For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சசிபெருமாள் உயிர்த்தியாகத்திற்கு மதிப்பளித்து தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துக: வேல்முருகன்

Google Oneindia Tamil News

சென்னை: காந்தியவாதி சசிபெருமாளின் உயிர்த்தியாகத்துக்கு மதிப்பளிப்பு தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

கன்னியாகுமரி அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட காந்தியவாதி சசிபெருமாள், செல்போன் கோபுரத்தில் ஏறி போராடிய போது எதிர்பாராத விதமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது மரணத்திற்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Velmurugan expresses condolence to Sasi Perumal

அந்தவகையில், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பல கட்டப் போராட்டங்களை நடத்தி வந்த காந்தியவாதி பெரியவர் சசிபெருமாள் அவர்கள், இன்று இந்தப் போராட்ட களத்திலேயே தன் உயிரைத் தியாகம் செய்திருப்பது பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.

பூரண மதுவிலக்கு என்ற உயர்ந்த லட்சியத்தை அடைவதற்காக கடந்த பல ஆண்டுகளாக சாகும் வரை உண்ணாவிரதம், மறியல் என பல்வேறு போராட்டங்களை நடத்தியவர் பெரியவர் சசிபெருமாள் அவர்கள். அத்துடன் தன் மரியாதையைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் மது குடிப்போரின் காலில் விழுந்துகூட 'குடிப் பழக்கத்தை' கைவிடுமாறு வலியுறுத்தி போராட்டங்களையும் நடத்தியவர் காந்தியவாதி சசிபெருமாள் அவர்கள்.

மேதகு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் மறைவையொட்டி மதுபானக் கடைகளை ஒரு வாரம் மூடக் கோரி 2 நாட்களுக்கு முன் போராட்டம் நடத்தி கைதானார். இதன் தொடர்ச்சியாக இன்று கன்னியாகுமரி மாவட்டம் உண்ணாமலைக் கோட்டை என்ற இடத்தில் டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி செல்போன் கோபுரம் மீது ஏறி நின்று போராட்டம் நடத்தினார்.

அந்த செல்போன் கோபுரத்திலேயே கோரிக்கைகளை வலியுறுத்திய நிலையிலேயே மயங்கி விழுந்தார் சசிபெருமாள் அவர்கள். அவர் தீயணைப்புத் துறையினரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போதும் அவரது உயிரைக் காப்பாற்ற இயலாமல் போய்விட்டது பெரும் துயரமாகும்.

பூரண மதுவிலக்குக்கான போராட்ட களத்திலேயே காந்தியவாதி பெரியவர் சசிபெருமாள் தமது உயிரைத் தியாகம் செய்திருக்கிறார்.

காந்தியவாதி சசிபெருமாள் அவர்களின் பூரண மதுவிலக்குக்கான போராட்டங்களை தமிழக வாழ்வுரிமைக் கட்சி முழுமையாக ஆதரித்து வந்துள்ளது..ஆதரிக்கிறது. அதேநேரத்தில் இத்தகைய போராட்டங்கள் மூலமான உயிர்த் தியாகங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது.

பூரண மதுவிலக்கு ஒன்றையே தம் வாழ்நாள் லட்சியமாகக் கொண்டு போராடி அந்த போராட்ட களத்திலேயே உயிரிழந்த பெரியவர் சசிபெருமாளின் உயிர்த் தியாகத்துக்கு மதிப்பளிக்கும் வகையில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்திட வேண்டும்; அதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

காந்தியவாதி பெரியவர் சசிபெருமாள் அவர்கள் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது உயர்ந்த லட்சியமான பூரண மதுவிலக்கை தமிழகத்தில் நடைமுறைப்படுத்திடுவதற்கான அத்தனை நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி உறுதியேற்கிறது' என இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

English summary
The Tamilaga Vazhvurimai katchi president Velmurugan has expressed his condolence to Gandhian Sasi Perumal who died today while protesting against liquor in Kanyakumari.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X