For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாளை ஜாமீன் மனு, ஒரு வாரத்தில் குற்றப்பத்திரிக்கை ... திடீரென ராம்குமார் தற்கொலை செய்தது ஏன்?

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: இளம்பெண் சுவாதி கொலை வழக்கில் 1 வாரம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சென்னை போலீஸ் திட்டமிட்டிருந்த நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜூன் 24ம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார் மென் பொறியாளர் சுவாதி. இந்தக் கொலை தொடர்பாக நெல்லை மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞரைக் கைது செய்த போலீசார், அவரை சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

ராம்குமாரை புழல் மத்திய சிறையில் வைத்து போலீசார் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தனர். இதேபோல, ராம்குமாரின் கையெழுத்தை பரிசோதித்து பார்க்கவும் போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்தது.

Why Ramkumar commit suicide as his bail plea is coming up tomorrow?

இதனையடுத்து மாஜிஸ்திரேட் கோபிநாதன் முன்பு கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி ராம்குமார் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, மாஜிஸ்திரேட் கோபிநாத், ராம்குமாரிடம் உங்கள் கையெழுத்து மாதிரியை எடுத்து, பரிசோதனை நடக்க உள்ளது, அதற்கு சம்மதிக்கிறீர்களா? என்று கோபிநாத் கேட்டார். உடனே கையெழுத்து பரிசோதனைக்கு நான் சம்மதிக்கவில்லை என்று ராம்குமார் மறுத்தார். மேலும் போலீசார் என் மீது பொய் வழக்கு போட்டுள்ளனர் என்று பரபரப்பு குற்றச்சாட்டையும் அவர் கூறினார்.

அதையடுத்து அரசு உதவி வழக்கறிஞர், சரி நீங்கள் கூறுவதை அப்படியே எழுதி கையெழுத்துப் போட்டுக் கொடுங்கள் எனக் கூறியதும் ''நான் கையெழுத்திட விரும்பவில்லை'' எனக் கூறி நீதிமன்ற ஆவணங்களில் கைப்பட எழுதிக் கொடுத்த ராம்குமார் அதில் கையெழுத்தும் போட்டார். இதனையடுத்து மாஜிஸ்திரேட் ராம்குமாரை மீண்டும் சிறையில் அடைக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

ஜூலை 1ம் தேதி ராம்குமார் கைது செய்யப்பட்ட பிறகு முதல் முதலாக நீதிமன்றத்தில் தன் மீதுள்ள குற்றச்சாட்டை நேரடியாக மறுத்தார். அதே நேரத்தில் இந்த வழக்கை பொறுத்தமட்டில் குற்றத்தை நிரூபிக்க ஏராளமான ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்கள் உள்ளன என்றும் போலீஸ் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

சூளைமேடு மேன்சனில் தங்கியிருந்தபோது ராம்குமார் போட்டுக் கொடுத்த கையெழுத்தும், தற்போது ராம்குமார் போட்டுக் கொடுத்த கையெழுத்தும் ஒன்றிப்போகிறதா என்பதை அவர் கையெழுத்து போட்டதையே ஆதாரமாக தடயவியல் சோதனைக்கு அனுப்பி குற்றச்சாட்டை உறுதி செய்வோம் என்று போலீசார் தெரிவித்தனர்.

ஐ.டி. பெண் ஊழியர் சுவாதி கொலை வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி அந்த கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள ராம்குமாரின் தாயார் புஷ்பம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்தக் கொலையில் பல உண்மைகளை போலீசார் மறைத்துவிட்டனர். வேண்டுமென்றே எனது மகன் ராம்குமாரை குற்றவாளியாக்கியுள்ளனர்.

பெங்களூருவில் சுவாதி பணியாற்றிய இன்ஃபோசிஸ் நிறுவனத் தின் ரகசியங்கள் மற்றும் இந்திய ராணுவத்தின் ரகசியங்களை சுவாதி விற்றதாக பெங்களூருவில் உள்ள தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டுள்ளது பெங்களூரு சென்ற தனிப்படை போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தமிழக போலீசார் இந்த வழக்கை விசாரித்தால் உண்மை குற்றவாளிகள் தப்பிவிடுவர். ஆகவே இந்த கொலை வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ் சுவாதி வழக்கு விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதால் சிபிஐ விசாரணை தேவையில்லை என்று கூறியதோடு ராம்குமார் தாயாரின் மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.

இதனிடையே சுவாதி கொலை வழக்கில் ஒரு வாரத்தில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காவல்துறையினர் முடிவு செய்திருந்தனர். கொலை தொடர்பாக நண்பர் முகமது பிலால் உள்பட 6 சாட்சியங்களின் வாக்குமூலம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதம், ரத்த மாதிரி உள்பட 28 தடயங்களை சமர்ப்பிக்க காவல்துறை முடிவு செய்திருந்தனர். சிசிடிவி காட்சியில் பதிவான உருவத்துடன் ராம்குமார் முகபாவனை ஒப்பீடு நடந்து வருவதாகவும் கூறப்பட்டது.

இந்த கொலையில் ராம்குமார் மட்டுமே குற்றவாளி என்று போலீசார் கூறிவந்த நிலையில் ராம்குமாரின் ஜாமீன் மனு மீதான விசாரணையும் நாளை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் புழல் சிறையில் மின்கம்பியைக் கடித்து ராம்குமார் தற்கொலை செய்து கொண்டுள்ளார். புழல் சிறையில் விசாரணை சிறை எண் 2ல் அடைக்கப்பட்டு இருந்தார் ராம்குமார். இன்று அவர் மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கும் கம்பியைக் கடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார்.

ராம்குமார் இன்று காலை சிற்றுண்டி சாப்பிட்டுள்ளார். மதிய உணவுக்கு அனைவரும் சென்ற பின்னரும் ராம்குமார் செல்லவில்லை. சிறையில் முதலுதவி சிகிச்சை செய்துள்ளனர். மிகவும் ஆபத்தான நிலையில் , அவரை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்றனர். மருத்துவர்கள் ராம்குமார் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக அறிவித்துள்ளார்கள். மின்சாரத்தை தன் உடம்பில் ராம்குமார் பாய்த்துக்கொண்டதாகவும் சிறைத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். ராம்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சுவாதி கொலை வழக்கும், ராம்குமாரின் தற்கொலை வழக்கும் எந்த திசையில் பயணிக்கும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

English summary
There are questions why Ramkumar committed suicide as his bail plea is coming up tomororrow
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X