நஷ்டத்தில் தமிழக அரசு போக்குவரத்து கழகம்.... ஏன்...எப்படி...எதனால்?

Posted By:
Subscribe to Oneindia Tamil
  தமிழக அரசு போக்குவரத்து நஷ்டத்தில் இயங்க என்ன காரணம் ? போராட்டம் எதனால் ?- வீடியோ

  சென்னை: தமிழக அரசு போக்குவரத்து கழகம் பலருக்கும் முன்னோடியாக இருந்த காலக்கட்டம் மாறி தொடர் இழப்புகளையும், இழிவானப்பேச்சுகளுக்கும் ஆளாகி நிற்கிறது. இதற்கு யார் காரணம் என்ற கேள்வி தான் இப்போது எல்லோர் மனதிலும் ஓடிக்கொண்டிருகிறது.

  மற்ற மாநிலங்களில் வெறும் தகரத்தால் செய்யப்பட்ட பேருந்துகளை இயக்கிக்கொண்டிருந்த காலத்தில் நவீன பேருந்துகளை இயக்கி மற்ற மாநிலங்களை ஏக்கப்பார்வை பார்க்க வைத்த தமிழக அரசு போக்குவரத்து கழகம் தான் இப்போது ஏளனப்பார்வைக்கு ஆளாகியுள்ளது. லஞ்சம், முறைகேடு, அலட்சியம், காழ்ப்புணர்ச்சி, பொறுப்பின்மை இப்படி அனைத்தும் சேர்ந்து தான் தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் அஸ்தமனத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளன.

  சமீபத்தில் டெல்லியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து விட்டு அங்கு செய்தியாளர்களை சந்தித்த தமிழக போக்குவரத்துதுறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக அரசு போக்குவரத்து கழகம் அனைத்து மாநிலங்களை விட நவீனமாக உள்ளதாக கூறினார். அதே சமயம் போக்குவரத்து கழகம் கடும் நஷ்டத்தில் இயங்குவதாக அவர் பகிரங்கமாக ஒப்புக்கொண்டார். டெல்லிக்கு சென்று இதனை அவர் பகிரங்கமாக ஒப்புக்கொள்கிறார் என்றால் தமிழக அரசு போக்குவரத்து கழகத்தை நஷ்டத்திலிருந்து மீட்க முடியாத நிலையில் இருப்பதுதான் அதன் மறைமுக அர்த்தம்.

   சேர்க்கப்பட்ட கழகங்கள்

  சேர்க்கப்பட்ட கழகங்கள்

  தமிழகம் முழுவதும் மண்டல வாரியாக தனித்தனி பெயர்களிலிருந்த இயங்கிவந்த பேருந்துகள் அனைத்தும் தமிழக அரசு பேருந்துகள் என ஒரே மரத்தின் கீழ் கொண்டு வரப்பட்டன. அங்கு ஆரம்பித்தது நஷ்டத்தின் முதல்படி. தனித்தனியாக அவை ஒவ்வொரு கூரையின் கீழ் இயங்கி வரும் போது லாபத்தை பார்த்தாக வேண்டும் என முனைப்புடனும் போட்டியுடனும் உழைத்த ஊழியர்கள் அதன்பின் அரசு என்ற இயந்திரத்திற்கு ஏற்றார் போல மெதுவாக இயங்க ஆரம்பித்தனர். குறிப்பாக அதிகாரிகள்.

   ஒரேடியாக உயர்த்தப்பட்ட கட்டணம்

  ஒரேடியாக உயர்த்தப்பட்ட கட்டணம்

  சில, பல ஆண்டுகள் மெதுவாக இயங்கிக்கொண்டிருந்த போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருப்பது திடீரென ஒருநாள் கண்டுபிடிக்கப்பட்டது. சரிவை சரி செய்ய பல திட்டங்களை தமிழக அரசு போக்குவரத்து கழகம் அறிமுகம் செய்தது. செமி ஸ்லீப்பர், ஏசி, வெள்ளை போர்ட், பச்சை போர்ட், டீலக்ஸ், சூப்பர் டீலக்ஸ் இப்படி ஏழைகளின் வாகனமாக இருந்த பேருந்து, மக்களுக்கு அந்நியப்படும் அளவிற்கு மாற்றங்கள் நிகழ்ந்தன. கடந்த சில ஆண்டுகளாக சிறுக சிறுக ஏற்றி இருக்கப்பட வேண்டிய டிக்கெட் கட்டணமும் ஒரேடியாக உயர்த்தப்பட்டன.

   அந்நியப்பட்டுப்போன பேருந்து

  அந்நியப்பட்டுப்போன பேருந்து

  பல கலர் போர்ட், தானியங்கி கதவு, டிஜிட்டல் போர்ட், இங்கு நிக்கும், அங்கு நிக்காது, பிரிண்ட் அவுட் டிக்கெட் என நவீன தொழில்நுட்பத்தை மக்களிடத்தில் திணிக்கப்பட்டதன் விளைவு தமிழக மக்களின் வாழ்க்கை முறையோடு நெருங்கியிருந்த பேருந்து அவர்களுக்கு அந்நியப்பட்டுப்போனது. ரயில்களையும், ஷேர் ஆட்டோகளையும் மக்கள் தேடி செல்ல ஆரம்பித்தனர். இதில் குறிப்பிடப்பட வேண்டியது மக்களிடம் அரசு போக்குவரத்து நடத்துனர்களும், ஓட்டுனர்களும் நடந்து கொள்ளும் விதம்.

