ஆரணியை சேர்ந்த பெண்ணுக்கு ஓமிக்ரான் அறிகுறி.. தமிழக சுகாதாரத் துறை செயலாளர்
ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த பெண்ணுக்கு ஓமிக்ரான் அறிகுறி இருப்பதாக தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ஜே ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் கடந்த மாதம் 24 ஆம் தேதி முதல் முறையாக ஓமிக்ரான் எனும் புதிய வேரியண்ட் கண்டறியப்பட்டது. இந்த நிலையில் இது தற்போது 25 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.
இந்தியாவில் முதல் முறையாக கடந்த 2 ஆம் தேதி கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த இருவருக்கு ஓமிக்ரான் உறுதியானது. இதையடுத்து குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஆந்திரா, டெல்லி, கேரளா ஆகிய மாநிலங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தியது.

67 பேர்
இந்தியாவில் ஓமிக்ரானால் 67 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா, கேரளா, ஆந்திரா ஆகிய அண்டை மாநிலங்களில் ஓமிக்ரான் பாதிப்பு இருப்பதை அடுத்து தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில் நைஜீரியாவிலிருந்து தமிழகம் வந்த ஒருவருக்கு ஓமிக்ரான் பாதிப்பு இருப்பதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

7 நாட்கள் தனிமை
உலக சுகாதார நிறுவனம் சொன்ன 11 நாடுகளிலிருந்து வரும் அத்தனை பேருக்குமே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்கு நெகட்டிவ் என வந்தால் வீட்டில் 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவிக்கிறார்கள். இந்த நிலையில் தமிழகத்தில் ஒருவருக்கு ஓமிக்ரான் ஏற்பட்டதை அடுத்து இந்தியாவில் ஓமிக்ரானின் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்தது.

ஓமிக்ரான் அறிகுறிகள்
இந்த நிலையில் ஆரணியை சேர்ந்த பெண் ஒருவருக்கு ஓமிக்ரான் அறிகுறிகள் இருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறை செயலாளர் ஜே ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில் ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்ட நைஜீரியருடன் தொடர்பில் இருந்த 7 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஓமிக்ரான் இருக்கிறதா
ஜீன் சோதனை செய்யப்பட்ட பின்பே இவர்கள் 7 பேருக்கும் ஓமிக்ரான் உள்ளதா என்று தெரியும். இதில் காங்கோவிலிருந்து தமிழகம் வந்த ஆரணியை சேர்ந்த பெண் ஒருவருக்கு கொரோனா அறிகுறியுடன் ஓமிக்ரானுக்கு முந்தைய அறிகுறியும் இருக்கிறது. அந்த பெண்ணுக்கு எஸ் ஜீன் இல்லை. இனிதான் உறுதி செய்ய வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications