கல்வியாளர்களா… சசி ஆதரவாளர்களா… துணைவேந்தர்கள் மீது நடவடிக்க.. கவர்னருக்கு ஸ்டாலின் கடிதம்
சசிகலாவை சந்தித்த பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் கவர்னரிடம் கோரியுள்ளார்.
சென்னை: அதிமுகவின் பொதுச் செயலாளராக வி.கே. சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்று பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நேரில் சென்று கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து துணைவேந்தர்கள் மீது கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக பொருளாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் கடிதம் அளித்துள்ளார்.
ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர், யார் அதிமுகவின் பொதுச் செயலாளர் என்ற கேள்வி எழுந்தது. முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் உள்பட அந்தக் கட்சியின் மூத்தத் தலைவர்கள் சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியை ஏற்குமாறு கேட்டுக் கொண்டனர். இதனையடுத்து, பல்வேறு துறையைச் சேர்ந்த அதிகாரிகள், பத்திரிகை, ஊடக உரிமையாளர்கள், தலைமை ஆசிரியர்கள் சசிகலாவை நேரில் சந்தித்து வருகின்றனர்.

இதே போன்று, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கரன், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி, அன்னை தெரசா பல்கலைக்கழக துணைவேந்தர் வள்ளி, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் முத்துக்குமார், பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி, திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் முருகன், உடற்கல்வி பல்கலைக்கழக துணைவேந்தர் மூர்த்தி, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் தங்கசாமி, தமிழ்நாடு கால் நடை மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் திலகர் ஆகியோர் சசிகலாவை சந்தித்து அதிமுக பொதுச்செயலாளர் பதவியை ஏற்குமாறு கோரிக்கை வைத்ததாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின.
தமிழக பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் அரசியல் நோக்கோடு திருமதி.சசிகலாவை சந்தித்தது குறித்து ஆளுநருக்கு கடிதம் எழுதினேன் #ViceChancellor pic.twitter.com/kSbKCxNpi2
— M.K.Stalin (@mkstalin) December 22, 2016
இதனைக் கண்டித்துள்ள மு.க. ஸ்டாலின், கவர்னர் வித்யாசாகர ராவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், கல்வியின் காவலர்களாக விளங்க வேண்டிய துணை வேந்தர்கள் தரம் தாழ்ந்து நடந்து கொள்வது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், பல்கலைக் கழக துணைவேந்தர்களுக்கு அறிவுரை வழங்குமாறு மு.க. ஸ்டாலின் கவர்னரிடம் கேட்டுக் கொண்டுள்ளார். சசிகலாவை நேரில் சந்தித்த துணைவேந்தர்கள் அனைவர் மீது கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications