ரீலில் ஒன்று, ரியலில் மற்றொன்று.. மக்களை குழப்பும் ரஜினிகாந்த்.. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதா?
Recommended Video

சென்னை: நேற்று காலா டிரைலர் வெளியாகியுள்ள நிலையில், அதில் மக்கள் போராட்டத்தை தூண்டும் விதமாக டயலாக் பேசி அப்ளாஸ் வாங்கும் ரஜினிகாந்த், சில நிமிட இடைவெளியில் வெளியிட்ட தனது கருத்து பதிந்த வீடியோவில், மக்கள் போராட்டம் தொடர கூடாது என்கிறார்.
ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு நேற்று உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி மற்றும் வட்டாட்சியர் அடங்கிய அதிகாரிகள் குழு, ஸ்டெர்லைட் ஆலைக்கு சென்று அதற்கு சீல் வைத்தது.
[Read This: ஸ்டெர்லைட்: இந்த வெற்றி உயிரிழந்த ஆத்மாக்களுக்கு சமர்ப்பணம்- ரஜினி ]
இதையடுத்து இரவு டிவிட்டரில் ரஜினிகாந்த் தனது கருத்தை ஆடியோவாக பதிவு செய்து ஒரு வீடியோவை வெளியிட்டார். ரஜினியின் புகைப்படம் அந்த வீடியோவில் தெரியும் வகையில், பின்னணியில் ரஜினி பேசுவதைபோல அது வெளியிடப்பட்டிருந்தது.

போராட்டம் தொடர கூடாது
அந்த வீடியோவில், "இந்த வெற்றி போராட்டத்தில் உயிரிழந்த ஆத்மாக்களுக்கு சமர்ப்பணம். அப்பாவி மக்களின் ரத்தம் குடிச்ச இந்த மாதிரி போராட்டங்கள் வருங்காலத்தில் தொடர கூடாது என்று, இறைவனை வேண்டுகிறேன்" இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவிக்கிறார். ஆனால் வேடிக்கை என்னவென்றால், சில நிமிட இடைவெளியில் அவர் நடித்து வெளியாக உள்ள காலா படத்தின் டிரைலரும் வெளியானது.

குழப்பம் செய்வதா
அந்த டிரைலரில் குடிசை பகுதி மக்களுக்கான போராளியாக ரஜினிகாந்த் கதாப்பாத்திரம் சித்தரிக்கப்பட்டுள்ளது. அதில் அவர் பேசும் டயலாக் "இந்த உடம்புதான் நமக்கு இருக்கும் ஆயுதம், கூட்டுங்கடா மக்கள" என கூறி போராட்டத்திற்கு அறைகூவல் விடுக்கிறார். நிலம் உனக்கு அதிகாரம், எனக்கு வாழ்க்கை என்றும் உரிமை குரல் எழுப்புகிறார். இரு வீடியோக்களுக்கும் நடுவே எவ்வளவு முரண் பார்த்தீர்களா. இந்த குழப்ப பேச்சுக்கள்தான் ரஜினிகாந்தின் அடையாளமாக இருந்து வருகிறது.

போராட்டம் இன்றி என்ன நடக்கிறது
ரீல் டயலாக்கை விட்டுவிடலாம். அவரின் ரியல் வீடியோவில் சொல்ல வருவதை மட்டும் கவனியுங்கள். எதிர்கால அரசியல்வாதி என்பதால் அவரது பேச்சை கவனித்து நோக்கத்தை அறிய வேண்டியது கடமை என்ற அடிப்படையில் மட்டும் கவனியுங்கள். தனது வீடியோவில் அவர் போராட்டங்கள் எதிர்காலத்தில் தொடரக்ககூடாது என்கிறார். போராடாமல் எல்லாம் கிடைத்துவிடும் நிலை தமிழகத்தில் உள்ளது என்று ரஜினிக்கு யார் சொன்னது.

வெள்ளையர் காலம் முதலே போராட்டங்கள்
100 நாட்களாக தூத்துக்குடி மக்கள் அகிம்சை வழியில்தானே போராடினார்கள். அவர்களை தடியடி நடத்தி கோபப்படுத்தியது யார், கொந்தளிக்க வைத்தது யார், தாக்கத் தூண்டியது யார் என்பது குழந்தைக்கு கூட தெரியும்போது ரஜினிக்கு ஏன் தெரியவில்லை? வெள்ளையர் காலத்தில் கூட காந்தி அகிம்சை வழியில்தான் போராடினார். மக்களும் போராடினார்கள். வெள்ளையர்களின் அடக்குமுறை, ஒடுக்குமுறைகள், தாக்குதல்களால்தானே மக்களும் சில நேரங்களில் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். அப்போது வெள்ளையர்களின் துப்பாக்கி குண்டுக்கு மக்கள் இன்னுயிரை ஈந்தனர். அதற்காக வெள்ளையர்களை எதிர்த்துப் போராடாமல் இருந்திருந்தால் சுதந்திரம் கிடைத்திருக்குமா?

ரஜினி சொல்லியிருக்க வேண்டியது என்ன
ரஜினி உண்மையில் சொல்லியிருக்க வேண்டிய வார்த்தை, இதுபோன்ற மக்கள் போராட்டத்தில் ரத்தம் குடிக்கும் துப்பாக்கிச் சூடுகள் எதிர்காலத்தில் நடைபெறக் கூடாது என்பதாகத்தான் இருந்திருக்க வேண்டும். அல்லது, இப்படி மக்களை போராட தூண்டாத அளவுக்கு அரசுகள் அவர்கள் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும் என கூறியிருக்க வேண்டும். ஆனால் உரிமைகளை தராமல் அரசு இழுத்தடிக்கும்போது, அராஜகத்தை கட்டவிழ்க்கும்போதும், போராட்டமே கூடாது என்று சொல்லக் கூடாது.

மக்களுக்கு எதிராக பேசுவதா
ரஜினி என்ன பேச விரும்பினார் என்பதை ரஜினியே இன்னொரு ஆடியோவில் தெளிவாக விளக்கிப் பேசினால் நன்றாக இருக்கும். அல்லது இதுபோன்ற மக்கள் பிரச்சினைகளில், முக்கியப் பிரச்சினைகளில் மக்களுக்கு எதிராக அவர் கருத்து கூறாமலேயே இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். ஐபிஎல் போராட்டத்தின்போது போலீசாரை மக்கள் தாக்கிவிட்டார்கள் என்று இன்னும் கடுமையான சட்டம் கொண்டுவர வேண்டும் என்று சீறியவர் ரஜினிகாந்த். இப்போது போராட்டம் வேண்டாம் என்று ஆதங்கப்படுகிறார். கருத்து கூறியாக வேண்டியிருக்கே என்று எதையாவது அவர் பேசி மக்களின் புண்ணில் மேலும் விரலை விட்டு ஆட்டாமல் இருந்தால் நல்லது.












Click it and Unblock the Notifications