For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வெட்கத்தை மறந்து வீதிக்கு வந்து போராடுங்கள்... தவறு செய்த தோழர்களுக்கு கி.வீரமணி அழைப்பு!

Google Oneindia Tamil News

சென்னை: ஈழத் தமிழர்களுக்குத் துரோகம் செய்வதில் காங்கிரசை விஞ்சியதாகச் செயல்படும் இன்றைய பி.ஜே.பி. அரசை எதிர்த்துப் போராட மற்ற கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.

நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி விசயத்தில் தவறு செய்த தோழர்கள் வெட்கத்தை மறந்து விட்டு வீதிக்கு வந்து போராட வேண்டும் என மறைமுகமாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

Veeramani asks all political parties to come forward to protest against central government

குறட்டை விடும் இந்தியா....

இலங்கையில் நடைபெற்ற தமிழ்ப் பத்திரிகையாளர் பயிலரங்கம் - சிங்கள இனவெறியர்களின் அத்துமீறிய செயல்பாட்டால் தடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இலங்கைத் தீவில் கருத்துரிமைக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தினை, நெருக்கடியை அமெரிக்கா கண்டித்துள்ளது - இந்தியா வழக்கம்போல் குறட்டை விடுகிறது.

சிங்கப்பூரில் பி.ஜே.பி. பொறுப்பாளர் சேஷாத்திரி சாரியின் கருத்து...

சிங்கப்பூரில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் பி.ஜே.பி. யின் வெளிவிவகாரக் கொள்கையின் தேசிய அமைப்பாளர் சேஷாத்திரி சாரி என்பவர் பேசியுள்ளார். அதில் அவர், ‘‘இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை தமிழ்நாடு, மேற்குவங்காளம் மாநிலங்களைக் கருதி தீர்மானிக்க முடியாது'' எனத் தெரிவித்துள்ளார்.

சு.சாமி வகையறாக்கள்...

சுப்பிரமணியசாமி தலைமையில் ஆன குழு இலங்கைக்கு சென்று மகிந்த ராஜபக்சேவை சந்தித்து விட்டுத் திரும்பியது. ‘இலங்கையில் நடந்த பத்திரிகையாளர் குழுவிலேயே இலங்கையில் நடந்தது போர்க்குற்றமல்ல; மேலும் இலங்கையில் வாழும் தமிழர்கள் அவர்கள் சிக்கல் களை அவர்களாகவே பேசித் தீர்த்துக் கொள்ளவேண்டும் என் றும் சர்வதேச விசாரணைகளுக்கு இலங்கை அஞ்சத் தேவையில்லை' என்றும் சுப்பிரமணியசாமி, பேட்டியளித்திருந்தார்.

பழம்பெரும் கலாச்சார நாடு...

பத்திரிகையாளர்களுக்கு நேற்று (29.7.2014) பேட்டியளித்த முன்னாள் இணையமைச்சர் (வாஜ்பேயி ஆட்சிக் காலத்தில்) சுரேஸ் பிரபு கூறியதாவது, ‘‘இலங்கை நமது நட்பு நாடு, வர்த்தகம் மாத்திரமல்ல; நமது பழம்பெரும் கலாச்சார உறவு கொண்ட நாடு, இலங்கையில் நடக்கும் எந்த ஒரு பாதிப்பும் நேரடியாக இந்தியாவையும் பாதிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே!

மீண்டும் அமைதி...

இந்த நிலையில் கடந்த 30 ஆண்டுகளாக இனவாதக்குழுக்கள் தோன்றி இலங்கையில் பெரிய அளவில் வன்முறையை நிகழ்த்தியுள்ளன. தற்போது அங்கு அமைதி திரும்பியுள்ளது. அந்த நாட்டின் வர்த்தகம் மற்றும் உள்நாட்டுக்கட்டமைப்பின் வளர்ச்சிக்கு இந்தியா பெரிதும் துணை நிற்கும், அதேவேளையில் தமிழ் நாட்டில் சில அரசியல் அமைப்புகளும் இயக்கங்களும் இனவாதக் குழுக்களுக்கு துணைபோகும் நிலையில் உள்ளது.

மென்மையான நடவடிக்கை...

வாக்கு அரசியலுக்காக இலங்கைப் பிரச்சினையை இன்றளவும் தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் கைகளில் ஏந்திக் கொண்டு தீர்க்கமான முடிவெடுப்பதற்கு தடையாக இருக் கிறது. இதற்கு முன்பு இருந்த அரசு திராவிடக்கட்சிகளின் அழுத்தத்திற்கு ஈடு கொடுத்து மென்மையான நடவடிக்கை எடுத்து வந்தது.

மோடி அரசு...

தற்போது நரேந்திரமோடி தலைமையில் ஆன அரசு இலங்கை பிரச்சினையை தீர்ப்பதற்கு பெரிதும் உதவியாக இருக்கும். இலங்கையின் எந்த ஒரு நடவடிக்கையும் இந்தியாவிற்கு நன்மை தருவதாக இருக்கும் பட்சத்தில் முழு மையான ஆதரவு அளிக்கும், இதற்கான உத்திரவாதத்தை நரேந்திரமோடி ஆட்சியேற்ற போது டெல்லி வந்த மகிந்த ராஜபக்சேவிடமும், அதனைத் தொடர்ந்து வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் ஆன குழுவிடமும் நாங்கள் உறுதியாகக் கூறியுள்ளோம்.

தொழில் தொடங்க முன்னுரிமை...

