For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் பாஜகவை காலூன்ற விடக்கூடாது: கருணாநிதி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதாவை விட ஏமாற்றுத் தந்திரம் கற்றவர்கள் பாஜகவினர். அவர்களை தமிழகத்தில் காலூன்ற விடக்கூடாது என்று திமுக தலைவர் கருணாநிதி தனது கட்சியினரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

திமுக பொதுக்குழு கூட்டம் நேற்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய கருணாநிதி, தமிழகத்தில் வலுவாகக் காலூன்றுவதற்கு பாஜக வகுத்துள்ள வியூகங்கள் குறித்தும், அதை முறியிடிப்பதன் அவசியம் பற்றியும் தமது கட்சியினரிடையே எடுத்துரைத்தார்.

அதிமுக ஆட்சிக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தாலும், மத்தியில் ஆளும் பாஜகவிற்கு எதிராக மிகமுக்கியமான தீர்மானத்தினை திமுக பொதுக்குழு நிறைவேற்றியுள்ளது.

இந்த நிலையில் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய கருணாநிதி அதிகம் தாக்கியது பாரதிய ஜனதா கட்சியைத்தான். அவரது உரையைப் படியுங்களேன்.

கழகத்தினுடைய தேர்தல் அடிமட்டத்திலேயிருந்து உயர் மட்டம் வரையிலே நடைபெற்று, அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், பெற இயலாதவர்கள், இருவருமே இணைந்து தமிழகத்திலே திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஜனநாயகத்தைக் காப்பாற்றியிருக்கிறோம், மற்றவர்களுக்கெல்லாம் வழி காட்டியிருக்கிறோம் என்ற பெருமையோடு நாம் இந்த நாளில் இங்கே குழுமியிருக்கிறோம்.

உழைப்பாளி ஸ்டாலின்

உழைப்பாளி ஸ்டாலின்

இங்கே நம்முடைய கழகத்தின் காவலர்களிலே ஒருவராக இருந்து தி.மு.கழகத்தை வழி நடத்திச் செல்லக் கூடிய பக்குவத்தைப் பெற்றுள்ளார் மு.க. ஸ்டாலின். உழைப்பு - உழைப்பு - உழைப்பு... அதற்குப் பெயர் தான் ஸ்டாலின். அவருடைய உழைப்பின் தன்மையை, அந்த உழைப்பின் மேன்மையை, அந்த உழைப்பின் வலிமையை நீங்கள் இன்று உணர்ந்து கொண்டிருக்கிறீர்கள்.

மென்மையும் உண்டு

மென்மையும் உண்டு

அது மாத்திரமல்ல; வன்மை, தன்மையை மாத்திரமல்ல; மென்மையும் அவரிடத்திலே உண்டு. அந்த மென்மை தான் ஒரு இயக்கத்திலே நானும் அல்லது நம்முடைய அருமைப் பேராசிரியர் அல்லது நம்முடைய கழகத்திலே இருக்கின்ற துரைமுருகனைப் போன்றவர்களும், கழகத்திலே இருக்கின்ற பல்வேறு அமைப்பினரும் கட்டிக் காக்க வேண்டிய ஒன்றாகும்.

சபதம் எடுங்கள்

சபதம் எடுங்கள்

எளிமை, இனிமை, மென்மை இவையெல்லாம் ஒன்று சேர்த்து, இந்த இயக்கத்தை எல்லோரும் சேர்ந்து வலிமைப் படுத்த வேண்டியவர்களாக, வளர்க்க வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம். இப்போது நடை பெறுவது 14-வது கழகத் தேர்தலையொட்டி நடைபெறுகின்ற பொதுக்குழு. இந்தப் பொதுக் குழுவில் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய சபதம் என்ன? அது தான் இந்தப் பொதுக்குழுவிலே மிக முக்கியமாகப் பேச வேண்டிய ஒன்றாகும்.

உடல்நிலை சரியில்லை

உடல்நிலை சரியில்லை

என்னைப் பொறுத்தவரையிலே இந்தப் பொதுக்குழுவிலே காலையிலே வந்து கலந்து கொள்ள முடியுமா என்ற நிலைமையிலே தான் இருந்தேன். காரணம், விடியற்காலையில் என்னுடைய உடல்நிலை சீர்குலைந்து, கெட்டு, நானே அச்சத்திற்காளாகி, அதைப் பற்றிக் கவலைப்படாமல் எப்படியும் இந்தப் பொதுக் குழுவுக்கு வந்தே தீர வேண்டுமென்ற அக்கறையோடு, அந்த அடிப்படை உணர்வோடு உங்களையெல்லாம் இங்கே சந்திக்கின்ற அந்த வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன்.

அன்னிய சக்திகள்

அன்னிய சக்திகள்

இந்த இயக்கம் யாரையும் கை விட்டு விடாது. இந்த இயக்கம் எல்லோருக்கும் துணை நிற்கும். எல்லோருக்கும் பெருமை அளிக்கும். எல்லோருக்கும் வாழ்வளிக்கும். எல்லோரையும் நம்முடைய குடும்பத்திலே ஒருவராகக் கருதுவோம். அப்படிப்பட்ட இந்த இயக்கத்தில் தற்போது ஊடுருவுகின்ற அன்னியச் சக்திகளைப் பற்றி நாம் விவாதித்துக் கொண்டிருக்கிறோம்.

