இலவச பேருந்தால் நஷ்டம்.. பல கிராமப்புற பேருந்துகளை அரசு நிறுத்தியுள்ளது.. தென்காசி கலெக்டர் பேச்சு
தென்காசி: மகளிர் இலவச பேருந்தால் போக்குவரத்துக் கழகத்திற்கு நஷ்டம். இதனால் பல கிராமப்புற பேருந்துகளை அரசு நிறுத்தியுள்ளது.உங்கள் பகுதிக்கான பேருந்து குறித்த வாய்ப்புகளை கேட்டு இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிராம சபை கூட்டம் ஒன்றில் தென்காசி கலெக்டர் துரை ரவிச்சந்திரன் பேசியுள்ளார்.
தமிழகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடையப் போகிறது. கடந்த 2021 மே மாதம் 7ம் தேதி தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பொறுப்பேற்றார்.
தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாக ஐந்து உத்தரவுகளில் கையெழுத்திட்டார். அதில் ஒன்று தான் சாதாரண கட்டணப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம். மகளிருக்கு நகர கட்டணப் பேருந்துகளில் இலவச பயணம் செய்வதற்கான அரசாணையும் உடனடியாக வெளியிடப்பட்டது.

இதன்படி தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்ட நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பணிபுரியும் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவியர் உள்பட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமல் பேருந்துப் பயண அட்டை இல்லாமல் பயணம் செய்து வருகிறார்கள்.
சிறுநகரங்களில் மற்றும் கிராமங்களில் சாதாரண கட்டணப்பேருந்துகளே இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகள் இலவச பேருந்துகளாக இருப்பதால் கிராம மக்கள் நகர்புறங்களில் வேலைக்கு செல்ல பயனுள்ளதாக இருக்கிறது. திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் முழுமையாக சாதாரண கட்டணப்பேருந்துகளே இருப்பதால் பெரிய உதவியாக இருக்கிறது.
அதேநேரம் சென்னை, கோவை, மதுரை,திருச்சி போன்ற பெருநகரங்களில் சாதாரண கட்டணப்பேருந்துகள் நகரங்களுக்குள் குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. அதநேரம் கிராமப்புற அல்லது உள்பகுதிகளுக்கு செல்லும் பகுதிகளுக்கு மட்டுமே சாதாரண பேருந்துகள் இருக்கின்றன என்றும் சொல்கிறார்கள்.
இது ஒருபுறம் எனில் கிராமப்புறங்களுக்கு சாதாரண கட்டணப்பேருந்துகள் அதிக அளவு இயக்கப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. காலையில் ஒரு முறை, மாலையில் ஒரு முறை என்கிற அளவில் சில பகுதிகளில் இயங்குவதாக கூறப்படுகிறது. நகர்புறத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் தனியார் மினி பஸ்கள் இயக்கப்படுவதால் அந்த பகுதிகளுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படுவதே இல்லை என்ற குற்றச்சாட்டுகளும் இருக்கிறது.
இந்நிலையில் தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன், மகளிர் இலவச பேருந்துகள் இயக்கம் குறித்து கிராம சபை கூட்டம் ஒன்றில் பேசி உள்ளார். இது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதி வாடியூரில் நடைபெற்ற கிராம சபை கூடடத்தில் மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் கலந்து கொண்டு பேசினார் அப்போது பொதுமக்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த கலெக்டர், மகளிர் இலவச பேருந்தால் போக்குவரத்துக் கழக்கத்தில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் பல கிராமப்புற பேருந்துகளை அரசு நிறுத்தியுள்ளது. உங்கள் பகுதிக்கான பேருந்து குறித்த வாய்ப்புகளை கேட்டு இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications