For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவல்துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ளதா? ஜி.ராமகிருஷ்ணன் சந்தேகம்

காவல்துறையை முதல்வர் பெயரளவிற்கு தான் நிர்வகிக்கிறாரா? காவல்துறை அவர் கட்டுப்பாட்டில் இல்லையா? என ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: காவல்துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ளதா? அல்லது முதல்வரே கட்டுப்பாடின்றி பேச அனுமதியளித்திருக்கிறாரா என்கிற கேள்வி எழுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் கட்டவிழ்த்துவிட்ட மூர்க்கத்தனமான, காட்டுமிராண்டித்தனமான, கட்டுப்பாடற்ற தாக்குதல்களை நியாயப்படுத்தவும் காவல்துறையினர் பயன்படுத்திய கீழ்த்தரமான வார்த்தைகளையும், போராட்டக்காரர்கள் மற்றும் பொதுமக்களின் இரு சக்கர வாகனங்களையும், ஆட்டோக்களையும், வீடுகளையும், வியாபார சந்தைகளையும் அடித்தும், எரித்தும் சேதப்படுத்தியதை மறைக்கவும் காவல்துறையினர் எழுதிக்கொடுத்ததை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் வாசித்திருக்கிறார்.

who is incharge of tamilnadu police departments? G.Ramakrishnan

காவல்துறையினர் போராட்டக்காரர்கள் மீதும், பொதுமக்கள் மீதும் எழுதிக் கொடுத்த புகார் பட்டியலை புனித நூல் போல வாசித்திருக்கும் முதல்வர் காவல்துறையின் அட்டூழியங்களைப் பற்றிய, காணொளிகளைப் பற்றியெல்லாம் இனிமேல்தான் விசாரிக்கப் போகிறாராம்.தமிழக முதல்வர் சமூக விரோதிகள், தேச விரோதிகள் போராட்டக்காரர்களுடன் ஊடுருவியதாக பேசியிருக்கிறார்.

ஆனால் போராட்டக்காரர்கள் கூடியிருந்த எந்த இடத்திலும் வன்முறைகள் நிகழ்ந்ததாக முதல்வரோ, மெரினாவில் நடந்த போராட்டத்தில் காவல்துறைக்கு பொறுப்பாக இருந்த மயிலாப்பூர் துணை ஆணையாளர் பாலகிருஷ்ணனோ எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை.

ஆயினும் தேச விரோதிகள், சமூக விரோதிகள் ஊடுருவி விட்டதாக ஆதி என்பவர் சொன்னதை மேற்கோள் காட்டி முதல்வர் பேசியிருக்கிறார். ஆதி பேசுவதற்கு முன்பாகவே பாஜக தலைவர் ஒருவர் இப்படி பேசினார். முதல்வர் தனது சட்டப்பேரவை உரையில் காவல்துறையின் அட்டூழியங்களை நியாயப்படுத்த தனிநபர் ஒருவரை சாட்சியாக்கி சொல்லியிருப்பது முதல்வர் பொறுப்பிற்கு உகந்ததல்ல.

காவல்துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ளதா? அல்லது முதல்வரே கட்டுப்பாடின்றி பேச அனுமதியளித்திருக்கிறாரா என்கிற கேள்வி எழுகிறது. கோவை மாநகர கமிஷனர் அமல்ராஜ் இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல அமைப்புகளை குறிப்பிட்டு எவ்வித நாவடக்கமுமின்றி அவையெல்லாம் தடைசெய்யப்பட்ட அமைப்புகள் போலவும், தேச விரோத செயல்களில் ஈடுபட்டவர்கள் போலவும் பேசியிருக்கிறார். இவையெல்லாம் வரம்பு மீறிய செயல்களாகும்.

தோழர் என்கிற வார்த்தையை பயன்படுத்துவது குறித்து கூட எதிர்மறையாக பேசியிருக்கிறார். மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குகிற ஒரு அதிகாரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நலனுக்காக போராட அர்ப்பணித்துக் கொண்ட அமைப்புகளை தேச விரோத அமைப்புகள் போன்று சித்தரிப்பது கண்டிக்கத்தக்கது, கிரிமினல் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட வேண்டியது.

இது தவிர சென்னை காவல்துறை கூடுதல் ஆணையர் சேஷசாயி, இதைப்போன்ற தொனியில் பேசுகிறார். அமல்ராஜ் குறிப்பிட்ட அமைப்புகளின் எண்ணிக்கையும் அவர் வரிசைப்படுத்தியதையும் ஏற்கெனவே பாஜக தலைவர் ஒருவர் கூறியிருக்கிறார். இவையெல்லாம் காவல்துறையை முதல்வர் பெயரளவிற்கு தான் நிர்வகிக்கிறாரா? காவல்துறை அவர் கட்டுப்பாட்டில் இல்லையா? வெளியில் இருக்கிறவர்களால் இயக்கப்படுகிறதா? என்கிற கேள்வி எழுகிறது.

இவை ஒருபுறமிருக்க முதல்வர் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து எந்த கரிசனமும் இல்லாமல் நடந்து கொண்டிருக்கிறார். பெண்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர்கள் என எவ்வித பாகுபாடுமின்றி காவல்துறை அட்டூழியம் செய்திருக்கிறது. பொதுமக்களின் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன, வாழ்வாதாரம் அழிக்கப்பட்டிருக்கிறது -தீக்கிரையாக்கப்பட்டிருக்கிறது. காவல்துறையின் செயல்பாடுகளை நியாயப்படுத்துவது போன்று முதல்வரின் பேச்சு இருக்கிறது.

கடந்த ஜூலை மாதத்தில் முதல்வரின் மாவட்டத்தில் கடமலைக்குண்டுவில் வனத்துறையினரால் பழங்குடியின பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான போது சட்டப்பேரவையிலேயே அமைச்சர் அப்படி ஏதும் குற்றம் நடக்கவில்லை என்று சொன்னார். ஆனால் அன்று மாலையே குற்றம்சாட்டப்பட்டவர்கள் மக்கள் போராட்டத்தின் காரணமாக கைது செய்யப்பட்டார்கள். 1992-ம் ஆண்டு வாச்சாத்தி கிராமத்தில் பழங்குடியின பெண்கள் 18 பேர் காவல்துறையினரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பிரச்சினையில் அன்றிருந்த அதிமுக அரசாங்கம் அப்படி ஏதும் நடக்கவில்லை என்று சாதித்திருந்ததது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்முயற்சியினாலும், நீதிமன்றத்தின் உதவியாலும் குற்றம்சாட்டப்பட்ட 269 பேரும் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இறந்துபோன 54 பேர் தவிர 215 பேருக்கு ஓராண்டு முதல் பத்தாண்டுகள் வரை சிறைத் தண்டனையளிக்கப்பட்டது. ரூ. 1.25 கோடிக்கும் அதிகமாக இழப்பீடும் வழங்கப்பட்டது.

18 பேர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட போதும் அவர்கள் சொத்துக்கள் நாசம் செய்யப்பட்ட போதும் ஒன்றுமே நடக்கவில்லை என்று பூசி மெழுகிய அரசு இது என்பதை மக்கள் அறிவார்கள். இதே போன்று சின்னாம்பதியில் நடுநாலுமூலைக்கிணறில் காவல்துறையின் அட்டூழியங்களை மாநில அரசாங்கம் பூசி மெழுகியது - மறுத்து வாதிட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முயற்சியினால் தான் நீதிமன்றத்தின் துணையோடு இவையெல்லாம் வெளிச்சத்திற்கு வந்தன.

சிதம்பரம் அண்ணாமலைநகர் காவல்நிலையத்தில் பத்மினி என்பவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதும், அவர் கண்முன்னே அவரது கணவர் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டதும் அவற்றை வெளிக்கொணர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அப்போதைய மாவட்டச் செயலாளர் கே. பாலகிருஷ்ணனை, டி.ஜி.பி. ஸ்ரீபால் ஒரு கிரிமினல் என்று சொன்னதும், அதன் பிறகு உச்ச நீதிமன்றம் நடந்த குற்றங்கள் உண்மை என்றும் குற்றமிழைத்த போலீஸ்காரர்கள் மூன்றாண்டுகள் முதல் பத்தாண்டுகள் வரை சிறைத் தண்டனை விதித்ததும் வரலாறு.

முதல்வர் வரலாறுகளிலிருந்து கற்றுக் கொள்வதற்கு பதிலாக கடந்த காலத்தைப் போலவே காவல்துறையினர் எழுதிக் கொடுக்கும் வசனங்களை அப்படியே வாசிப்பது பொருத்தமானதல்ல. முதல்வர், தவறு செய்த காவல்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், கமிஷனர்கள் ஜார்ஜ், அமல்ராஜ் ஆகியோரை பணியிடைநீக்கம் செய்ய வேண்டும்.

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜேந்திர பிடாரியையும் பணியிடைநீக்கம் செய்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கிட வேண்டும். பொதுமக்கள் குறிப்பாக நடுக்குப்பம், ரூதர்புரம் உள்ளிட்ட மீனவ மக்கள், தலித் மக்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை கைவிட வேண்டும்.

நடைபெற்ற சம்பவங்கள் அனைத்தைப் பற்றியும் முழுமையாக விபரங்களை கொண்டு வர பதவியில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையிலான நீதி விசாரணை வேண்டுமென்று வலியுறுத்துகிறோம். இந்த கோரிக்கைகளின் மீது முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

English summary
who is incharge of tamilnadu police departments? G. Ramakrishnan, Secretary of CPI(M) has question arised
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X