For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"கொள்கை" கிலோ என்ன விலை என கேட்கும் விஜயகாந்த் "மாற்று" அரசியலின் "முதல்வர்" வேட்பாளரா?

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக, திமுக எனும் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக கொள்கை-தத்துவார்த்தங்களை பேசுகிற இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள், மதிமுக ஆகியவை கொள்கை என்றால் எத்தனை கிலோ என கேட்கிற விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தியிருப்பது தமிழக அரசியலின் பரிதாப நிலையைத்தான் காட்டுகிறது.

திமுக, அதிமுகவுக்கு மாற்றாக உதயமானதுதான் வைகோவின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம். ஆனால் அந்த இரு கட்சிகளுக்கு ஒரு மாற்று கட்சியாக வைகோவால் மதிமுகவை வளர்த்தெடுக்க முடியவில்லை. மாறாக இரு திராவிட கட்சிகளுடன் மாறி மாறி கூட்டணி வைத்து அதிகபட்சம் 2- 3% வாக்கு வங்கி மட்டுமே இருக்கிற கட்சியாக சுருங்கிப் போனது.

Why PWF announces Vijayakanth as CM Candidate

இடதுசாரிகளும் இதுவரை அதிமுக, திமுகவுடன் கூட்டணி வைத்திருந்தன. 1990களின் தொடக்கங்களில் 10 முதல் 15 எம்எல்ஏக்களைப் பெற்றிருந்த இடதுசாரிகள் கட்டெறும்பாக தேய்ந்து போன நிலையில்தான் மதிமுகவுடன் கை கோர்த்து மக்கள் நலக் கூட்டணியாகினர்.

இதேபோல் 1-2%வாக்கு வங்கி மட்டுமே வைத்திருக்கும் விடுதலை சிறுத்தைகளும் இத்தனை ஆண்டுகாலம் திமுக- அதிமுக கூட்டணியில் இருந்து விட்டு மாற்று அரசியல் என்கிற முழக்கத்துடன் மதிமுக, இடதுசாரிகளுடன் இணைந்திருக்கிறது.

இதில் உச்சகட்ட வேடிக்கை என்னவெனில் ஈழப் பிரச்சனை, கூடங்குளம் விவகாரம், முல்லைப் பெரியாறு அணை என தமிழகத்தின் வாழ்வாதார பிரச்சனைகளில் மதிமுகவும் விடுதலைச் சிறுத்தைகளும் இரட்டை குழல் துப்பாக்கிகள்தான்... ஆனால் இடதுசாரிகளோ மதிமுக- சிறுத்தைகளுக்கு அப்படியே எதிரான நிலைப்பாடு கொண்டவர்கள்.

இருந்தாலும் வைகோவின் வார்த்தைகளில் சொல்வதெனில், வெற்றிக்கான வியூகங்கள் அவ்வப்போது மாறும் என்கிற வகையில் மாற்று அரசியலுக்கான 'கவுரவமான' ஒரு கூட்டணியாக மக்கள் நலக் கூட்டணி கருதப்பட்டு வந்தது... அதாவது இந்த கூட்டணிக்கு அதிமுகவின் பின்புல ஆதரவு இருக்கிறது; அதிமுகவின் பி டீம் என்கிற விமர்சனங்களுக்கு அப்பால்...

ஆனால் இந்த சோ கால்டு "கொள்கையாளர்"கள் கொள்கைன்னா கிலோ என்ன விலை என கேட்கிற தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையை ஏற்று அவரைப் போய் முதல்வர் வேட்பாளராக அறிவித்திருக்கும் காலத்தின் கோலத்தை என்னவென்றுதான் சொல்வதோ?. தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்காக இதுவரை மெனக்கெடல் எதையும் மேற்கொள்ளாத கட்சி இந்த "எதிர்க்கட்சி" தேமுதிக.

தேசியம் என்பதற்கு எதிராகத்தான் திராவிட தத்துவமே முன்வைக்கப்படுகிறது. ஆனால் இந்த தேசியத்தையும் திராவிடத்தையுமே தமது கட்சியின் பெயராக வைத்துக் கொண்டவர் விஜயகாந்த். நாட்டிலேயே விஜயகாந்த் ஒருவரால்தான் திமுக, காங்கிரஸ், பாஜக, இடதுசாரிகள் என சகட்டு மேனிக்கு அனைத்து கட்சிகளுடனும் "கூட்டணி" குறித்துப் பேச முடிகிறது.. !

ஏனெனில் ஆகக் குறைந்தபட்சம் திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், பாஜகவுக்கு இருக்கிற ஒரு அரசியல் பார்வை- கொள்கை என்பது எதுவுமே தேமுதிகவுக்கு என இல்லை என்பதே இந்த "ஆல் ரவுண்ட்" பேச்சுக்கான அடிப்படையாக உள்ளது.

உடனே அதிமுகவின் பொதுச்செயலர் ஜெயலலிதாவுக்கு என்ன தத்துவம் கொள்கை இருக்கிறது என்கிற கேள்வி முன்வைக்கப்படும். 1996-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது தேர்தல் அறிக்கையை வெளியிட்ட ஜெயலலிதாவிடம், பிரிவினையை நாடோம்; கட்டுண்டு வாழோம் என்கிற அதிமுகவின் முழக்கம் எதற்காக எனக் கேட்ட போது, அவர் மாநில சுயாட்சி, உரிமைகள் பற்றி அற்புதமான விளக்கத்தைக் கொடுத்ததை செய்தியாளர்கள் இப்போதும் நினைவு கூறுவர்... ஜெயலலிதாவிடம் ஏதாவது ஒரு கொள்கைப் பார்வையாவது இருந்தது.

ஆனால் விஜயகாந்திடம், தேசியம் வேற... திராவிடம் வேற.. இரண்டையும் ஒன்றாக கட்சி பெயரில் வைத்துள்ளீர்களே? எனக் கேட்டால், நீ என்ன ஜெயா டிவியா? தூக்கி அடிச்சிருவேன் பார்த்துக்கோ என்கிற பதிலைத் தவிர வேறு எதுவும் வந்துவிடாது. அப்படி எகனைக்கு முகனையாக பேசுவதை மட்டுமே கொள்கையாக வைத்திருப்பவர் அவர்.

ஆம் கொள்கையே இல்லை; தேர்தலில் வெல்ல வேண்டும்; ஆட்சி அதிகாரத்தை அனுபவிக்க வேண்டும் என்ற ஒற்றை இலக்கம் கொண்ட அப்பட்டமான பதவி வெறியை மட்டுமே கொள்கையாக கொண்டவர் விஜயகாந்த்.

இங்கே அரசியல் களத்தில் "யாருக்கும் வெட்கமில்லை" "எதிரிக்கு எதிரி நண்பன்" "அரசியலில் நிரந்தர எதிரிகளும் இல்லை நண்பர்களும் இல்லை" என்பதெல்லாம் சகஜமாகிவிட்ட நிலையில் விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக மதிமுக, இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் முன்னிறுத்தியிருப்பது ஆச்சரியம் இல்லைதான்..

ஆனால் நாட்டு விடுதலைக்காக தொழிலாளர் வர்க்க உரிமைகளுக்காக தம்மையே ஒப்படைத்துக் கொண்ட நல்லகண்ணுகளும் சங்கரய்யாக்களும் கூட விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக உச்சரிக்கும் அவலத்தை எண்ணிப்பார்க்கத்தான் முடியவில்லை.

English summary
Ideological parties like left, MDMK and VCK now announced none of Ideology party leader Vijayakanth as CM Candidate for upcoming assembly elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X