For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழ் நாட்டில் அந்நிய முதலீடுகளை காவு கேட்கும் உடன்குடி மின்திட்ட விவகாரம்!

By R Mani
Google Oneindia Tamil News

-ஆர்.மணி

உடன்குடி அனல்மின் திட்ட விவகாரம் தமிழ் நாட்டிற்கு வர நினைக்கும் அந்நிய முதலீட்டாளர்களை ஓட ஓட விரட்டியடித்துக் கொண்டிருக்கிறது.

கடந்த திமுக ஆட்சியில் 2007 ம் ஆண்டில், தூத்துக்குடி உடன்குடியில் தலா 800 மெகாவாட் மின் உற்பத்தி செய்வதற்காக இரண்டு மின் உற்பத்தி நிலையங்களை நிறுவ கொள்கை அளவில் முடிவு செய்யப் பட்டது.

பின்னர் இவற்றின் நிறுவு திறன் தலா 660 மெகா வாட்டாக குறைக்கப் பட்டது. அதாவது மொத்தம் 1,320 மெகாவாட் மின் உற்பத்திக்கு திட்டமிடப் பட்டது. இது பிப்ரவரி 2013ல் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் நடந்தது. இதில் மின் உற்பத்திக்கான டெண்டர் கோரப்பட்ட போது விண்ணப்பித்தவை இரண்டு நிறுவனங்கள். ஒன்று சீன அரசுக்குச் சொந்தமான நிறுவனம். மற்றொன்று இந்திய பொதுத் துறை நிறுவனமான பெல். இதில் குறைந்த தொகையை கோரியிருந்தது சீன நிறுவனம். அதற்கு அடுத்து பெல் நிறுவனம்.

Udankudi Power Project issue: Foreign investors run away from TN

மொத்தமே இரண்டு நிறுவனங்கள்தான். டெண்டர்கள் சமர்ப்பிக்கப்பட்டு பற்பல மாதங்கள் ஆன பின்னர் திடீரென இந்தாண்டு மார்ச் 13ம் தேதி இரண்டு டெண்டர்களையும், பெரிய குறைபாடுகள் இருப்பதாகக் கூறி தமிழக அரசு நிராகரித்து விட்டது. இதனை எதிர்த்து சீன நிறுவனம் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கு நிலுவையில் உள்ள போதே புதியதாக மற்றோர் டெண்டரை தமிழக அரசு வெளியிட்டது.

இந்த புதிய டெண்டருக்கு உடனடியாக தடை கேட்டு சீன நிறுவனம் சென்னை உயர்நீதி மன்றத்துக்குப் போனது. சீன நிறுவனத்தின் வழக்கறிஞர் என் எல் ராஜா, தங்களது டெண்டரை ரத்து செய்தததற்கான காரணங்கள் நியாயமானவை இல்லை என்று வாதிட்டார். டெண்டர்களின் வெளிப்படைத் தன்மை பற்றி 1998ம் ஆண்டில் தமிழக அரசு கொண்டு வந்த சட்டங்களுக்குப் புறம்பான முறையில் தங்களது டெண்டர் ரத்து செய்யப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

புதிய டெண்டர் பெல் நிறுவனத்துக்குச் சாதகமாகவே முற்றிலுமாக வடிவமைக்கப் பட்டிருப்பதாகவும் ராஜா வாதாடினார். ஆனால் வழக்கம் போலவே அரசின் முடிவுக்கு சப்பைப் கட்டுக் கட்டிய அரசு தலைமை வழக்கறிஞர் ஏ.எல். சோமையாஜூ, இது போன்ற கொள்கை முடிவுகளில் தலையிடுவதில் நீதிமன்றங்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார்.

இதில் முக்கியமான விஷயம் எந்த காரணத்துக்காக சீன நிறுவனத்தின் டெண்டர் ரத்து செய்யப்பட்டது என்பதுதான். இந்த இரண்டு நிறுவனங்களின் டெண்டர்கள் பற்றியும் ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்ட நிறுவனம் இவற்றில் குறைகள் இருக்கின்றன என்றுதான் கூறியது. மாறாக இந்த டெண்டர்களை ஒட்டுமொத்தமாக ரத்து செய்ய வேண்டும் என்று கூறவில்லை. ஏப்ரல் 2013ல் விடப்பட்ட டெண்டர்கள், பிப்ரவரி 2015ல் தான் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதற்கான செலவு ரூ. 33.42 லட்சமாக உள்ளதென்று குறிப்பிட்ட நீதிபதி, நாளும் வளர்ந்து வரும் செலவினங்களை கருத்தில் கொண்டால், புதிய டெண்டரை விடுத்ததை தவிர்த்திருக்கலாம் என்று கூறியிருக்கிறார்.