தற்போது இலங்கையின் வளர்ச்சிக்காக பல்வேறு நட வடிக்கைகளை நாங்கள் எடுத்து வருகிறோம். முக்கியமாக இந்திய தொழில் முனைவோர்கள் இலங்கையில் சென்று தொழில் தொடங்க முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

ஓட்டு வங்கி...

இந்த நிலையில் தமிழக அரசியல் கட்சிகளின் ஓட்டு வங்கிக்காக அவர்கள் கொடுக்கும் அழுத்தங்களுக்கு நாங்கள் பலியாக மாட்டோம், எங்களுக்குத் தேவை இலங்கையில் வளர்ச்சி அதற்குத்தான் முக்கியத்துவம் தருவோம்.

பேட்டி....

விரைவில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் அவர்கள் இலங்கை சென்று பல்வேறு முடிவு களை அறிவிப்பார்'' என்றும் ராஜபக்சேவின் உடன்பிறவா சகோதரராகப் பேட்டியளித்துள்ளார்.

இதற்கிடையே நேற்று வெளிவந்த ஒரு தகவல்...

ஆகஸ்டு 18 முதல் 20 முடிய மூன்று நாள்கள் இலங்கையில் நடைபெறவுள்ள இராணுவக் கருத்தரங்கில் இந்திய இராணுவத்தைச் சேர்ந்த உயர்மட்ட அதிகாரிகள் பங்கேற்பார்களாம்!

இந்தக் கருத்தரங்கின் நோக்கம் இலங்கைக்கு அதன் நட்பு நாடுகள் பாதுகாப்பு ஒத்துழைப்பை எந்த அளவுக்கு வழங்குவது என்பதை முடிவு செய்வதற்காகவாம். ஐ.நா. மனித உரிமை ஆணையம் இலங்கையில் நடந்துள்ள போர்க் குற்றங்களை விசாரிக்க ஒரு குழுவை நியமித்து, அது விசாரணையைத் தொடங்கும் இந்தக் காலகட்டத்தில், இலங்கையில் இந்தக் கருத்தரங்கம் என்பதைக் கவனிக்கத் தவறக்கூடாது.

பெரிய ஜாதி வெறியர்...

இராணுவ அதிகாரிகள் குழுவோடு பி.ஜே.பி. சார்பில் சுப்பிரமணியசாமி, தலைமையில் ஒரு குழுவும் செல்லுகிறதாம். (தொடக்கமுதல் ஈழப் பிரச்சினையில் எவ்வளவுப் பெரிய ஜாதி வெறியராக இவர் நடந்துகொண்டு வந்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே!)

மூவர் குழு...

ஈழத் தமிழர் படுகொலை தொடர்பாக ஐ.நா.வின் மனித உரிமை ஆணையத்தால் நியமிக்கப்பட்ட மூவர் குழு விசாரணையை இந்தியாவில் நடத்துவதற்கு அனுமதி யில்லை என்று பாஜக அரசு ஏற்கெனவே அறிவித்து விட்டது.

‘காங்கிரஸ் பரவாயில்லை!...

நிலைமைகளைப் பார்க்கும்பொழுது, முந்தைய காங்கிரஸ் ஆட்சி பல மடங்கு மேலானது என்று நினைக்கக் கூடிய வகையில், கொடுங்கோலன் ராஜபக்சேவுக்குத் தங்கக் காப்பு அணிவித்து - மிச்ச சொச்சம் இருக்கும் ஈழத் தமிழர்களையும் கூண்டோடு ஒழித்திட ஆணையிடுங்கள், செய்து முடிக்கிறோம் என்று ராஜபக்சேவிடம் மனு போடும் ஒரு நிலையை பி.ஜே.பி. அரசு எடுத்திருக்கிறதோ என்று கருத ஏராள இடம் இருக்கிறது.

உப்புக்கண்டம்....

இந்தப் பி.ஜே.பி.தான் மத்தியில் ஆட்சிப் பீடத்தில் அமரவேண்டும்; மோடி வந்தால் ஈழப் பிரச்சினையில் முழு வெற்றி தமிழர்களுக்குக் கிடைக்கும் என்று பீரங்கி முழக்கம் செய்த தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் உப்புக் கண்டம் பறிகொடுத்த பழைய பார்ப்பனத்தியைப் போல விழி பிதுங்கிய நிலையில், விண்ணப்பங்களைப் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் முகத்தில் எப்படி விழிக்கப் போகிறார்கள் என்றும் தெரியவில்லை.

பாஜக எனும் முரட்டுக்காளை....

தவறு செய்த அந்தத் தோழர்கள், வெட்கத்தை மறந்து விட்டு, வீதிக்கு வந்து போராட முன்வரவேண்டும். ஒட்டு மொத்த தமிழர்களும் கட்சிக் கோடுகளைத் தாண்டி ஒன்று பட்டு எழுந்தால்தான் இன்றைய பாஜக ‘‘முரட்டுக் காளையை'' அடக்க முடியும்!

தமிழ் முழக்கம்...
தமிழா இன உணர்வு கொள்!
தமிழா தமிழனாக இரு!
ஒன்றுபடுவோம் - வென்றுவிடுவோம்!
என்ற முழக்கத்தை மீண்டும் எழுப்புகிறோம்.

இவ்வாறு கி.வீரமணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

English summary
The Dravidar kazhhagam president ki. Veeramani has the BJP alliance political parties to come forward to protest against Modi government on srilankan issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X