For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாளை ஆளுநர் மாளிகை முற்றுகை... அனைவரும் திரண்டு வர வேல்முருகன் அழைப்பு #cauvery

Google Oneindia Tamil News

சென்னை: காவிரி நதி நீர்ப் பிரச்சனையில் தமிழகத்திற்குத் துரோகம் இழைத்த மத்திய அரசைக் கண்டித்து நாளை நடைபெறவுள்ள ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தில் அனைவரும் திரண்டு வந்து கலந்து கொள்ளுமாறு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் அழைப்பு விடுத்துள்ளார்.

காவிரி நதிநீர் உரிமை மறுத்துள்ள மத்திய அரசைக் கண்டித்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் அறிவித்திருந்தார். நாளை முற்பகல் 11.30 மணிக்கு இப்போராட்டம் நடைபெறவுள்ளது. இதில் அனைவரும் திரண்டு வந்து கலந்து கொள்ள வேண்டும் என்று வேல்முருகன் அழைப்பு விடுத்துள்ளார்.

TVK all set to rock Chennai tomorrow

இதுதொடர்பாக முன்னதாக அவர் வெளியிட்டிருந்த அறிக்கை:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருப்பது தமிழக மக்களை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மத்திய அரசின் இந்த துரோகத்துக்கு ஒட்டுமொத்த தமிழக மக்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். உச்சநீதிமன்ற விசாரணையில் கடந்த 30-ந் தேதியன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி தெரிவித்திருந்தார். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மேலாண்மை வாரியத்துக்கான பிரதிநிதிகளை தமிழகம், கேரளா, புதுவை மாநிலங்கள் பரிந்துரைத்துள்ளன.

ஆனால் கர்நாடகா மட்டும் உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்தும் மதிக்காமல் தமிழகத்துக்கான நீரை திறந்துவிட மறுத்துவருகிறது; காவிரி மேலாண்மை வாரிய பிரதிநிதியை பரிந்துரைக்கவில்லை. இப்படியான கர்நாடகாவை மத்திய அரசு நியாயப்படி கண்டித்திருக்க வேண்டும். அரசியல் சாசன நெருக்கடியை உருவாக்கும் கர்நாடகா அரசை மத்திய அரசு கலைத்திருக்க வேண்டும். இதுதான் நியாயமான நீதியாகும்.

இதற்கு நேர்மாறாக வஞ்சிக்கப்பட்ட தமிழகத்தின் முதுகிலே குத்துகிற வகையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்திலே மத்திய அரசு மனுத்தாக்கல் செய்திருப்பதை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள். இத்தனைக்கும் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வந்த உடனே இந்த மேலாண்மை வாரியம் அமைத்திருக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. ஆனால் இத்தனை ஆண்டுகள் காலம் தாழ்த்திவிட்டு இப்போது மேலாண்மை வாரியத்தில் சட்ட சிக்கல்கள் உள்ளன என்பது உண்மையை மூடி மறைக்கும் செயலாகும். தமிழினத்துக்கு திட்டமிட்டு செய்யப்படும் துரோகம்.

இந்தியாவின் பக்ரா நங்கல் மேலாண்மை வாரியம் செயல்படவில்லையா? துங்கபத்திரா மேலாண்மை வாரியம் செயல்படவில்லையா? அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக இந்த மேலாண்மை வாரியங்கள் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் செயல்படுகின்றனவே? எப்படியாம்? தமிழன் என்றால் மட்டும் இந்திய மத்திய அரசு பாகிஸ்தானியர்களைப் போல நடத்துவது எந்த வகையில் நியாயம்?

தமிழகத்துக்கு தொடர்ந்து மத்திய அரசு துரோகம் இழைக்கிறது என்பதால்தான் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி அறிவித்தது என்பதையும் சுட்டிக்காட்டுகிறோம். கர்நாடகா இந்தியாவின் ஒருமாநிலம்தானே? இந்திய கூட்டாட்சி முறைக்கு மதிப்பு தர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அன்று கூறியது... ஆனால் இன்று மத்திய அரசே, தமிழகம் இந்தியாவின் ஒரு பகுதி அல்ல என பிரகடனம் செய்வது போல, தமிழகம் ஏதோ தனிநாடாகிவிட்டது போல தொடர்ந்து வஞ்சித்து வருவது இந்திய ஒருமைப்பாட்டுக்கு மத்திய அரசு தமக்கு தாமே வேட்டு வைத்துக் கொண்ட செயலே தவிர வேறு எதுவும் இல்லை.

இந்திய மத்திய பேரரசின் இந்த நயவஞ்சகத்தைக் கண்டித்து தமிழகம் ஓரணியில் கிளர்ந்தெழ வேண்டும். மத்திய அரசின் இந்த துரோகத்தைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வரும் 6-ந் தேதியன்று சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் மாபெரும் போராட்டம் நடைபெறும். இந்த மாபெரும் அறப்போராட்டத்தில் தமிழர்கள் அனைவரும் ஜாதி, மத, கட்சி மாச்சரியங்களை கடந்து பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று வேல்முருகன் கூறியிருந்தார்.

English summary
Tamil Nadu Valvurkimai Kazhagam is all set to rock Chennai tomorrow as the party is going to hold siege protest in Rajbhavan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X