For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மோடி கூட்டத்தில் மதிமுக தொண்டர்கள் மட்டும் பங்கேற்பு- வைகோ வாழ்த்து மட்டும்...

By Mathi
|

சென்னை: சென்னையில் நாளை நடைபெறும் பாரதிய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பொதுக்கூட்டத்தில் மதிமுக தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதே நேரத்தில் மோடிக்கு வைகோ வாழ்த்து மட்டும் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சென்னை வண்டலூரில் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பாஜகவின் கூட்டணிக் கட்சியான மதிமுகவின் பொதுச்செயலர் வைகோ கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இரு கட்சி நிர்வாகிகளும் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு ஒன்றும் இதற்காகவே அமைக்கப்பட்டு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வந்தன. இந்த நிலையில் திடீரென மோடி பொதுக்கூட்டத்தில் வைகோ கலந்து கொள்ளமாட்டார் என்று மதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Vaiko will attend Modi rally in Chennai?

பாஜக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதியாகாத நிலையில் அதன் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என்று கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தியதாலேயே வைகோ கலந்து கொள்ளப் போவதில்லை என முடிவெடுத்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் திமுகவுடன் பாஜக ரகசிய பேச்சுவார்த்தை நடத்துவதாலேயே மதிமுக பொதுச்செயலர் வைகோ கலந்து கொள்ளவில்லை என்று புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது.

இந்த சூழலில் இன்று "நரேந்திர மோடி சென்னை வருகை; வெற்றி பெற வாழ்த்து!" என்ற தலைப்பில் வைகோ ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் மோடி பொதுக் கூட்டத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ள வைகோ, அக்கூட்டத்தில் மதிமுக தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் தாம் அதில் பங்கேற்பது குறித்து எதையும் வைகோ குறிப்பிடவில்லை. வைகோ இன்று வெளியிட்ட அறிக்கை:

இந்தியாவில் நடைபெற இருக்கின்ற 16 ஆவது நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியையும், நேரடியாகவோ-மறைமுகமாகவோ, தேர்தலுக்கு முன்னரோ அல்லது பின்னரோ காங்கிரசுக்கு ஆதரவு தரும் கட்சிகளையும், படுதோல்வி அடையச் செய்வது ஒன்றே, ஊழல் அற்ற நேர்மையான அரசியலை வென்றெடுக்க வழி அமைக்கும்.

தமிழகத்தின் வாழ்வாதாரங்களுக்கு வஞ்சகமும் கேடும் செய்து, சிங்களக் கடற்படையால் தமிழக மீனவர்கள் நாளும் கொல்லப்படும் அக்கிரமத்தைத் தடுக்காமல், இலங்கை அரசோடு உறவு கொண்டாடும் துரோகம் இழைத்தும், இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை சிங்கள அரசு இனப்படுகொலை செய்ய ஆயுதங்களும் கோடிகோடியாய்ப் பணமும் கொடுத்து உடந்தையாகச் செயல்பட்ட குற்றத்தைப் புரிந்தும், தமிழர்கள் மன்னிக்க முடியாத பாதகம் புரிந்த காங்கிரஸ் கட்சியை மத்திய அரசின் அதிகார பீடத்தில் இருந்து அகற்றுவது ஒன்றே தமிழக வாக்காளர்களின் தலையாய கடமை ஆகும்.

ஜனநாயகத்தின் அடிப்படையையே தகர்க்கின்ற பெருங்கேடுதான் அதிகார பீட ஊழல் ஆகும். இந்திய வரலாற்றில் இதுவரை நடைபெற்று இராத அளவுக்கு, 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், நிலக்கரிக் கனிமச் சுரங்க அனுமதி ஊழல், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல், ஆதார் வீடு கட்டும் திட்ட ஊழல், அண்மையில் வெளியான ஹெலிகாப்டர் பேர ஊழல் என ஊழல் இமாலய ஊழல் சாம்ராஜ்யமாகி விட்ட, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்துவதோடு, தேர்தலுக்குப் பின்னர் தன்னுடைய ஆதரவிலாவது ஒரு அரசாங்கத்தை அமைத்துவிட காங்கிரஸ் எத்தனிக்கும் என்பதால், அதற்கு எள் அளவு வாய்ப்பும் இல்லாதவாறு காங்கிரசுக்குப் பலத்த தோல்வியைத் தரும் சூழ்நிலை அனைத்து இந்தியாவிலும் ஏற்பட்டு உள்ளது.

பாரதிய ஜனதா கட்சி பிரதமர் வேட்பாளராக அறிவித்து உள்ள நரேந்திர மோடி அவர்களுக்கு நாடெங்கும் ஆதரவு அலை எழுந்து உள்ளது. சமூக நீதி, மதச்சார்பு இன்மை, அரசியலில் நேர்மை, மத்திய அதிகாரக் குவியல் பரவலாக்கப்படும் கூட்டு ஆட்சி, தமிழக வாழ்வாதாரங்களைக் காத்தல், ஈழத்தமிழருக்கு விடியல், இவற்றை இலட்சியங்களாகக் கொண்டு இயங்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியோடு உடன்பாடு வைத்துக் கொள்வது என்றும், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் தமிழகத்திலும் புதுவையிலும் வெற்றி பெறுவதை இலக்காகக் கொண்டு மக்கள் சக்தியைத் திரட்டுவது என்றும், பிப்ரவரி 4 ஆம் நாள், சென்னையில் கூடிய கழகத்தின் 22 ஆவது பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றி இருக்கின்றது.

நாளை, பிப்ரவரி 8 ஆம் நாள் வண்டலூரில், பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி அவர்கள் பங்கு ஏற்கின்ற, பாரதிய ஜனதா கட்சி நடத்துகின்ற திறந்தவெளி மாநாடு நிகர்த்த பொதுக்கூட்டம், மகத்தான வெற்றி பெற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இலட்சக்கணக்கான மக்கள் சங்கமிக்கப் போகும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பாரதிய ஜனதா கட்சியின் தோழர்கள், உடன்பாடு கொள்ளும் கூட்டணிக் கட்சிகளின் தோழர்கள், பொதுமக்கள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகக் கண்மணிகள் அனைவரும், நிகழ்ச்சிக்கு வரும்போதும் திரும்பிச் செல்லும்போதும், சாலைகளில் கவனமாகவும், பத்திரமாகவும் பயணம் மேற்கொள்ள வேண்டுகிறேன்!

இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

English summary
In a setback to BJP ahead of its rally on Saturday to be addressed by Narendra Modi, the Vaiko-led MDMK, which has struck an alliance with it for the Lok Sabha polls, has reservations about attending the meet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X