For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எக்காலமும் பா.ம.க. இடம்பெறும் கூட்டணியில் இணையமாட்டோம்: திருமாவளவன்

By Mathi
Google Oneindia Tamil News

VCK should not join PMK alliance: Thirumavalavan
சென்னை: எக்காலமும் எந்த சூழலிலும் பாமக இடம்பெறும் கூட்டணியில் கட்டாயம் இணையமாட்டோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார்.

தி ஹிந்து தமிழ் நாளிதழுக்கு திருமாவளவன் அளித்த பேட்டியின் முக்கிய அம்சங்கள்:

எங்களது தனித்தன்மை பாதிக்கப்படும் வகையில் தி.மு.க. ஒருபோதும் நடந்துகொண்டது இல்லை. நாங்கள் வெளிப்படையாக விடுதலைப் புலிகளையும் அதன் தலைவர் பிரபாகரனையும் ஆதரித்தோம். ஆனால், தி.மு.க. ஒருபோதும் ‘இது சரியில்லை; இது கூட்டணி தர்மத்துக்கு விரோதமானது' என்று சொன்னதில்லை. தி.மு.க-வின் அந்த நாகரிகமான அணுகுமுறை மற்றும் ஜனநாயகம் நிறைந்த பெருந்தன்மையே எங்கள் வலுவான நட்புக்குக் காரணம்.

தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளை உருட்டி மிரட்டித் தாங்கள் கேட்கிற அளவில் தொகுதிகளையும் ‘பொருளாதார'த்தையும் பெற முடியும் என்கிற அகந்தை பாமகவுக்கு ஏற்பட்டது. ஆனால், வலுவான கூட்டணிகளில் இடம்பெற்றும் 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும், 2011 சட்டசபைத் தேர்தலிலும் அந்தக் கட்சி படுதோல்வி அடைந்தது. அந்தக் கட்சியின் வாக்குவங்கி முற்றிலுமாகச் சரிந்ததே இதற்குக் காரணம்.

பா.ம.க. இப்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அதனால், போக்கிடம் இல்லாமல் விரக்தியின், வெறுப்பின் உச்சத்தில் ராமதாஸ் சாதி, மதவெறி அரசியலைக் கையில் எடுத்துள்ளார். தனது மகன் அமைச்சர் ஆக வேண்டும் என்பதுதான் அவரது குறிக்கோள்.

தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இணைய வாய்ப்பே இல்லை. இனி, எக்காலமும் எந்தச் சூழலிலும் பா.ம.க. இடம்பெறும் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்டாயம் இணையாது.

முட்டுச் சந்தில் முட்டும் கட்சிகள்..

பா.ஜ.க-வுடன் கூட்டணி சேரும் கட்சிகள் பெரும்பாலும் முட்டுச்சந்தில் போய் முட்டும் கட்சிகளே. அவர்கள் இடது புறமும் வண்டியைத் திருப்ப முடியாது; வலது புறமும் திருப்ப முடியாது. அப்படியே வண்டியைத் திருப்பிக்கொண்டு பின்னாலும் செல்ல முடியாது. அந்தக் கட்சிகளுக்கு வேறு வழியில்லாமல் பா.ஜ.க-வுடன் செல்கின்றன என்பதே உண்மை. அந்த அணி வலிமையான அணியும் அல்ல.

எழுத்தாளர் தமிழருவி மணியன் அந்த அணியை உருவாக்குவதில் ஆர்வம் காட்டுகிறார். எந்த ஓர் அரசியல் கட்சியையும் சாராத அவர், காங்கிரஸ் எதிர்ப்பு என்கிற ஒற்றைக் காரணத்தை மட்டும் வைத்துக்கொண்டு இந்த முயற்சியில் ஈடுபடுவது முரண்பாடாக இருக்கிறது.

காந்தியவாதியா? கோட்சேவாதியா?

காந்திய மக்கள் இயக்கம் என்கிற பெயரில் செயல்படும் அவர், காந்தியைச் சுட்டுக் கொன்ற கோட்சேவை மாவீரனாகக் கருதும் பா.ஜ.க-வுடன் சில கட்சிகளைத் தேடிப் பிடித்துக் கூட்டணி அமைக்க முயற்சிப்பதால், அவர் காந்தியவாதியா? கோட்சேவாதியா? என்கிற சந்தேகம் ஏற்படுகிறது. மோடியை அவர் ஆதரிக்கக் காரணம், உண்மையில் காங்கிரஸ் எதிர்ப்புதானா? அல்லது அவர் ஆழ்மனதில் ஊறியிருக்கும் இந்துத்துவா உணர்வா? அவர்தான் சொல்ல வேண்டும்.

திமுக கூட்டணிக்காக ராகுலை சந்தித்தே என்பது முழுக்க முழுக்க வதந்திதான்.தோழமைக் கட்சிகளைக் கூட்டணித் தூதுக்கு அனுப்புவது கூட்டணி அரசியல் தர்மம் ஆகாது. அப்படிச் செய்தால் அது அரசியல் அனுபவம் இல்லாதவர்களின் வேலை. அரசியல் மேதையான தி.மு.க. தலைவர் கருணாநிதி அப்படிச் செய்வாரா? அவ்வளவு ஏன்? ராகுலிடம் பேச தி.மு.க-வில் ஆட்களா இல்லை.

இவ்வாறு தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

English summary
Viduthalai Chiruththaigal Katchi leader Thol. Thirumavalavan said that his party should not join with the PMK alliance in future elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X