குற்றாலத்தில் ஆளுநர் ரோசய்யா... பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
குற்றாலம்: தென்காசி, குற்றாலத்தில் நடைபெற உள்ள ஆன்மீக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக ஆளுநர் ரோசைய்யா இன்று ஒருநாள் பயணமாக குற்றாலம் வருகை தந்துள்ளதை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக ஆளுநர் இன்று காலை பொதிகை எக்ஸ்பிரஸ் மூலம் செங்கோட்டை வருகை தந்தார். அங்கிருந்து கார் மூலம் குற்றாலம் செல்லும் அவர் ஐந்தருவி இசக்கி வில்லேஜ் தெலுங்கு கோ மூட்டி ரெட்டியார் சமுதாயத்தினரால் நடத்தப்படும் ஏபிஎஸ்கே டிரஸ்ட் சார்பில் கட்டப்படடுள்ள முதியோர் இல்ல திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

திறப்பு விழாவை தொடர்ந்து அங்கு நடைபெறும் நலத்திட்ட உதவிகள் நிகழ்ச்சியில் தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில், குற்றாலம் குற்றாலநாதர் கோயில், திருவிலஞ்சி குமரன் கோவில், தென்காசி பொருத்தி நின்ற பெருமாள் கோயிலுக்கு ரூ.50 ஆயிரம் மதிப்புடைய அன்னதான நிழச்சிகளுக்கு தேவையான சாதம் தயார் செய்யும் பாய்லர்களை வழங்குகிறார்.

ஐந்தருவி ஓம் பிரமவா ஆசிரமத்திற்கு ரூ.1 லட்சம், ஆழ்வார்குறிச்சியை அடுத்து சிவசைலத்தில் உள்ள காது கேளாதோர் பள்ளிக்கு ரூ.1 லட்சம், தென்காசி அரசு மருத்துவமனைக்கு ரூ.1 லட்சம் மதிப்புடைய மருத்துவ உபகரணஙகள் வழங்குகிறார். பின்னர் மாலை செங்கோட்டை வந்து அங்கிருந்து பொதிகை ரயில் மூலம் மீண்டும் செனைன திரும்புகிறார். ஆளுநர் ரோசய்யாவின் வருகையை முன்னிட்டு குற்றாலத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளும், சுகாதார பணிகளும் தீவிரமாக செய்யப்பட்டுள்ளன.