இவையெல்லாம் சரி. ஏன் குறைவான தொகையை குறிப்பிட்ட சீன நிறுவனத்தை புறந்தள்ளி டெண்டரையே ரத்து செய்தது தமிழக அரசு? பதில் எளிமையானதுதான். இந்த டெண்டரை ஓகே செய்ய வேண்டுமானால் தங்களை ‘கவனிக்க' வேண்டும் தமிழகத்தின் ஆளும் கட்சியின் சார்பில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. இதில் அதிர்ந்து போன சீன நிறுவனம், சொன்ன பதிலும் சுவாரஸ்யமானது. ‘நாங்கள் சீன அரசின் நிறுவனம். எங்கள் நாட்டுக்கு வெளியே தொழில் செய்ய நாங்கள் லஞ்சம் கொடுத்தால் சீனாவில் நாங்கள் மாட்டிக் கொண்டு கம்பி எண்ண வேண்டியிருக்கும். ஏனெனில் சீன சட்டங்களின் படி தொழில் செய்ய சீனாவுக்கு உள்ளேயும், வெளியேயும் லஞ்சம் கொடுப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். வேண்டுமானால் நீங்கள் எல்லாவற்றையும் வெள்ளையாகவே கேளுங்கள். அதாவது மொத்த திட்டச் செலவுகளையும் கூட்டிக் கேளுங்கள். உதாரணத்துக்கு நிலத்துக்கான மதிப்பை கூட்டிக் கொள்ளுங்கள். நாங்கள் வெள்ளையாகவே தருகிறோம். ஆனால் லஞ்சமாக கொடுக்க முடியாது' என்பதுதான் சீன நிறுவனத்தின் பதில்.

இதனை ஏற்றுக் கொள்ள தமிழக அரசின் ‘கொள்கை வகுப்பாளர்கள்' ஒப்புக் கொள்ளவில்லை. பெல் நிறுவனம் இதற்கு ஒப்புக் கொண்டது. ஆனால் டெண்டரை குறைத்து சொன்னவரை விடுத்து அதிகமாக சொன்னவருக்கு ஒப்பந்தத்தை கொடுத்தால் சட்டச் சிக்கல் வருமென்பதால்தான் ஒட்டு மொத்த டெண்டரையே ரத்து செய்திருக்கிறார்கள்.

இவையெல்லாமே தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் அதிகார மையங்களில் உள்ளவர்களுக்கு நன்றாகவே தெரியும். சீன நிறுவனத்திற்கு நெருக்கான வட்டாரங்களிலும், சென்னை உயர்நீதி மன்றத்தில் சம்மந்தப்பட்ட அனைத்து ‘கனவான்களுக்கும்' கூட இது நன்றாகவே தெரியும். அதனால்தான் நீதிபதி சத்தியநாரயணா இந்த விஷயத்தில் தமிழக அரசுக்கு எதிராக உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறார். மற்றோர் முக்கிய விஷயம் இந்த டெண்டர் ரத்து செய்யப்பட்ட போது தமிழக அரசியலில் நிலவிய சூழல்.

டெண்டர் கோரப்பட்ட போது தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா. டெண்டர் ரத்து செய்யப் பட்டபோது முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம். ஜெயலலிதா முதலமைச்சராக இல்லாத போது இவ்வளவு பெரிய காரியம் நடந்திருக்கிறது. அப்படியென்றால் அது ஜெயலலிதாவின் ஆலோசனைப்படிதான் நடந்ததா? அல்லது அவருக்கு தெரியாமல், ஆனால் ஒட்டு மொத்த தமிழகத்துக்கே தெரியும் பிறிதோர் அதிகாரமையத்தின் யோசனைப்படி நடந்ததா என்பது நமக்குத் தெரியாது.

இது ஒருபுறமிருக்க உடன்குடி விவகாரம் தமிழகத்திற்கு வர நினைக்கும் அந்நிய முதலீட்டாளர்களை ஓட ஓட விரட்டிக் கொண்டுள்ளது. இதனைச் சொல்லுபவர்கள் தமிழகத்தில் தொழில் செய்து கொண்டிருக்கும் தொழிற் துறையினர் மற்றும் தமிழக அரசின் உயரதிகாரிகளில் ஒரு பிரிவினர். ‘இந்த விவகாரம் ஒரு பின்னடைவுதான். இதன் தீவிரத்தன்மை உயர் மட்டங்களில் உள்ளவர்களில் ஒரு சாராருக்குத் தெரிகிறது. ஆனால் அவர்கள் கையறு நிலையில் உள்ளார்கள். காரணம் தலைமைக்கு நெருக்கமாக இருக்கும் ஒரு சில அதிகாரிகள் கூட்டுக் களவாணிகளாக இருப்பதுதான்' என்று என்னிடம் கூறினார், மின் திட்டங்கள் பற்றி நன்கறிந்த, தற்போது ஓரங்கட்டப்பட்டிருக்கும் ஒரு ஐஏஎஸ் அதிகாரி.