   கட்சிப்பணிக்கு பேருந்து

  கட்சிப்பணிக்கு பேருந்து

  யார் ஆட்சிக்கு வந்தாலும் கட்சிப்பணிக்கும், சொந்த மாநாட்டிற்கும் அவர்கள் கை வைப்பது என்னவோ தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் தான். அரசு போக்குவரத்து பெட்ரோல் பங்கில் டாங்கை நிரப்பிக்கொள்ள வேண்டியது, அதற்கான பணத்தை நஷ்டத்தில் எழுத வேண்டியது. இப்போது இந்த முறை பரிணாம வளர்ச்சியடைந்து கட்சிப்பணி மட்டுமில்லாது இப்போது அரசு விழாக்களுக்கே அரசு பேருந்துகள் ஓசியில் எடுத்துச் செல்லப்படுகின்றன.

   விரலுக்கு ஏத்த வீக்கம்

  விரலுக்கு ஏத்த வீக்கம்

  தமிழக அரசு போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருந்தாலும், பெருமைக்காக பேருந்துகளை வாங்குவதை அரசு நிறுத்தவே இல்லை. நூற்றுக்கணக்கான பேருந்துகளை வாங்கி குவிக்க வேண்டியது, அதனை இயக்க ஆள்பற்றாக்குறை என பல லட்சம் லஞ்சமாக வாங்கிக்கொண்டு தன் கட்சிக்காரர்களுக்கு வேலைப்போட்டு கொடுப்பது. இதுதான் புதிய பேருந்துகள் வாங்குவதற்கு முதற்காரணமாகவும் மூலக்காரணமாகவும் அமைந்தன.

   போக்குவரத்து கழக அதிகாரிகள்

  போக்குவரத்து கழக அதிகாரிகள்

  தமிழக அரசு போக்குவரத்து கழகம் இந்த நிலைக்கு உள்ளதற்கு பிரதான காரணமாக பார்க்கப்படுவது அந்த கழகத்தின் அதிகாரிகள் தான். அனைத்து லஞ்சமும், முறைகேடும், ஏமாத்து வேலைகளும் ஆரம்பிப்பது இங்கிருந்து தான். ஆட்சியாளர்களின் ஆதரவாளர்களான இந்த அதிகாரிகள், போக்குவரத்து கழகத்திலிருந்து ஆட்சியாளர்கள் அள்ளி எடுக்கும் போது, கழகத்திலிருந்து அதிகாரிகள் கிள்ளி எடுத்துக்கொள்வார்கள். அவர்கள் கிள்ளி எடுத்துக்கொண்டே இருந்ததன் விளைவு தான் போக்குவரத்து கழகத்தின் இவ்வளவு பெரிய ஓட்டை.

   அடமானத்தில் போக்குவரத்து சொத்துக்கள்

  அடமானத்தில் போக்குவரத்து சொத்துக்கள்

  தமிழக அரசு போக்குவரத்து கழகம் பல ஆயிரம் கோடி சொத்துக்கள் தற்போது அடமானத்தில் உள்ளன. அந்த காசில் தான் தற்போது கழகமே நடைபெற்று கொண்டிருக்கிறது. கழக கட்டடங்கள், பணிமனைகள், பேருந்துகள் என அனைத்தும் தற்போது அடமானத்தில் உள்ளது எத்தனை போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு தெரியும் என தெரியவில்லை. அப்படி தெரிந்தால் போராட்டம் என்று தங்கள் தலையிலேயே அவர்கள் மண்ணைத்தூக்கிப் போட்டுக்கொள்ள மாட்டார்கள் என்கிறார்கள் சில கழக அதிகாரிகள். மீட்க முடியாத பாதாளத்தில் விழுந்துவிட்டது தமிழக அரசு போக்குவரத்து கழகம், அதனை காப்பாற்றுவது ஊழியர்கள், அதிகாரிகள், அரசு என்று அனைவரின் வேலையும் தான்.

  நஷ்டத்தை ஆரம்பத்திலே சீர்செய்திருந்தால், சில ஆண்டுகளிலே தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் லாபத்தை பார்த்திருக்கலாம். ஆனால் முன்பே கூறியிருந்தது போல ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் லஞ்சம், முறைகேடு, அலட்சியம், காழ்ப்புணர்ச்சி, பொறுப்பின்மை இப்படி அனைத்தும் சேர்ந்து தான் தமிழக அரசு போக்குவரத்து கழகதின் அஸ்தமனத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளன.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Detailed analysis about who is responsible for the loss of TN Transport Corporation

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  X