For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விவசாயி மரணம்.. ஐஓபி வங்கி மேலாளரை கொலை வழக்கில் கைது செய்ய வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

நெல்லை விவசாயி மரணத்துக்குக் காரணமான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளரை கொலை வழக்கில் கைது செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: நெல்லை விவசாயி வேம்புகிருஷ்ணனுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தி, அவரை தற்கொலைக்குத் தள்ளிய மானூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளை மேலாளர் மீது கொலைமுயற்சி வழக்குப்பதிவு செய்து, கைது செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் கடுமையான வறட்சி நிலவுவதாலும், பருவ மழை பொய்த்து நீரின்றி சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் கருகியதாலும் விவசாயிகள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி செய்வதறியாமல் தவிக்கின்றனர். பயிர் சாகுபடிக்காக கடன் பெற்ற விவசாயிகள் போதிய தண்ணீர் இல்லாததால், பயிர்களைக் காப்பாற்ற முடியாமல் மனமுடைந்தனர்.

vaiko demand Rs. 25 lakh compensation for suicide farmer in nellai

வேளாண் தொழிலில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள், பொருளாதார சுமைகள் இவற்றை தாங்க முடியாமல் விவசாயிகள் இருநூறு பேருக்கு மேல் அதிர்ச்சியாலும், தற்கொலை செய்து கொண்டும் உயிரிழந்துள்ளனர். தமிழக அரசு அறிவித்துள்ள வறட்சி நிவாரண உதவித் தொகையும் யானைப் பசிக்கு சோளப்பொறி போன்றுதான் இருக்கின்றது. இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் மேலும் ஒரு விவசாயி உயிரை மாய்த்துக் கொண்டார் என்ற செய்தி பேரதிர்ச்சியைத் தருகிறது.

திருநெல்வேலியை அடுத்த மானூர் அருகே உள்ள கீழப்பிள்ளையார்குளத்தைச் சேர்ந்த விவசாயி வேம்பு கிருஷ்ணன், பிள்ளையார்குளம் விவசாய சங்கத் தலைவராக உள்ளார். இவர் கடந்த 2003-ம் ஆண்டு விவசாய தேவைக்காக மானூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 90 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். விவசாய கடனுக்கான தவணையை முறையாக செலுத்தியிருக்கிறார். தொடர் வறட்சியாலும், வேம்பு கிருஷ்ணன் உடல்நிலை சரியில்லாததாலும் கடந்த ஆண்டு மட்டும் தவணைத் தொகை செலுத்த இயலாமல் போனது.

இந்நிலையில், விவசாயப் பணிகளுக்காக கடந்த ஏப்ரல் மாதம் தன்னுடைய மனைவி தாலிச் சங்கிலியை அடகு வைத்து 50 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். அந்த கடன் தொகையைச் செலுத்தி நகையை மீட்பதற்காக மார்ச் 8-ம் தேதி மானூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு வேம்பு கிருஷ்ணன் சென்றுள்ளார். அப்போது வங்கி அதிகாரி, வேம்புகிருஷ்ணனிடமிருந்து பணத்தை வாங்கி வைத்துக்கொண்டு, ஏற்கனவே வாங்கிய விவசாய கடனையும் செலுத்தினால்தான் நகைகளைத் தருவேன் என்று கூறியுள்ளார். மானூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளை மேலாளர், விவசாயி வேம்புகிருஷ்ணனை மாலை 3 மணி வரை காக்க வைத்து, இறுதியில் பயிர்க் கடனை செலுத்தினால்தான் நகையைத் தரமுடியும் என்று கூறியது மட்டுமின்றி, வேம்புகிருஷ்ணனை அவதூறாகப் பேசி உள்ளார்.

6 மாதத்தில் நகைக் கடனையும், பயிர்க்கடனையும் செலுத்திவிடுவதாக அவர் மன்றாடிக் கேட்டும்கூட சிறிதும் மனிதநேயமின்றி மனம் புண்படும்படி பேசி, விரட்டி இருக்கிறார் வங்கியின் கிளை மேலாளர். இதனால் மனவேதனை அடைந்த விவசாயி வேம்புகிருஷ்ணன் நெல்லை டவுனில் உள்ள தனது மகன் வீட்டுக்கு வந்து இரவு நஞ்சு அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். பாளை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்துபோனார். விவசாயி வேம்புகிருஷ்ணன் தன் கைப்பட வங்கியின் மண்டல அலுவலகத்துக்கு உருக்கமாக எழுதி வைத்திருந்த கடிதத்தை காவல்துறை கைப்பற்றியுள்ளது.

வங்கி உயர்அதிகாரிகளின் நெருக்குதலால் விவசாயி வேம்புகிருஷ்ணனுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தி, அவரை தற்கொலைக்குத் தள்ளிய மானூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளை மேலாளர் மீது கொலைமுயற்சி வழக்குப்பதிவு செய்து, கைது செய்ய வேண்டும். அவரை பணி இடைநீக்கம் செய்து, ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதுடன், கூண்டில் நிறுத்தி தண்டனை வழங்க வேண்டும்.

கார்ப்பரேட் நிறுவனங்களின் லட்சக்கணக்கான கோடி வராக் கடனை வசூலிக்க திராணியற்ற வங்கிகள், எளிய விவசாயிகளை மிரட்டுவதும், அவர்களைத் தற்கொலைக்குத் தூண்டி விடுவதும் கடும் கண்டனத்துக்கு உரியதாகும். உயிரிழந்த நெல்லை விவசாயி வேம்புகிருஷ்ணன் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன். தமிழக அரசு விவசாயி வேம்புகிருஷ்ணன் குடும்பத்துக்கு 25 லட்சம் ரூபாய் கருணைத் தொகை வழங்கிட வேண்டும். இவ்வாறு வைகோ வலியுறுத்தியுள்ளார்.

English summary
mdmk chief vaiko to urges the government to sanction Rs 25 lakh to the families of suicide farmers in nellai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X