For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'குஜராத்' பாணியில் மீனவர் மீதான இலங்கை தாக்குதலை தடுக்க ரணிலுடன் ஒப்பந்தம் தேவை: வேல்முருகன்!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை நடுத்த இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுடன் இந்தியா ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:

TVK demands new pact with Srilanka on TN Fishermen

இந்தியா வருகை தந்துள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரை சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பின் போது தமிழக மீனவர்கள், இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை ஆகியவை குறித்து ரணிலுடன் பிரதமர் மோடி விவாதிக்க இருப்பதாகவும் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

மத்தியில் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு அமைந்தது முதல் தமிழக மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண்போம் என்ற வெற்று உறுதிமொழி மட்டும்தான் மீண்டும் மீண்டும் வழங்கப்பட்டு வருகிறது. சிங்கள ராணுவம் தொடர்ந்தும் தமிழக மீனவர்களை கைது செய்வதும், தாக்கி சித்ரவதை செய்வதும் வாழ்வாதாரமான படகுகளை,மீன் பிடி வலைகளைப் பறிமுதல் செய்வதும் தொடர் கதையாகத்தான் இருந்து கொண்டுள்ளது.

இதே ரணில் தலைமையிலான புதிய அரசின் மீனவளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர, கடந்த சில நாட்களுக்கு முன்னர்கூட, தமிழக மீனவர்களை கைது செய்வோம்; படகுகளை,மீன் பிடி வலைகளைப் பறிமுதல் செய்வோம்; ஒருபோதும் விடுவிக்கமாட்டோம் என்று கொக்கரித்திருக்கிறார். அதேபோல் இலங்கையின் பிரதமரோ, அதிபரோ இந்தியா வருகை தரும்போது ஏமாற்றும் நடவடிக்கையாக சில தமிழக மீனவர்களை இலங்கை சிறையில் இருந்து விடுவிப்பதும் இந்த தலைவர்கள் இலங்கையில் கால் வைத்த உடனேயே தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும் தொடர் கதையாகி வருகின்றன.

இத்தகைய நிகழ்வுகள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளிவைக்கும் வகையில் ரணிலுடனான சந்திப்பின் போது ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை பிரதமர் மோடி மேற்கொள்ள வேண்டும்.

இந்தியாவின் எதிரிநாடான பாகிஸ்தானின் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை ரஷ்யாவின் உபா நகரில் நேரில் சந்தித்து குஜராத் மீனவர்களையும் படகுகளையும் விடுதலை செய்வதற்கு ஒரு ஒப்பந்தத்தை போட முடிகிற பிரதமர் நரேந்திர மோடியால்

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள 'நட்புநாடான' இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்குடன் தமிழக மீனவர்களுக்காக ஒரு ஒப்பந்தத்தை ஏன் போட முடியாது? என்ற கேள்வியை தமிழகம் முன்வைக்கிறது.

ஆகையால் தமிழக மீனவர்கள் காலம் காலமாக தங்களது பாரம்பரியமான மீன்பிடி பகுதியில் மீன்பிடித்தலை இலங்கை அரசு மதித்து நடக்க வேண்டும்; இலங்கை சிறையில் இருந்து அனைத்து தமிழக மீனவர்களையும் விடுதலை செய்ய வேண்டும்; இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து தமிழக மீனவர்களின் படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக ரணில் விக்கிரமசிங்கேவுடன் ஒரு ஒப்பந்தத்தை பிரதமர் நரேந்திர மோடி உருவாக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.

மேலும் இலங்கை மீதான போர்க்குற்றங்களை நீர்த்து போகச் செய்யும் வகையிலும் ராஜபக்சே உள்ளிட்ட 'சிங்கள பங்காளி' கொடுங்கோலர்களைப் பாதுகாக்கும் வகையிலும் போர்க்குற்றங்களுக்கு உள்நாட்டு விசாரணையே போதும் என்று இலங்கை வலியுறுத்தி வருகிறது.

இலங்கையின் இந்த சிங்கள பேரினவாத கபடநாடகத்துக்கு இந்திய அரசு எப்போதும் துணைபோகக் கூடாது என்பதே தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த வேண்டுகோள்.

இலங்கை நிகழ்த்திய போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணையை நடத்துவதன் மூலமே தமிழ் மக்களுக்கான நீதி கிடைக்கும் என்பதையும்

இதற்கான தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தில் இந்தியாவே கொண்டுவரும் என்ற நிலைப்பாட்டையும் ரணிலிடம் பிரதமர் நரேந்திர மோடி தெரிவிக்க வேண்டும் என்பது தமிழக மக்களின் எதிர்பார்ப்பு.

ஆகையால் ரணிலின் இந்த இந்திய பயணத்தை இந்தியாவின் அங்கமாக இருக்கும் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து

இந்த மக்களுக்கு ஆறுதல்தரும் வகையிலான செயல்பாடுகளுக்குரியதாக்கிட மத்திய அரசை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

English summary
TVK leader Velmurugan has demanded that PM Modi should sign with new pact with the Srilanka's PM Ranil on Tamilnadu fishmermen row.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X