For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேட்டூர் அணை திறக்கப்படாததற்கு அதிமுக அரசே காரணம்.. வேல்முருகன் குற்றச்சாட்டு

மேட்டூர் அணை திறக்கப்படாததற்கு அதிமுக அரசே காரணம் என வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: மேட்டூர் அணையில் காவிரி நீர் திறந்துவிடுவது குறித்து மோடி அரசுடன் சண்டை போட வேண்டிய தமிழக ஆட்சியாளர்கள் மற்றும் அரசியலாளர்கள், அதைச் செய்யாமல், தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வதாக ஒரு தொடர் நாடகத்தையே அரங்கேற்றி வருவதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஜூன் 12ந் தேதி என்பது ஆண்டுதோறும் மேட்டூர் அணை திறக்கப்படும் நாள். தமிழகத்தின் காவிரிப் படுகை மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் அதை ஒட்டியுள்ள அரியலூர், கடலூர் மாவட்டங்களின் சில பகுதிகளிலும் சம்பா சாகுபடிக்காக காவிரி நீரை திறந்துவிடும் நாள்.

 velmurugan Accusation on admk government

ஆண்டாண்டு காலமாகவே தமிழர் வாழ்வியலோடு ஒன்றிக் கலந்த நாள்தான் இந்த ஜூன் 12ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் நாள். அன்று மேட்டூர் சுற்றுவட்டார மக்கள் இதை ஒரு விழாவாகவே கொண்டாடிக்களிப்பர்.

ஆனால் கடந்த அய்ந்தாண்டு காலமாக ஜூன் 12ல் மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. இதில் முதல் மூன்று ஆண்டுகளில் ஜூன் 12ந் தேதியை விட்டு சில நாட்கள் கழித்து அணை திறக்கப்பட்டது. அதன்பின் கடந்த இரண்டு ஆண்டுகளும் ஜூன் 12ந் தேதிக்குப் பிறகும்கூட தேதி குறிக்கப்பட்டுத் திறக்கப்படவில்லை. மழை பெய்து நீர் வரத்து ஏற்பட்டதால் அணை திறக்கப்பட நேர்ந்தது அவ்வளவுதான்.

மேட்டூர் அணை திறக்கப்படாததால் கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழக காவிரிப் படுகை விவசாயமே நின்றுபோனது. போதிய நீர் இல்லாததால் ஏற்றியிருந்த பயிர்களும் கருகியதுதான் மிச்சம். அதனால் விவசாயமும் விவசாயிகளும் வீழ்த்தப்பட்டுக் கிடப்பதுதான் உண்மை. இந்த வீழ்ச்சியால் இதுவரை நானூருக்கும் மேற்பட்ட விவசாயிகள் மாண்டுபோயினர். அதில் பாதி பேர் தற்கொலை செய்துகொண்டவர்கள். மீதி பேர் தண்ணீர் இன்றி, பயிர்கள் கருகுவதைப் பார்க்க இதய பலமின்றி, பட்ட பயிர்க் கடனைக் கட்ட வழியின்றி உயிரை மாய்த்துக் கொண்டவர்கள்.

உயிரோடிருக்கும் விவசாயிகளோ இதற்கெல்லாம் காரணமான காவிரி உரிமைக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த ஆண்டு ஜூன் 12ந் தேதியும் வந்துவிட்டது. ஆனால் காவிரி நீர், மேட்டூர் அணை திறப்பு என்பது பற்றிய பேச்சே இல்லை.

மேட்டூர் அணைக்கு வரும் காவிரி நீர்வரத்தும் குறைந்துகொண்டிருப்பதையே காண முடிகிறது. 164 கன அடியாக இருந்த நீர் வரத்து 130 கன அடியாகியிருக்கிறது. நேற்று ஒரு நாளில் மட்டும் 0.12 கன அடி குறைந்திருக்கிறது. அணையின் நீர் மட்டம் 23.8 அடியாக இருக்கும் நிலையில் 500 கன அடி நீர் வெளியேறுகிறது. இது மிகக் குறைந்த அளவாகும். இந்த நீரை வைத்துக் கொண்டு அணை திறப்பது என்பது சாத்தியமில்லை.

ஆனால் இப்படிப்பட்ட நிலைமை வர யார் காரணம்? காவிரி நீர் பற்றி சுத்தமாகவே மறந்துவிட்டதோடு மக்கள் மத்தியிலும் அதை மறக்கடிக்கச் செய்துவிட்டவர்கள் தமிழக ஆட்சியாளர்கள் மற்றும் அவர்களுடன் இணைந்த அரசியலாளர்கள் என்பதில் தமிழக மக்களுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு அமைக்காததுதான் இந்தப் பிரச்சனையின் மையப் புள்ளி. இதில் முதன்மைக் குற்றவாளி நடுவண் மோடி அரசு. அடுத்து அதிமுக அரசு. தமிழ் என்கிற அடையாளத்தையே அழித்தொழிக்க வேண்டும் என்று செயல்படும் மோடி அரசின் பகடைக்காயாகவே தமிழக அரசு மாறிப்போனதுதான் தமிழர் வரலாற்றில் இதுவரை ஏற்பட்டிராத கொடுந்துயரம்.

காவிரியை மறப்பதென்பது தாயை மறப்பதற்குச் சமம். இப்படிப்பட்ட சுயநலமிகளின் கையில் சிக்கிச் சீரழிந்துகொண்டிருக்கிறது தமிழகம். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, மேட்டூர் அணையில் காவிரி நீர் திறந்துவிடுவது குறித்து மோடி அரசுடன் சண்டையே போட வேண்டிய தமிழக ஆட்சியாளர்கள் மற்றும் அரசியலாளர்கள், அதைச் செய்யாமல், தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வதாக ஒரு தொடர் நாடகத்தையே அரங்கேற்றி இந்தத் தமிழ் மண்ணையும் மக்களையும் ஏமாற்றி வருகிறார்கள். இதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாக்க் கண்டிக்கிறது. இவ்வாறு வேல்முருகன் கூறியுள்ளார்.

English summary
Tamilaga Valvurimai Katchi founder T Velmurugan Accusation on admk tn government over the issue of mettur dam
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X