யாரை நம்பியும் இல்லை

யாரை நம்பியும் இல்லை

ஏதோ திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலிலே தோற்றுவிட்டது, ஆகவே அதற்கு இனி எதிர் காலம் இல்லை என்று ஆலமரத்தடி ஜோசியனைப் போல, சில அரசியல் கட்சிக்காரர்கள் நமக்கு ஜாதகம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் அந்த ஜாதகத்தை நம்பியல்ல, இன்றைக்கு இந்த இயக்கத்தை நடத்துவது. நாம் நம்மை நம்பித் தான் இந்த இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்.

உயிரை கொடுப்போம்

உயிரை கொடுப்போம்

இது ஆணவத்தோடு சொல்லப்படுகின்ற வார்த்தையல்ல. நம்மை நம்பி இந்த இயக்கத்தை நடத்துகிறோம் என்றால், இந்த இயக்கத்தை வாழ வைப்பதற்காக நாம் நம்முடைய உயிரையும் கொடுப்போம் என்ற அந்த உறுதியை நாம் பெற்றிருக்கின்ற காரணத்தால் தான் இந்த இயக்கத்தை நாம் நடத்துகின்ற அந்தப் பணியிலே தொடர்ந்து நடை போட்டு வருகிறோம்.

அழிக்க முடியாது

அழிக்க முடியாது

தி.மு.கவைப் பொறுத்த வரையில் நான் உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் மறந்து விடக்கூடாது. இந்த இயக்கத்தை அழித்து விடலாம், ஒழித்து விடலாம், பூண்டற்றுப் போகும்படி செய்து விடலாம் என்று எண்ணி யார் யாரோ முயற்சித்தார்கள். அவர்களுடைய முயற்சி எதுவும் பலிக்கவும் இல்லை. பலிக்கப்போவதும் இல்லை. அப்படிப்பட்ட வலிமையான இயக்கம், வல்லமை கொண்ட இயக்கம், இந்த இயக்கத்தை - நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்தை எங்கிருந்தோ வந்தவர்கள், புதிதாக வந்தவர்கள், பெரிய பெரிய விளம்பரப் பதாகைகளைத் தூக்கிக் கொண்டு வந்தவர்கள், அழித்து விடலாமென்று கருதுகிறார்கள்.

பாஜகவினர் வியூகம்

பாஜகவினர் வியூகம்

நாம் நம்முடைய தீர்மானத்திலே இன்றைக்கு கோடிட்டுக் காட்டியிருக்கிறோம். இன்றைய பொதுக் குழு தீர்மானத்தின் தொடக்கத்திலே பா.ஜ.க.வினர், திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சாதாரணமாக கருதி, நம்மை வென்றுவிடலாமென்று அவர்களும் திட்டம் போட்டு, அந்தத் திட்டம் கடைத் தெருவுக்கு வந்து, அந்தத் திட்டத்தை நிறைவேற்ற எத்தனையோ வழிமுறைகளை அவர்கள் கையாண்டும் கூட, அது முடியாது, அது இயலாது என்ற ஒரு நிலையை அவர்கள் கண்டிருக்கிறார்கள்.

தோல்வி காணாத திமுக

தோல்வி காணாத திமுக

ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் எத்தனையோ பேரால், எத்தனையோ போர் முனைகளில், எத்தனையோ கட்சிகளின் தாக்குதலால், எத்தனையோ எதிர்ப்புகளால், பகைவர்களால் சுருண்டு போய் விடும், அழிந்து போய் விடும் என்றெல்லாம் திட்டம் போட்டு, காயை நகர்த்திய போது, அந்தக் காயை வெட்டி நாம் அந்தப் பந்தயத்திலே வெற்றி பெற்றிருக்கிறோமே அல்லாமல் நாம் அதிலே தோல்வி கண்டு விடவில்லை. தோல்வி காணப் போவதும் இல்லை.

ஏமாற்று பேர்வழிகள்

ஏமாற்று பேர்வழிகள்

ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், அவர்கள் முதலிலே திராவிட முன்னேற்றக் கழகத்தை, தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் அழித்து விடலாம், ஒழித்து விடலாம் என்று ஏதேதோ காய்களையெல்லாம் நகர்த்தினார்கள். ஆனால் அது சரிப்பட்டு வரவில்லை என்றதும், வரும்போதே நூற்றுக்கணக்கான திட்டங்களை, நம்மையெல்லாம் வசீகரிக்கக் கூடிய திட்டங்களை, நம்முடைய மக்களுக்கு உரிய திட்டங்கள் என்று நம்பப்படுகின்ற திட்டங்களையெல்லாம் கொண்டு வந்து குவித்து, இன்றைக்கு நாம் ஏமாந்தது தான் மிச்சம்.

