சீர் கல்வி மாற்றியமைப்பு

சமச்சீர் கல்வி முறை மாற்றியமைப்பு, நவோதயா பள்ளிகள் திறப்பு என தமிழகமே ஒட்டுமொத்தமாக எதிர்க்கும் விஷயங்களை நடைமுறைப்படுத்தப் போகிறதாம் பாஜக.

ஜல்லிகட்டு ஏமாற்று

ஜல்லிகட்டு ஏமாற்று

இதைவிட மிகப் பெரிய ஏமாற்றுவித்தை ஜல்லிக்கட்டு தடையை நீக்கி வரும் தைத்திருநாளில் கோலாகலமாக நடத்துவோம் என்பதுதான்.... ஜல்லிக்கட்டுவை நீக்குவதற்கு பாஜக அமைச்சர்கள் கொடுத்த வாக்குறுதிகள்.. கடைசியில் ஜல்லிக்கட்டே நடக்காமல் போன கொடுமை நிகழ்ந்ததை தமிழகம் பார்த்ததுதானே... அதே பொய்யான ஏமாற்று வாக்குறுதியை மீண்டும் தந்துள்ளது பாஜக.

கை கழுவப்பட்ட மீனவர் பிரச்சனை

கை கழுவப்பட்ட மீனவர் பிரச்சனை

அதேபோல் மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம், கச்சத்தீவு மீட்பு போன்ற லோக்சபா தேர்தல் காலத்துக்கு வாக்குறுதி எதனையும் மறந்தும் தமிழக சட்டசபை தேர்தலுக்கான இந்த அறிக்கையில் இடம்பெறாமல் பார்த்துக் கொண்டிருக்கிறது பாஜக. ஆனால் மீனவர்களை எஸ்.டி. பட்டியலில் சேர்ப்போம் என்ற திமுக வாக்குறுதியை சுட்டு சேர்த்திருக்கிறது.

அதிமுக திட்டங்கள்

அதிமுக திட்டங்கள்

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சேனிட்டரி நாப்கின் தயாரிப்பு பயிற்சி, அதை பெண்களுக்கு வழங்குவது, அதிமுக அரசு ஏற்கனவே அளித்து வரும் தாலிக்கு தங்கம் திட்டம் என ஏற்கனவே அரைக்கப்பட்ட மாவைத்தான் பாஜகவும் புதியதாக அரைப்போம் என அடித்துவிட்டிருக்கிறது.

அப்புறம் மதுவிலக்கு, 20 லிட்டர் குடிநீர் வசதி என தேய்ந்து போன வாக்குறுதி. இவைகள் அல்லாமல் பாஜகவுக்கே உரிய கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம், அர்ச்சகர் நலன் ஆகியவையும் இதில் இடம்பெற்றுள்ளது.

மொத்தமாக பிற கட்சிகளிடம் சுட்டு, கப்சா விட்டு உருவாக்கப்பட்டதுதான் பாஜக தேர்தல் அறிக்கை!

English summary
TN BJP's manifesto copying from DMK manifesto and ADMK schemes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X