மதுரை காமராஜர் பல்கலை துணைவேந்தர் நியமனத்தில் நிர்பந்தம் - தேர்வுக் குழு உறுப்பினர்கள் பதில் மனு

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை : மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக செல்லத்துரைக்கு போதிய அனுபவம் இல்லை என தெரிந்தே நியமித்தோம் என்று துணைவேந்தர் தேர்வுக் குழு உறுப்பினர்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பதில் மனு தாக்கல் செய்தனர்.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் என நான்கு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் பதவி காலியாக இருந்து வந்தன.

We were forced to elect MKU VC, says selection committee

இதில், அண்ணா மற்றும் சென்னை பல்கலைக்கழகங்களில் கடந்த ஓராண்டாகவும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இரண்டு ஆண்டுகளாகவும் துணைவேந்தர்கள் இல்லாமல் இயங்கி வந்தன.

கடந்த மே 27ம் தேதி சென்னை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக துரைசாமியும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக செல்லதுரையும் நியமிக்கப்பட்டனர்.

ஒரு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக நியமிக்கப்படுவதற்கு ஒருவர் 10 ஆண்டுகள் பேராசிரியராக பணிபுரிந்திருக்க வேண்டும். கல்வியில் சிறந்த பின்னணி கொண்டிருக்க வேண்டும். ஆனால், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள செல்லதுரைக்கு பேராசிரியராக பணியாற்றிய அனுபவம் கிடையாது. அதனால், அவரை துணை வேந்தராக நியமனம் செய்ததை ரத்து செய்ய வேண்டும் என்று அப்போதே எதிர்ப்புகள் கிளம்பின.

இந்நிலையில், மதுரை எஸ்.எஸ். காலனியைச் சேர்ந்த லயோனல் அந்தோணிராஜ் என்பவர் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்டச் செயலாளராக உள்ளார். இவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொது நல மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரை காமராஜர் பல்கலைக்கழக பாதுகாப்பு குழுவின் கன்வீனராக பேராசிரியர் சீனிவாசன் என்பவர் நியமிக்கப்பட்டார். அதன் பின்னர், அவரை ஒரு கும்பல் தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த அவர் புதுக்கோட்டை நாகமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த தாக்குதல் தொடர்பாக, விசாரித்த போலீசார், தற்போது காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக உள்ள செல்லதுரை உள்பட சிலர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. அதுமட்டுமில்லாமல், செல்லதுரைக்கு பேராசிரியராக பணியாற்றிய அனுபவமும் கிடையாது. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் செல்லதுரை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், செல்லதுரை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் காலிப் பணியிடங்களை நிரப்பி வருகிறார். அதனால், அவர் பல்கலைக்கழகத்தில் புதிதாக பணியிடங்களை நிரப்புவதற்கு தடை விதிக்க வேண்டும். அவரை துணைவேந்தராக நியமனம் செய்ததை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார்.

லயோனல் அந்தோனிராஜ் தாக்கல் செய்த இந்த மனு கடந்த ஜூலை 11ம் தேதி நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் தமிழக பல்கலைக்கழகங்களின் வேந்தரான தமிழக ஆளுநரை எதிர் மனுதாரராக சேர்த்து மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

இதனிடையே இன்று இந்த மனு விசாரணைக்கு வந்த போது, துணைவேந்தர் தேர்வுக் குழு உறுப்பினர்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பதில் மனு தாக்கல் செய்தனர். அதில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக செல்லத்துரைக்கு போதிய அனுபவம் இல்லை என தெரிந்தே நியமித்தோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

செல்லத்துரை 10 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றிய அனுபவம் இல்லை என்றும் தேர்வுக்குழு ஒருங்கிணைப்பாளர் நிர்பந்தத்தால் துணைவேந்தராக செல்லத்துரையை தேர்ந்தெடுத்தோம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
MKU vice chancellor selection committee members have informed the HC bench at Madurai that they were forced to select Chelladurai as the VC.
Please Wait while comments are loading...