ஏமாற்று தந்திரம்

ஏமாற்று தந்திரம்

நான் பச்சையாகவே, பகிரங்கமாகவே, வெளிப்படையாகவே சொல்கிறேன். பா.ஜ.க. ஆட்சி இன்றைக்கு காலூன்றி இருக்கிறது. அப்படி காலூன்றி இருக்கின்ற இந்த ஆட்சியில் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுகின்ற காரியங்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இன்னும் சொல்லப் போனால், ஜெயலலிதாவை விட ஏமாற்றுத் தந்திரம் கற்றவர்கள் மத்தியில் இன்றைக்கு நம்மை ஆளுவதற்காக வந்திருப்பதாகச் சொல்லிக் கொண்டு நோட்டம் பார்க்கிறார்கள். ஆகவே நாம் அவர்களிடத்திலே ஏமாந்து விடக் கூடாது.

விட்டுக்கொடுக்க மாட்டோம்

விட்டுக்கொடுக்க மாட்டோம்

நாம் நிறைவேற்றிய தீர்மானத்திலேயே ஒரு வரி குறிப்பிட்டிருக்கிறோம். என்ன வரி என்றால், தி.மு. கழகத்தைப் பொறுத்தவரையில் நாங்கள் என்றைக்கும், யாருக்கும் அடி பணிந்து எங்கள் கொள்கைகளை விட்டுத் தர மாட்டோம், எங்கள் லட்சியங்களை விட்டுத் தர மாட்டோம். அப்படியொரு நிலைமை ஏற்பட்டால், நாங்களும் சேர்ந்து அழிவோமே தவிர, அந்தக் கொள்கைகளுக்கு அழிவுநேர நாங்கள் சம்மதிக்க மாட்டோம் என்பதை மீண்டும் மீண்டும் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.

அடிமைகளாக மாட்டோம்

அடிமைகளாக மாட்டோம்

ஏனென்றால் நம்முடைய கழகத்திலே உள்ள இந்தக் கொள்கைகள் புனிதமானவை. இந்தக் கொள்கைகள் புடம் போட்டு எடுக்கப்பட்ட தங்கங்கள். அப்படிப்பட்ட கொள்கைகளுக்கு உரிய நாம், அவைகளை யெல்லாம் கை விட்டு விட்டு யாருக்கோ சரணடைந்து, யாருக்கோ சாமரம் வீசி, யாருக்கோ அடிமைகளாகி நம்மை விற்றுக் கொள்ள நாம் தயாராக இல்லை. ஆகவே தான் நான் இங்கே கூடியிருக்கும் நம்முடைய தமிழ்த் தோழர்கள், தமிழ் இயக்கத் தோழர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்நாடு தமிழருக்கே

தமிழ்நாடு தமிழருக்கே

இந்த இயக்கத்தை மேலும் மேலும் வளர்ப்போம் என்ற உறுதியை உங்களுக்கு எடுத்துச் சொல்லி, அந்த உறுதியை அடைவதென்று மானம் காப்போம், தன்மானம் காப்போம், தமிழர்களுடைய மானத்தைக் காப்போம், தமிழன் தமிழன் என்று பேசி, தமிழ்நாடு தமிழருக்கே என்ற அளவிற்கே நம்முடைய விடுதலை இயக்கத்தைக் கட்டிக் காத்து, தமிழ்நாடு என்ற அந்தப் பெயருக்கு ஒரு உணர்வை, உணர்ச்சியை உண்டாக்கியிருக்கிறோம்.

மொழிப்பற்று

மொழிப்பற்று

அந்த உணர்ச்சி பட்டுப் போகாமல், தமிழ்நாடு தமிழருக்கே என்று ஆகா விட்டாலும், அந்தத் தமிழ் நாட்டை உடனடியாகப் பெற முடியாவிட்டாலும், தமிழ்நாட்டைப் பெறுகின்ற அளவுக்கு தமிழன், தமிழ், தமிழ் மொழியைக் காப்பாற்றுகின்ற அளவுக்கு நாம் உறுதி கொண்டவர்களாக - உண்மையான கழகப் பற்றும், நாட்டுப் பற்றும், மொழிப் பற்றும் கொண்டவர்களாக நம்முடைய இயக்கத்தைக் கட்டிக் காப்போம், கட்டிக் காப்போம் என்று சூளுரைப்போம் என்று கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

பாஜகவிற்கு எதிராக தாக்குதல்

பாஜகவிற்கு எதிராக தாக்குதல்

திமுக பொதுக்குழுவில் பாஜகவிற்கு எதிரான தாக்குதலை கருணாநிதி தொடுக்க காரணம் இல்லாமல் இல்லை. நடிகர் நெப்போலியனை கட்சியில் இணைத்த பாஜக அவர் மூலமாக திமுகவினை அதிக அளவில் கட்சியில் கொண்டுவந்து இணைக்கும் அசைன்மென்டை கொடுத்துள்ளதாம். இதை அறிந்துதான் கருணாநிதி தனது அதிரடி தாக்குதலை தொடுத்தார் என்கின்றனர் திமுகவினர்.

English summary
We will not allow the BJP to gain a foothold in Tamil Nadu," Karunanidhi said during the meeting.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X