இதில் மற்றோர் வேடிக்கை தமிழ்நாட்டில் அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக செப்டம்பரில் சென்னையில் நடக்கவிருக்கும் மாநாடு. இந்த சர்வதேச மாநாட்டுக்காக நாட்டின் பல பகுதிகளுக்கும், ஏன் வெளிநாடுகளுக்கும், தென் கொரியா போன்ற நாடுகளுக்கும் தமிழக அரசின் உயரதிகாரிகள் குழு பயணம் போய் கொண்டிருக்கிறது. ஏற்கனவே முதலீடுகளை செய்யத் தயாராக விருக்கும் சீன நிறுவனம் போன்றவற்றை, தங்களை ‘கவனிக்க' வில்லை என்று கூறி அடித்து விரட்டி விட்டு வெளிநாடுகளுக்கு போய் கூவி கூவி முதலீட்டாளர்களை அழைத்துக் கொண்டிருக்கிறார்கள் தமிழக அரசு அதிகாரிகள்.

ஓபிஎஸ் முதல்வராக இருந்த போது, இந்தியாவுக்கான சீன தூதரே சென்னை வந்தார். தமிழக அரசு உயரதிகாரிகளை தலைமை செயலகத்தில் சந்தித்தார். அந்தக் கூட்டத்தில் இந்த விவகாரத்தை எழுப்ப சீன தூதர் விரும்பியதாகவும், ஆனால் தமிழக முதல்வரும், அதிகாரிகளும் இதனை அப்படியே தட்டிக் கழித்து விட்டதாகவும், தெரிகிறது. இதனை சீன நிறுவனத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் என்னிடம் ஊர்ஜீதம் செய்தார்கள்.

இந்த விவகாரத்தில் நாம் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விவகாரம் இது எப்படி தமிழகத்திற்கு கேடு விளைவித்துக் கொண்டிருக்கிறது என்பதுதான். ‘உண்மைதான். மற்ற மாநிலங்களை விட, தமிழகத்திற்கு வர முதலீட்டாளர்கள் அஞ்சுகிறார்கள். காரணம் வெளிப்படையாகவே கேட்கப்படும் நாற்பது சதவீத கமிஷன். வெளிப்படையாக நாங்கள் இதனைப் பேச முடியாது, காரணம் எங்கள் தொழில் அதோகதியாகி விடும்' என்கிறார், ‘அசோசெம்' தொழிற் கூட்டமைப்பைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர்.

எல்லா வளர்ச்சிக்கும் மூல வேராகக் கருதப்படும் மின் உற்பத்தி திட்டங்களிலேயே லஞ்சம் கேட்டு தமிழகத்தை இருண்ட, கற்காலத்துக்கு தற்போதைய அரசு அசுர வேகத்தில் அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது.

உடன்குடி மின் திட்டம் ரத்து என்பது, வெறும் ஒரு திட்டம் ரத்தானது என்று பார்க்கக்கூடாது. இது தமிழகத்துக்கு வரவேண்டிய அன்னிய முதலீடுகளையே இன்று காவு கேட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலைமையை தமிழகத்தின் அண்டை மாநிலங்களுடன் நாம் ஒப்பிட்டால் சோர்வுதான் மிஞ்சுகிறது. ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கடந்த மாதம் சீனாவிற்கு பயணம் போனார், 5000 கோடி ரூபாய்க்கு முதலீடுகளுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த வாரம் அவர் ஜப்பானுக்குப் போகிறார். சில ஆயிரம் கோடி ரூபாய்களுக்கு அந்நிய முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று மதிப்பிடப்படுகிறது.

ஆனால் தமிழ்நாட்டில் இருந்து முதலமைச்சரோ அல்லது ஒரு அமைச்சரோ கூட முதலீடுகளுக்காக இந்தியாவுக்குள்ளேயோ அல்லது வெளிநாடுகளுக்கோ பயணம் போனதில்லை. அதிகாரிகள் மட்டுமே போய் கொண்டிருக்கிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி மீது நமக்கு ஒராயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், அவர் குஜராத் முதலமைச்சராக இருந்த போது முதலீடுகளுக்காக பல நாடுகளுக்கும் போய் மெனக்கெட்டது உலகறிந்த உண்மை.

அத்தகையை பயணங்களுக்குப் பிறகுதான் அவர் ‘குஜராத் முதலீட்டாளர்கள்' மாநாட்டை நடத்தினார். அந்நிய முதலீடுகள் வந்து குவிந்தன. இங்கு தமிழகத்தில் எல்லாமே தலை கீழ். இந்த நாற்பது பர்சண்ட் என்பது ஒரு எழுதப்படாத விதியாகவே மாறிப் போன பின்னர் எதை நம்பி தமிழகத்துக்கு அந்நிய முதலீட்டாளர்கள் வருவார்கள்? 'அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்' என்ற சிலப்பதிகார வரிகளை இன்றைய தமிழக ஆட்சியாளர்கள் மறந்து போனது காலத்தின் கோலம் மட்டுமல்ல, தமிழ் நாட்டின் சாபக்கேடும் கூடத்தான்!

English summary
Most of the foreign investors are now afraid to come Tamil Nadu due to the cancellation of Udankudi Power Project.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X